இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 11:24AM by PIB Chennai
வேளாண் துறையையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையையும் இணைக்கும் ஒரு புதுமையான அணுகுமுறையாக வேளாண் சூரிய மின்சக்தி உற்பத்தி திகழ்கிறது. ஒரே நிலத்தில் பயிர் சாகுபடியுடன் சூரிய மின்சக்தி உற்பத்தியையும் இணைக்கும் இந்த நவீன முறை, விவசாயிகளின் வருமானத்தைப் பன்மடங்கு பெருக்குவதுடன் இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கும் வழிவகுக்கிறது. உணவு உற்பத்தி, சூரிய மின்சக்தி உற்பத்தி ஆகிய இரண்டையும் ஒருங்கிணைப்பதன் மூலம் நிலப் பயன்பாட்டுத் திறன் மேம்படுத்தப்பட்டு, வேளாண் நிலங்களின் நிலைத்தன்மையும் கிராமப்புறப் பொருளாதாரமும் வலுப்பெறுகின்றன.
இந்தியாவில் சுமார் 46.1 சதவீத மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண் துறையின் மொத்த மதிப்பு கூட்டல் 2025-26-ம் ஆண்டில் ரூ.52.08 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பரப்பளவான 30.696 கோடி ஹெக்டேரில் சுமார் 55 சதவீதம் விவசாய நிலமாக உள்ளதால், வேளாண் நடவடிக்கைகளுடன் சூரிய மின்சக்தி உற்பத்தியை இணைப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. பயிர் சாகுபடி பரப்புக்கு மேலே அல்லது வரிசைகளுக்கு இடையே குறிப்பிட்ட உயரத்தில் பொருத்தப்படும் சூரிய மின்சக்தி பேனல்கள் தடையற்ற சாகுபடிக்கு வழிவகுப்பதுடன், கடுமையான வெப்பத்திலிருந்து பயிர்களைப் பாதுகாத்து மண்ணின் ஈரப்பத இழப்பையும் குறைக்கின்றன. உபரி மின்சாரத்தை மின்கட்டமைப்பிற்கு விற்பனை செய்வதன் மூலம் ஓராண்டில் ஏக்கருக்கு ரூ.60,000-லிருந்து ரூ.1 லட்சத்திற்கும் மேல் வருமானம் உயர வாய்ப்புள்ளது.
புதுதில்லியில் 2026 அக்டோபர் 21 முதல் 23 வரை நடைபெறும் 7-வது சர்வதேச வேளாண் சூரிய மின்சக்தி உற்பத்தி மாநாடு, இத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு உலகளாவிய தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இந்தியாவில் 2025 ஆகஸ்ட் நிலவரப்படி 37.54 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட 36 வேளாண் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் 3,000 கிகாவாட் முதல் 14,000 கிகாவாட் வரை எட்டக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 50 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன. தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
விவசாயத்தில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை விரிவுபடுத்த ரூ.34,422 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் விவசாயிகளுக்கான சூரிய சக்தி திட்டத்தை 2019-ம் ஆண்டு மத்திய அரசு தொடங்கிவைத்தது. தேசிய சூரிய ஆற்றல் நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் இயங்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து வேளாண் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான சிறப்பு மையத்தை அமைத்து 100 கிலோவாட் அளவிற்கான முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மேலும் மகாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பாசனத் தேவைக்கு பகல்நேர மின்சார விநியோகம், சூரியசக்தி பம்புகள் அமைத்தல் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. கிராமப்புற மேம்பாட்டையும் தூய்மை எரிசக்தி இலக்குகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் தொலைநோக்குப் பார்வைக்கு இத்தகைய திட்டங்கள் வலுசேர்க்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327125®=3&lang=1&_gl=1
***
SS/PD/SH