இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2026 3:34PM by PIB Chennai
அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (24.10.2026) தில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கான உலகின் முதல் காற்று மாசுபாடு பகுப்பாய்வு மையத்தைத் திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த வளிமண்டல வேதியியல், ஏரோசல் நச்சுத்தன்மை பகுப்பாய்வு ஆய்வகம் என்று அழைக்கப்படும் இந்த மையம், காற்று மாசுபாடு குறித்து உடனடி தகவல்களை அறியும் வசதியைக் கொண்டுள்ளது.
இது உலகில் முதல் வகையான ஒருங்கிணைந்த வசதி என்று விவரித்த அமைச்சர், இந்த மையமானது, காற்றின் தர மதிப்பீட்டை வெறும் மாசுபாட்டு அளவுகளைப் பதிவு செய்வதோடு நின்றுவிடாமல், மாசுபாடுகளின் காரணம், அவற்றின் மூலங்கள், அவற்றின் சார்புப் பங்களிப்புகள், அவற்றின் சுகாதார விளைவுகள் ஆகியவற்றை அடையாளம் காணும் என்று கூறினார். அதே நேரத்தில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க உதவும் வகையில் தகவல்களையும் முன்கூட்டிய கணிப்புகளையும் இது வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் காற்றின் தரத்தை முன்னறிவிப்பதிலும் பகுப்பாய்வு செய்வதிலும் இந்தியா கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது என்று அவர் கூறினார். வாகனப் புகை, தொழிற்சாலை மாசுகள், பயிர்க் கழிவுகளை எரித்தல், கட்டுமானத் தூசி, சாலைத் தூசி, சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் மாசுபடுத்திகள் உள்ளிட்ட காற்று மாசுபாட்டின் பல்வேறு மூலங்களை வேறுபடுத்தி அறிய இந்த மையம் விஞ்ஞானிகளுக்கு உதவும் என்று அவர் தெரிவித்தார். இந்த மூலங்களின் சார்புப் பங்களிப்பை மதிப்பிடுவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தெந்த நடவடிக்கைகள் மோசமான காற்றின் தரத்திற்குக் காரணமாகின்றன என்பதையும், எங்கு நடவடிக்கை எடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள இந்த மையம் உதவும் என்று அவர் கூறினார்.
அரசு நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், காற்று மாசுபாட்டை ஒரு துறை மட்டும் தனித்துச் செயல்படுவதன் மூலம் தீர்க்க முடியாது என்று கூறினார்.
ஐஐடிஎம் நிறுவனத்தின் தில்லி கிளையில், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் டி. சீனிவாச குமார், ஐஐடிஎம் இயக்குநர் டாக்டர் ஏ. சூர்யசந்திர ராவ், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் மகாபாத்ரா ஆகியோர் முன்னிலையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327957®=3
****
AD/PLM/RJ