PIB Backgrounder
azadi ka amrit mahotsav

தொழில்நுட்பங்களின் சங்கமம்: இயல் உலகையும் மெய்நிகர் உலகையும் இணைக்கும் புதிய பரிமாணம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 11:33AM by PIB Chennai

இந்தியாவின் கல்வி, தொழில், படைப்பாற்றல் துறைகளில் மெய்நிகர் தொழில்நுட்பங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய துறையின் வளர்ச்சியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. இதற்கென மும்பையில் தேசிய அளவிலான சிறப்பு மையமாக இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐசிடி) தொடங்கப்பட்டு, கூகுள், மெட்டா, அடோப் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இத்துறையை மேலும் வலுப்படுத்த 15,000 மேல்நிலைப் பள்ளிகள், 500 கல்லூரிகளில் உள்ளடக்கங்கள் உருவாக்க ஆய்வகங்களை அமைக்க 2026-27 மத்திய பட்ஜெட்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் யுபிஐ, ஆதார், டிஜிலாக்கர், பாஷினி போன்ற வலுவான டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள இந்தியா, தற்போது மெய்நிகர் அனுபவங்களை நோக்கிய அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறது. பயனாளர்களின் நேரடி அனுபவத்தை மேம்படுத்தும் விஆர் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கல்வி, மருத்துவம், சுற்றுலா, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவின் மெய்நிகர் தொழில்நுட்ப சந்தை 2023-ல் சுமார் 125.95 கோடி அமெரிக்க டாலரில் இருந்து, 2030-க்குள் 781.87 கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்துறையில், ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே மிக வேகமாக வளரும் சந்தையாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2026 அக்டோபர் 27 முதல் 29 வரை அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் (சிஎஸ்ஐஆர்) சார்பில் நடைபெறவுள்ள வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் (இஎஸ்டிஐசி) தொடர்பான தேசிய மாநாட்டில், இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. கல்வித்துறையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்காக முப்பரிமாண கற்றல் தளங்களை உருவாக்கி வருகின்றனர். சுற்றுலாத் துறையில் கொல்கத்தா இந்திய அருங்காட்சியகம், ஹம்பி, நாலந்தா உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் பார்வையிடும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொலைத்தொடர்புத் துறை சார்பில் உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் கேமிங் துறை 2024-ல் 3.8 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2029-ம் நிதியாண்டிற்குள் 9.2 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறையில் தேசிய அளவிலான பணிகளை ஒருங்கிணைக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது. அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (எவிஜிசி) துறையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழ்நாடும் கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களை ஒன்றிணைத்து சென்னையில் எல்காட் சிறப்பு ஏவிஜிசி - எக்ஸ்ஆர் மையத்தை உருவாக்கி வருகிறது. இத்தகைய தொலைநோக்கு முன்னெடுப்புகள் 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அறிவியல், தொழில்நுட்ப ஆற்றலுக்கு வலுசேர்த்து வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328338&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2328737) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati