பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காணொலி வாயிலாக நடைபெற்ற 20-வது வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2026 1:59PM by PIB Chennai

என் அன்புக்குரிய இளம் தோழர்களே,

நாட்டில் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளது. இந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இன்று ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சி வந்துள்ளது. இன்று, தேசம் முழுவதும் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசு பணிக்கான பணி நியமனக் கடிதங்களைப் பெறுகின்றனர். இன்று நீங்கள் அடைந்துள்ள இந்த வெற்றிக்குப் பின்னால் உங்கள் கடின உழைப்பு மட்டுமல்ல; உங்கள் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அர்ப்பணிப்பும் உள்ளது. உங்கள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையின் இந்தப் புதிய தொடக்கத்திற்கு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று தேசம் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் இந்திய அரசுப் பணியில் இணைகிறீர்கள். இதில் உங்களைப் போன்ற இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் அரசுப் பணியில் சேவையாற்றும்போது, வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு முடிவையும் எடுக்க வேண்டும். இளைஞர்களாகிய உங்களுக்கு, மற்ற இளைஞர்களின் மீதும் சிறப்பான பொறுப்பு உள்ளது. நமது இளைஞர்களின் திறமையும் ஆற்றலும் உலகம் முழுவதின் நம்பிக்கையை எவ்வாறு வென்றுள்ளன என்பதை நீங்கள் காண முடியும். நமது புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர் சக்தியிடம் உலகம் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவடைந்தது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு என்பது அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பாக மட்டும் இருக்கக்கூடாது என்பதே இந்தியாவின் முயற்சியாகும். நமது தொழில்முனைவோர், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் இந்தக் கூட்டாண்மையில் தீவிரமாகப் பங்கேற்பவர்களாக மாற வேண்டும். இந்த தொலைநோக்குப் பார்வையுடன், பிரிக்ஸ் இணைப்பு மற்றும் பிரிக்ஸ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் ஒத்துழைப்பு இணையதளம் போன்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

இந்திய இளைஞர்களின் வலிமைக்கான மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு நமது புத்தொழில் நிறுவனங்களின் சூழலியலில் காணப்படுகிறது. இன்று உலகின் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில் நிறுவனச் சூழலியலை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக் கதை இனி பெரிய நகரங்களை மட்டுமே சார்ந்ததாக இல்லை. இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள புத்தொழில் நிறுவனங்களில் ஏறத்தாழ பாதி இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளன. இதன் பொருள், கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இந்தியாவின் புதிய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றனர். சிறிய நகரங்களைச் சேர்ந்த நமது இளைஞர்கள் தங்களது சிந்தனைகளில் பணியாற்றி, புதிய நிறுவனங்களை உருவாக்கி, மற்ற இளைஞர்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

நண்பர்களே,

தனியார் துறையிலும் புதிய வேலைவாய்ப்புகள் வேகமாக அதிகரிக்க வேண்டும் என்பதே நமது முயற்சியாகும். இந்த தொலைநோக்குப் பார்வையுடன், பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. இதன் மூலம், ஏறத்தாழ 2 கோடி இளைஞர்கள் முதன்முறையாக வேலைவாய்ப்புச் சந்தையில் இணைய வாய்ப்பு பெறுவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், முதன்முறையாக வேலை பெறும் இளைஞர்களுக்கு அரசு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் அரசு ஊக்கம் அளித்து வருகிறது. அதாவது, தேசத்தில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக அரசு அனைத்து முனைகளிலும் செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக வேண்டுமென்றால், நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டும், முதலீடுகள் அதிகரிக்க வேண்டும், புதிய தொழில்கள் தொடங்கப்பட வேண்டும், புதிய துறைகள் விரிவடைய வேண்டும். இன்று வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருந்தது. முதலீடு ஏறத்தாழ 12 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் தர மதிப்பீட்டை உயர்த்தி வருகின்றன. உலகம் பல்வேறு நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொண்டு வரும் நேரத்தில்தான் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னால், கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களின் பெரும் பங்களிப்பு உள்ளது. நீங்கள் அரசுப் பணியில் இருக்கும் காலத்திலும், சீர்திருத்தங்களை மேலும் விரைவுபடுத்துவதற்குத் தொடர்ந்து பாடுபட வேண்டும். வரி மற்றும் விதிமுறை இணக்க நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, தொழில் செய்வதை எளிதாக்குவதை மேம்படுத்துவது, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, புதிய கண்டுபிடிப்புகளுக்காக புதிய துறைகளைத் திறப்பது அல்லது வாழ்க்கையை எளிதாக்குவது என அனைத்து நிலைகளிலும் சீர்திருத்தப் பயணம் முழு வேகத்தில் தொடர்ந்து முன்னேற வேண்டும். தற்போதும், வருங்கால ஆண்டுகளிலும் இதைச் செயல்படுத்துவதில் அரசுப் பணியாளர்களாகிய உங்களுக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது.

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன்பு நான், சூரியன் நமதாக இருக்க வேண்டும்; கடல் நமதாக இருக்க வேண்டும். படகு நமதாக இருக்க வேண்டும்; மாலுமியும் நம்மவராக இருக்க வேண்டும். அலைகளின் மீது வெற்றியைப் பதிவு செய்யும் துணிச்சலும் நம்முடையதாக இருக்க வேண்டும் எனக் கூறினேன். இன்று இந்திய இளைஞர்கள் இந்தத் துணிச்சலுடன் முன்னேறி வருகின்றனர். இப்போது, இந்திய அரசுப் பணியில் சேவையாற்றும்போது, நாட்டின் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப உங்கள் கடமைகளை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும். நான் மீண்டும் உங்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், ஒரு கோப்பில் நீங்கள் இடும் ஒவ்வொரு கையெழுத்தும், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் பணியாற்றும் காலத்தில், இளைஞர்களின் பாதையில் உள்ள தடைகள் அகற்றப்படுவதையும், அவர்களின் சிந்தனைகள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதையும், புதிய கண்டுபிடிப்புகள் அதிகரிப்பதையும், முதலீடுகள் அதிகரிப்பதையும், முதலீடுகள் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதையும் உறுதி செய்ய வேண்டும்.

நண்பர்களே,

இப்போது நீங்களே அரசு நிர்வாக அமைப்பின் ஒரு பகுதியாக மாறுகிறீர்கள். எனவே, நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களையோ அல்லது உங்கள் பெற்றோர் எதிர்கொண்ட சிரமங்களையோ மற்ற இளைஞர்கள் எதிர்கொள்ளாத வகையில் நீங்கள் செயல்பட வேண்டும். உங்கள் பெற்றோர் அனுபவித்த துயரங்கள், நீங்கள் அனுபவித்திருக்கக்கூடிய சிரமங்கள் ஆகியவற்றை இனி நமது நாட்டின் எந்தக் குடிமகனும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கக்கூடாது. அரசு நிர்வாக அமைப்பில் நீங்கள் நுழைந்தவுடன் செய்ய வேண்டிய பணி இதுதான்.

நண்பர்களே,

இன்று நாட்டின் ஒவ்வொரு துறையிலும் மிக வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தொடர்ந்து கற்றுக்கொண்டு வந்ததன் மூலம் நீங்கள் இங்கு வந்தடைந்துள்ளீர்கள். இனி இங்கிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கான புதிய பயணம் தொடங்குகிறது. உங்கள் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களையும் புதிய நடைமுறைகளையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே கடமை இயக்கம் உங்களுக்கு உதவுகிறது. இன்று 1.7 கோடிக்கும் அதிகமான அரசுப் பணியாளர்கள் ஐஜிஓடி  கடமை இணையதளத்துடன் இணைந்துள்ளனர். உங்களைப் போன்ற புதிய தோழர்களுக்காக, கடமை இயக்கம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களை நீங்கள் எந்த அளவுக்கு மேம்படுத்திக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு நாட்டின் குடிமக்களுக்கு நீங்கள் சிறப்பாக சேவையாற்ற முடியும்.

நண்பர்களே,

நீங்கள் எப்போதும் இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். அரசின் உண்மையான வலிமை என்பது நாட்டின் குடிமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே. நீங்கள் எந்த அமைச்சகத்தில் இருந்தாலும், எந்தத் துறையில் இருந்தாலும், உங்கள் பணி ஏதோ ஒரு வகையில் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும். வயதான ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் உங்கள் பணியின் காரணமாக அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். ஒரு மாணவருக்கான கல்வி உதவித்தொகை உங்கள் பொறுப்பைச் சார்ந்திருக்கலாம். ஒரு விவசாயிக்கான வசதி உங்கள் துறையின் மூலம் சென்றடையலாம். ஏதாவது ஒரு குடிமகனைப் பொறுத்தவரை, நீங்கள் அரசின் பிரதிநிதியாக இருக்கலாம். உங்கள் நடத்தை, உங்கள் உணர்வுபூர்வமான அணுகுமுறை, உங்கள் திறன், உங்கள் நேர்மை ஆகிய அனைத்தும் அந்தக் குடிமகன் அரசின் திட்டங்களை எவ்வாறு அனுபவிக்கிறார் என்பதைத் தீர்மானிக்கும்.

எனவே, நண்பர்களே,

அரசுப் பணியில் நமது தாரக மந்திரம் — “குடிமக்களே இறைவன்; குடிமக்களே இறைவன்” என்பதாக இருக்க வேண்டும். குடிமக்களுக்குச் சேவை செய்வது தேசத்திற்குச் சேவை செய்வதாகும். ஒரு குடிமகனின் வாழ்க்கையை உங்கள் பணி எளிதாக்கும்போது, உங்கள் வெற்றியும் அதைவிடப் பெரியதாக இருக்கும். நீங்கள் எங்கு இருந்தாலும், எந்தத் துறையில் இருந்தாலும், அர்ப்பணிப்புடனும் சேவை உணர்வுடனும் உங்கள் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

***

(Release ID: 2312354)

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327186) வருகையாளர் எண்ணிக்கை : 14