இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 2:03PM by PIB Chennai
நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் தரமான, குறைந்த கட்டணத்திலான புற்றுநோய் சிகிச்சையை உறுதி செய்வதை மத்திய அரசு முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படி, காப்புரிமை பெற்ற மருந்துகள் உட்பட 137 பட்டியலிடப்படாத புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையில் வர்த்தக வரம்பை 30 சதவீதமாக நிர்ணயித்து தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய விலை வரம்பு 2026 நவம்பர் 9 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. 2026 நவம்பர் 4 வரையிலான நிலவரப்படி, 70 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 120 மருந்துகளுக்கான திருத்தப்பட்ட விலைகளை அறிவித்துள்ளன. இதன் மூலம் அதிகபட்சமாக 96.45 சதவீதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோருக்கு ரூ.3,357.49 கோடி அளவிற்குச் சேமிப்பு ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருந்துகளின் கொள்முதல் விலைக்கும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியைக் குறைக்குமாறு மாநில அரசுகள், பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மொத்த விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் விலையிலிருந்து, நோயாளிகள் மருந்துகளை வாங்கும் விலைக்கு இடையே உள்ள வர்த்தக வரம்பு அதிகமாக இருக்கும்போது, நோயாளிகளின் சிகிச்சைச் செலவு பெருமளவில் அதிகரிக்கிறது. இதனைத் தடுக்கும் வகையில், 2026 மார்ச் மாதத்தின் விநியோகஸ்தர் விலையை அடிப்படையாகக் கொண்டு இந்த வர்த்தக வரம்பு 30 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருந்து நிறுவனங்கள் தங்களின் மருந்து உற்பத்தியை தன்னிச்சையாகக் குறைக்கக் கூடாது என்றும், புதிய விலைப் பட்டியலை மருத்துவமனைகள், மருந்தகங்களில் வெளிப்படையாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புற்றுநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து தரமான சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு விரிவான சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கும், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் சிகிச்சைக்காக மட்டும் இதுவரை 19.5 லட்சம் மருத்துவமனைக் கட்டண அனுமதிகள் வழங்கப்பட்டு, ரூ.2,926 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் 770 சிறப்புப் பிரிவுகளும், 524 புற்றுநோய் பராமரிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 1.86 லட்சத்திற்கும் அதிகமான ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் வாய், மார்பகம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வர்த்தக வரம்புக் கட்டுப்பாடும், அரசு திட்டங்களும் இணைந்து அடித்தட்டு மக்களுக்கும் தரமான புற்றுநோய் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333536®=3&lang=1
***
SS/PD/SU