இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 2:46PM by PIB Chennai
இந்தியா - தென் கொரியா நாடுகள் இடையேயான கூட்டு கடற்படைப் பயிற்சியில், இந்தியக் கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி பங்கேற்றது.
தென் கொரியாவின் புசான் நகரில் நடைபெற்ற இந்த கடற்படைப் பயிற்சி 29 அக்டோபர் 2026 அன்று நிறைவடைந்தது.
இந்தக் கூட்டுக் கடற்படைப் பயிற்சி, இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையேயான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தியதுடன், ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனையும், பரஸ்பரப் புரிதலையும் மேம்படுத்தியது.
இந்தப் பயிற்சியின்போது, தொழில்முறை விவாதங்கள், கப்பல்களுக்கு இடையேயான சந்திப்புகள், செயல்பாட்டு விளக்கங்கள், துறைசார் நிபுணர்களுடனான அனுபவப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் இந்திய, தென் கொரிய கடற்படைப் பணியாளர்களிடையே பயனுள்ள கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இது, செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டங்களையும், சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்ள வழிவகுத்தன. அதே நேரத்தில், கலாச்சாரப் பரிமாற்றங்களும், விளையாட்டுப் போட்டிகளும், நட்புறவை வளர்த்து, தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்த உதவின.
இந்தப் பயிற்சியின்போது, தொழில்முறை சார்ந்த கலந்துரையாடல்கள் நடைமுறைச் செயல்பாட்டு முறைகளாக மாற்றப்பட்டன. இதில், ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, தென் கொரியக் கடற்படையின் முன்மு தி கிரேட் ஆகிய கப்பல்கள் ஒருங்கிணைந்த வழிசெலுத்தல், ஹெலிகாப்டர் செயல்பாடுகள், கூட்டு கடல்சார் பயிற்சிகளை மேற்கொண்டன. இந்தப் பயிற்சி, கடலில் ஒருங்கிணைந்த பயிற்சியை மேற்கொள்வதற்கும், செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து பரஸ்பரம் சிறந்த புரிதலை வளர்த்துக் கொள்வதற்கும், இரு கடற்படைகளுக்கும் இடையேயான செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது.
இந்தப் பயிற்சி, கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியா - தென்கொரியா நாடுகளிடையே பகிரப்பட்ட உறுதியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இத்தகைய தொடர்புகள் பரஸ்பர நம்பிக்கைக்கு பங்களிப்பதுடன், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பைப் பராமரிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332012®=3&lang=1
***
AD/SV/RJ