இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 7:52PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியக் குழுவினரை புதுதில்லி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். 140 கோடி இந்தியர்களின் சார்பாக விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அவர்களின் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், வழிகாட்டிகளின் முக்கிய பங்களிப்பைப் பாராட்டினார். இந்த விளையாட்டு வீரர்கள், ஒரு பிரம்மாண்டமான மேடையில் பதக்கங்களை வென்றது மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
ஐந்து உலக சாதனைகள், ஒன்பது ஆசிய சாதனைகளுடன் இந்தியக் குழுவினர் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். பங்கேற்ற 56 பெண் விளையாட்டு வீரர்களில் 34 பேர் பதக்கங்களை வென்றதையும், நான்கு போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றியதையும், இறுதி நாளில் மட்டும் ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றதையும் குறிப்பிட்ட பிரதமர், போட்டியின் இறுதி வரை தொடர்ந்து வெற்றி பெற அவர்கள் வெளிப்படுத்திய அயராத உறுதியைப் பாராட்டினார். "14 பதக்கங்களிலிருந்து 114 பதக்கங்கள் வரை எட்டப்பட்ட இந்த பயணம், உங்கள் கடின உழைப்பின் உச்சகட்ட விளைவாகும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். விளையாட்டு வீரர்களின் போராட்டங்களும், வெற்றிகளும் ஊக்கமளிப்பதாகக் கூறிய பிரதமர், அவர்களது தனிப்பட்ட பயணங்களுக்கும் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கும் இடையே உள்ள நெருக்கமான ஒற்றுமையைச் சுட்டிக்காட்டினார். “இன்று உங்கள் முயற்சிகளும் நாட்டின் முயற்சிகளும் ஒன்றிணைந்து, தடுக்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளன” என்று திரு மோடி தெரிவித்தார்.
வில்வித்தை, தடகளம், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், மேசைப்பந்து, பேட்மிண்டன், ஜூடோ, பவர்லிஃப்டிங் போன்ற விளையாட்டுகளில் இந்தியா பெற்று வரும் வளர்ந்து வரும் ஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டிய அவர், ஆசிய பாரா விளையாட்டுகளில் முதன்முறையாகப் பங்கேற்ற 61 பேரில் 36 பேர் பதக்கங்களை வென்றதையும், அதில் சந்தீப் தனது முதல் பங்கேற்பிலேயே உலக சாதனை படைத்ததையும் குறிப்பிட்டார். “இளைஞர்களின் இந்த ஈடுபாடு, இன்றைய இந்தியாவின் பிம்பமாகவும், எதிர்கால இந்தியாவின் பிரகடனமாகவும் திகழ்கிறது” என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் நவீன விளையாட்டுக்கொள்கைகள், விளையாட்டு மைதானங்களுக்கு அப்பால் இளைஞர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், விளையாட்டு உள்கட்டமைப்பு கட்டுமானம், உபகரணங்கள் தயாரிப்பு, ஒலிபரப்புப் பொருளாதாரம் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டினார். "இன்று இந்தியாவில் விளையாட்டு தொடர்பான நவீனக் கொள்கைகள், விளையாட்டுத் துறையில் மைதானத்திற்கு வெளியேயும் இளைஞர்களுக்குப் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன" என்று பிரதமர் தெரிவித்தார். தங்கள் வெற்றியைச் கொண்டாடும் அதே வேளையில், 2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் நடைபெறும் போட்டிகளில் சாதனை அளவிலான பங்கேற்பையும் வெற்றிகளையும் உறுதி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு விளையாட்டு வீரர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333281®=3&lang=1
****
SK/BR/SH