இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2026 2:34PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (01.11.2026) புது தில்லியில் உள்ள தல்கதோரா மைதானத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் பங்கேற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ஐத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த விளையாட்டுப் போட்டிகளைத் துணிச்சல், உறுதிப்பாடு, கருணை, வாழ்வின் விலைமதிப்பற்ற கொடை ஆகியவற்றின் கொண்டாட்டம் என்று விவரித்தார். இந்த முக்கியமான முயற்சிக்காக, சிறுநீரகப் பராமரிப்பு அறக்கட்டளை, சர் கங்கா ராம் மருத்துவமனை, சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு ஆகியவற்றுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
தன்னலமற்ற சேவை எனும் இந்தியாவின் நாகரிக நெறியை அவர் எடுத்துரைத்தார். உறுப்பு தானத்தை ஒரு 'மகாதானம்' என்று அவர் விவரித்தார். அதன் மூலம் இழப்பைச் சந்திக்கும்போதும் நம்பிக்கை நிலைத்திருக்கும் என்று அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது 'மனதின் குரல்' உரைகள் மூலம் இந்த விஷயத்திற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதால், இந்தியாவில் உறுப்பு தான இயக்கம் குறிப்பிடத்தக்க உத்வேகத்தைப் பெற்றுள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.
இந்த விளையாட்டுப் போட்டிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்களின் மீள்திறனைக் கொண்டாடுவதாகவும், நவீன மருத்துவத்தின் சக்தியை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மறைந்த நபரின் உறுப்பு தானத்தின் மூலம் எட்டு உயிர்கள் வரை காப்பாற்ற முடியும் என்று அவர் கூறினார். உறுப்பு தானம் குறித்த அதிக விழிப்புணர்வுக்கு அழைப்பு விடுத்த குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், உறுப்பு தானம் குறித்த கட்டுக்கதைகளையும் தவறான கருத்துக்களையும் களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, 570 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களும் கொடையாளர்களும் ஒன்றாக தடாசனம் செய்த உலக சாதனை முயற்சியையும் குடியரசு துணைத்தலைவர் கண்டுகளித்தார். மேலும், கபடி, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளையும் அவர் கண்டுகளித்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331147®=3&lang=1
***
SK/PLM/PD