PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவில் ராம்சார் தளங்கள் - சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களைப் பாதுகாத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2026 9:43AM by PIB Chennai

ராம்சார் மாநாட்டின் கீழ் இந்தியாவின் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களின் கட்டமைப்பு 2014-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட நான்கு மடங்கு விரிவடைந்துள்ளது. இது 26-லிருந்து தற்போது 103 இடங்களாக வளர்ந்து, 13.87 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. ஆசியாவில் முதலிடத்திலும், உலக அளவில் மூன்றாம் இடத்திலும் உள்ள இந்தச் சூழல் அமைப்புகள், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்து, வெள்ளத்தைத் தணித்து, நிலத்தடி நீரை நிரப்பி, வாழ்வாதாரங்களைத் தக்கவைக்கின்றன. 2017-ம் ஆண்டின் சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு, மேலாண்மை விதிகளை அடிப்படையாகக் கொண்டு, மத்திய அரசு, நீண்டகால சூழலியல் மீள்திறனை உறுதி செய்வதற்காக, நீர்வாழ் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான தேசியத் திட்டம், அமிர்த நீர்நிலைகள் போன்றவற்றின் மூலம் அறிவியல்  அடிப்படையிலான நீர்வள பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்கிறது.

இந்தியாவில் ராம்சார் தளங்கள் — ஒரு பார்வை:

ராம்சார் மாநாட்டின்படி, "சதுப்பு நிலங்கள் என்பவை இயற்கையான அல்லது செயற்கையான, நிரந்தரமான அல்லது தற்காலிகமான, தேங்கிய அல்லது ஓடும், நன்னீர், உவர்நீர் அல்லது உப்புநீரைக் கொண்ட சதுப்பு நிலம், சேற்றுநிலம், கரிசல் நிலம் அல்லது நீர்நிலைகள் ஆகும். நிலத்தையும் நீரையும் இணைக்கும் ஈரநிலங்கள், நன்னீரைச் சேமித்து, நிலத்தடி நீரை நிரப்பி, வெள்ளத்தைத் தடுத்து, மீன்வளத்தையும் விவசாயத்தையும் நிலைநிறுத்துகின்றன. மேலும், அவை வலசைப் பறவைகளுக்கும் செழுமையான பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் புகலிடம் அளித்து, பூமியின் மிகவும் திறன் மிக்க சூழல் அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கின்றன.

உலகளவில், இந்த வாழ்விடங்கள் ஈரநிலங்கள் மீதான மாநாடு அல்லது ராம்சார் மாநாடு எனப்படும் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின்கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இது 1971 பிப்ரவரி 2 அன்று ஈரானின் ராம்சாரில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1975-ல் நடைமுறைக்கு வந்தது. அக்டோபர் 2026 நிலவரப்படி, உலகளவில் 2,536- க்கும் மேற்பட்ட ராம்சார் தளங்கள் உள்ளன

ஏராளமான சதுப்பு நிலங்களைக் கொண்ட நாடான இந்தியா, 1982 பிப்ரவரி 1 அன்று இந்த ராம்சார் மாநாட்டு அமைப்பில் இணைந்தது. அன்று முதல் அது தனது ராம்சார் கட்டமைப்பை இந்தியா விரிவுபடுத்தி வருகிறது. 2014-ல் வெறும் 26 தளங்களாக இருந்த நிலையில், தற்போது நாட்டில் 103 ராம்சார் தளங்கள் உள்ளன. இது கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்வாகும்.

ராம்சார் தளங்களைப் புரிந்துகொள்ளுதல்:

ராம்சார் தளம் என்பது ராம்சார் மாநாட்டின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலமாக அறிவிக்கப்பட்ட ஒரு ஈரநிலமாகும். இந்தத் தளங்கள் அவற்றின் சூழலியல், தாவரவியல், விலங்கியல், ஏரியியல் அல்லது நீரியல் முக்கியத்துவத்திற்காக அங்கீகரிக்கப்படுகின்றன. ராம்சார் மாநாடு மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது. அவை: அனைத்து சதுப்பு நிலங்களையும் விவேகத்துடன் பயன்படுத்துதல், ராம்சார் தளங்களை அறிவித்து திறம்பட நிர்வகித்தல், சதுப்பு நிலப் பாதுகாப்பில் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவையாகும்.

சதுப்பு நிலம் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

இந்தியாவில், மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் பொருத்தமான சதுப்பு நிலத்தை அடையாளம் காண்பதில் இருந்து இந்த செயல்முறை தொடங்குகிறது. பின்னர், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதலை ஒருங்கிணைத்து, அந்த முன்மொழிவை ராம்சார் செயலகத்திற்கு அனுப்புகிறது.

ஒரு சதுப்பு நிலம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலமாகத் தகுதிபெற, அது ஒன்பது அளவுகோல்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது பூர்த்தி செய்ய வேண்டும். இந்த அளவுகோல்கள், ஈரநில வகைகள், உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ராம்சார் தளங்களின் எண்ணிக்கை:

இந்தியாவின் ராம்சார் தளங்கள் உயரமான மலை ஏரிகள், ஆற்றுச் சமவெளிகள், சதுப்புநிலக் காடுகள், பவளப்பாறைகள், கிராமக் குளங்கள், நகர்ப்புற சதுப்பு நிலங்கள் எனப் பரந்துள்ளன. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 20 ராம்சார் தளங்களும், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 14 தளங்களும் உள்ளன.

சூழலியல் முன்னுரிமைகளை சமூகங்களின் தேவைகளுடன் இணைப்பதன் மூலம், இந்தியா ஈரநில மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளக்கிறது. இதன்மூலம், இந்தச் சூழல் அமைப்புகள் நீண்ட காலத்திற்கு சிறந்த திறன் மிக்கவையாகவும் பாதுகாக்கப்பட்டவையாகவும் இருப்பதை உறுதிசெய்ய முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்  குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328132&reg=48&lang=2

***

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328197) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati