பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழல் எதிர்காலம் மற்றும் காலநிலை இயக்கவியல்" சர்வதேச மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2026 1:09PM by PIB Chennai

இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், மத்திய அமைச்சரவை சக உறுப்பினர் பூபேந்தர் யாதவ், இந்திய தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா, இந்த அரங்கில் வீற்றிருக்கும் சான்றோர்கள், பெரியோர்களே, தாய்மார்களே!

நூற்றாண்டுகளாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களில் இந்தியா உலகிற்கு வழிகாட்டி வருகிறது. அந்தச் சிந்தனை அர்ப்பணிப்பு மற்றும் நமது கலாச்சார அனுபவங்களின் அடிப்படையில், நவீன காலநிலை சவால்களுக்கு இந்தியா தற்போது தீர்வுகளையும் வழங்கி வருகிறது; அதே வேளையில், மனிதகுலத்தின் கூட்டு முயற்சிக்கும் அழைப்பு விடுக்கிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த மாநாடு அந்தப் பணியை முன்னோக்கி எடுத்துச் செல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்நிகழ்ச்சிக்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும், இதனுடன் தொடர்புடைய அனைத்துச் சான்றோர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கார்பன் உமிழ்வுக்கான பொறுப்பு வளரும் நாடுகளின் மீது தவறாகச் சுமத்தப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 'க்ளோபல் சவுத்' எனப்படும் வளர்ந்து வரும் தென்னக நாடுகளைச் சேர்ந்த எனது தோழர்கள் பலர் இங்கு வருகை தந்துள்ளனர். ஆனால், வரலாற்றுப்பூர்வமான உண்மை என்னவென்றால், இன்றளவும் இந்தியாவின் தலா கார்பன் உமிழ்வு உலகளாவிய சராசரியில் பாதியை விடக் குறைவாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளில், தலா கார்பன் உமிழ்வு இந்தியாவை விட ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. ஆம், ஆறு மடங்கு அதிகம்!

இந்த உண்மையைச் சர்வதேச மேடைகளில் இந்தியா உறுதியாக முன்வைத்து வருகிறது. ஒவ்வொரு இந்தியரிடமும் நான் கூறுவது இதுதான் – உங்கள் ஆற்றலையும் உலகிற்கு வெளிப்படுத்துங்கள். நமது பாரம்பரியங்களையும் அவற்றின் சக்தியையும் உலகிற்கு முன்பாக நாம் எடுத்துரைத்துள்ளோம்.

இதே விஷயங்களின் அடிப்படையில், பாரிஸில் நடைபெற்ற சிஓபி-21 மாநாட்டின் போது, 'கன்வினியன்ட் ஆக்சன் – கன்டினியூட்டி ஃபார் சேஞ்ச்' (Convenient Action – Continuity for Change) என்ற புத்தகத்தை நாங்கள் வெளியிட்டோம். உலக நாடுகளை ஒன்றிணைத்து அழைத்துச் செல்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய அளவுகோல்களை நாம் நிறுவி வருகிறோம்.

‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் தொகுப்பு’ (One Sun, One World, One Grid) தொலைநோக்குத் திட்டமாக இருந்தாலும் சரி, சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு (ஐஎஸ்ஏ), பேரழிவுத் தடுப்பு உள்கட்டமைப்பு கூட்டமைப்பு (சிடிஆர்ஐ), உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு சர்வதேச புலி இனங்களின் கூட்டமைப்பு, அல்லது சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை என எதுவாக இருந்தாலும் இந்த ஒவ்வொரு தளமும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த இந்தியாவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் மேடையாக அமைந்து வருகின்றன.

நண்பர்களே,

இன்றைய இந்தியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தனது பண்டைய சிந்தனைகளை நவீன தொலைநோக்குப் பார்வையுடன் இணைத்து முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான ஒவ்வொரு துறையிலும் இந்தியா அசாதாரணமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நமது முக்கியக் கவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மீதே இருந்துள்ளது; இது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரும் பங்கை ஆற்றியுள்ளது. ஜி20 அமைப்பிலேயே - ஜி20-இன் பெரும் தலைவர்கள் முன்னிலையிலேயே நான் இதைச் சொல்கிறேன் .  பாரிஸில் நடைபெற்ற சிஓபி-21 உச்சிமாநாட்டில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே நிறைவேற்றிய ஒரே நாடு இந்தியாதான். நான் குறிப்பிடும் ஹிந்துஸ்தானின் ஆற்றல் இதுவேயாகும். புதைபடிவமற்ற எரிபொருள், சூரிய ஆற்றல் திறன், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துதல் என அனைத்து அளவுகோல்களிலும் இந்தியாவின் செயல்பாடு இன்று உலகம் முழுவதும் நேர்மறையான விவாதப் பொருளாக மாறியுள்ளது. புள்ளிவிவரங்களைப் பாருங்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் சுமார் 2 கிகாவாட்டாக மட்டுமே இருந்தது. இங்கு வழக்கறிஞர்கள் இருந்தால் தயவுசெய்து இந்த புள்ளிவிவரங்களைக் குறித்துக் கொள்ளுங்கள், அவை பயன்படலாம். இன்று இது 160 கிகாவாட்டைத் தாண்டியுள்ளது. 12 ஆண்டுகளில் 2 கிகாவாட்டிலிருந்து 160 கிகாவாட்! ‘பிரதமரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய வீடுகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்தின்’ கீழ் வீடுகளையே சூரிய ஆற்றல் மின் உற்பத்தியின் மையங்களாக மாற்றும் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இத்திட்டத்தின் கீழ், 50 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் ஏற்கனவே கூரைமீது சூரியமின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது பல நாடுகளின் மொத்த வீடுகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இதற்காக மத்திய அரசு ஒரு வீட்டிற்கு 80,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கியுள்ளது. ‘பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மாபெரும் இயக்கத்தின் கீழ், 30 லட்சம் விவசாயிகளின் நிலங்களில் மத்திய அரசு சூரியசக்தி பம்புகளை அமைத்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு’ என்ற லட்சியத் திட்டத்தையும் நாங்கள் நிறைவு செய்துள்ளோம். இதுமட்டுமின்றி, வீடுகளில் மின்சாரத்தைச் சேமிப்பதில் எல்இடி பல்புகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. வீடுகளுக்குக் கோடிக்கணக்கான எல்இடி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளின் பலன்கள் இன்று நம் முன்னே உள்ளன. சூரிய ஆற்றல் மூலம் மட்டுமே, கிட்டத்தட்ட 20 கோடி  டன் கார்பன் உமிழ்வைத் தடுப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

நண்பர்களே,

சூரிய ஆற்றலுடன் சேர்த்து, தூய்மையான எரிசக்தி சார்ந்த பிற துறைகளிலும் இந்தியா பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் மும்மடங்காக உயர்ந்துள்ளது. நீர்மின் உற்பத்தியின் திறனும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. தற்போது அணுமின் உற்பத்தியிலும் நாடு வேகமாகப் பணியாற்றி வருகிறது. சுற்றுச்சூழல் குறித்து நீண்ட உரைகளை ஆற்றுபவர்கள், நாம் அணுமின் உற்பத்திப் பணிகளை முன்னெடுக்கும் போது, அதைத் தடுப்பதற்காக நீதிமன்றங்களில் போய் நிற்பார்கள். இத்துறையில் தனியார் நிறுவனங்களைக் கொண்டுவருவதற்கான வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளின் காரணமாக, இன்று இந்தியாவின் புதைபடிவமற்ற எரிசக்தித் திறன் கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. நிலக்கரியைத் தூய்மையான முறையில் பயன்படுத்துவதற்காக, நிலக்கரி வாயுவாக்கல் போன்ற தொழில்நுட்பங்களையும் இந்தியா ஊக்குவித்து வருகிறது.

நண்பர்களே,

தூய்மையான போக்குவரத்து மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளிலும் இந்தியா இப்போது அதிவேகமாகச் செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்புதான் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இதுதான் உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலாகும். இது தூய்மையான போக்குவரத்தின் புதிய சகாப்தத்திற்கு வித்திட்டுள்ளது.

நண்பர்களே,

கடந்த 12 ஆண்டுகளில் நமது நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 950 மடங்கு அதிகரித்துள்ளது. ஆம், 950 மடங்கு! 2014 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆண்டில், இந்தியாவில் 3,000-க்கும் குறைவான மின்சார வாகனங்களே விற்பனையாகியிருந்தன. ஆனால் கடந்த ஆண்டில், இந்தியாவில் கிட்டத்தட்ட 25 லட்சம் (2.5 மில்லியன்) மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம், மின்சார வாகனப் புரட்சிக்கான வாய்ப்பை இந்தியா முழு ஆற்றலுடன் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதும், இது சுற்றுச்சூழலுக்கும் பெரும் நன்மையளிக்கிறது என்பதும் தெளிவாகிறது.

நமது தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் கொண்டுவரப்பட்டுள்ள நவீன பாஸ்ட்-டேக் நடைமுறைகள், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்துள்ளன. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் நிகழ்ந்து வந்த எரிபொருள் விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

2014 ஆம் ஆண்டு வரை, நமது நாட்டின் வெறும் 5 நகரங்களில் மட்டுமே 250 கிலோமீட்டருக்கும் குறைவான மெட்ரோ ரயில் பாதை இருந்தது. இங்குள்ள வழக்கறிஞர்கள் இந்தப் புள்ளிவிவரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். 2014-க்கு முன் 5 நகரங்களில் மட்டுமே 250 கிலோமீட்டருக்கும் குறைவாக இருந்தது. ஆனால் இன்று, 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. மேலும், 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான மெட்ரோ இரயில் பாதையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

நண்பர்களே,

ரயில்வே துறையில் கிட்டத்தட்ட 100 சதவீத மின்மயமாக்கல் எட்டப்பட்டுள்ளதன் மூலம், பல பில்லியன் லிட்டர் டீசல் எரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது; சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் தான், 3,000 கிலோமீட்டர் நீளமுள்ள பிரத்யேக சரக்கு வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் இயங்கும் ஒவ்வொரு ரயிலும், நூற்றுக்கணக்கான லாரிகளின் சுமையை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்கிறது. இரட்டை அடுக்கு சரக்கு பெட்டக ரயில்களின் இயக்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும். இது சுற்றுச்சூழலுக்கு எந்த அளவிற்குப் பெருமளவில் உதவுகிறது என்பதை நீங்கள் ஊகிக்க முடியும்.

நண்பர்களே,

இன்று நாட்டில் சுமார் 5,000 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்வழிகளில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த போக்குவரத்து முறையாகும். இந்த நீர்வழிகளில் இயங்கும் ஒரு சாதாரண உள்நாட்டுப் படகு, ஒரே பயணத்தில் பல பத்து லாரிகளின் சுமையை ஏற்றிச் செல்கிறது. இதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பெரிதும் உதவுகிறது.

நண்பர்களே,

போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் மட்டுமே, நமது வளர்ச்சி வேகமானது மட்டுமல்லாமல், நீடித்த நிலைத்தன்மை கொண்டதும் கூட என்பதற்குச் சான்றாகும்.

நண்பர்களே,

இன்று, கோடிக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், நீர் பாதுகாப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பணிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. நாட்டில் 70,000-க்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

‘கேட்ச் தி ரெய்ன்’ (மழைநீரைச் சேகரிப்போம்) பிரச்சாரத்தின் கீழ், மழைநீரைச் சேமிக்கும் வகையில் கிட்டத்தட்ட 1.5 கோடி (15 மில்லியன்) மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம், இன்று 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் நவீன நீர்ப்பாசன வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

‘ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்’ போன்ற முன்முயற்சிகளும் நீரைச் சேமித்து வருகின்றன. ‘ஸ்ரீ அன்னா’ – அதாவது சிறுதானியங்கள், மற்றொரு சிறந்த வெற்றிகரமான உதாரணமாகும். குறைந்த நீரையே பயன்படுத்தும் சிறுதானியங்களின் சாகுபடியை இந்தியா ஊக்குவித்து வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் நாட்டில் சிறுதானிய உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், அவற்றின் ஏற்றுமதி சுமார் 1.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, நீரையும் சேமிக்கிறது. மேலும் இந்த மாதிரியின் காரணமாக, உலக நாடுகளும் நம்மோடு இணைந்து வருகின்றன. இந்தியாவின் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக, 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடப்பட்டது.

நண்பர்களே,

தேசிய இயற்கை வேளாண்மைத் திட்டத்தின் கீழ், இன்று நாட்டில் சுமார் 12.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 24,000 இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய கிட்டத்தட்ட 3,000 பயிர் ரகங்களும் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் நமது கார்பன் தடத்தையும் குறைத்து வருகிறோம்.

நண்பர்களே,

நமது முயற்சிகள் எவ்வளவு விரிவானவை என்பதை இந்தியாவின் காடுகளின் பரப்பளவில் காணலாம். வழக்கறிஞர் நண்பர்களுக்காக இதையும் நான் குறிப்பிடுகிறேன். கடந்த 12 ஆண்டுகளில், நமது மிக அடர்ந்த காடுகளின் பரப்பளவு 22 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் பிரச்சாரத்தின் கீழ், நாடு முழுவதும் கோடிக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த இயக்கம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நண்பர்களே,

பிளாஸ்டிக் கழிவுகளும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக விளங்குகின்றன. அதனால்தான், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு இந்தியா தடை விதித்துள்ளது. பயன்பாட்டைக் குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகிய தாரக மந்திரத்துடன் சுழற்சிப் பொருளாதாரத்தை நாம் ஊக்குவித்துள்ளோம். இன்று இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான டன் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. 'கோபர்தன்' திட்டத்தின் மூலம், கிராமங்களில் உள்ள சாணம் மற்றும் பிற கரிமக் கழிவுகள் பயனுள்ள வளங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. கழிவுகளை ஒரு பிரச்சனையாகப் பார்க்காமல், 'கழிவிலிருந்து செல்வம்' என்ற மாதிரியின் கீழ் அவற்றை பயனுள்ள வளமாக மாற்ற வேண்டும் என்பதே நமது முயற்சியாகும்.

நண்பர்களே,

இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் வெறும் இந்தியாவின் வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல, மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான இந்தியாவின் பங்களிப்புகள் ஆகும்.

நண்பர்களே,

“மாதா பூமி, புத்ரோ அஹம் ப்ரிதிவ்யா” – அதாவது, ‘இந்தப் பூமி நமது தாய், நாம் அனைவரும் அதன் குழந்தைகள்’ என்பதே நமது கலாச்சாரச் சிந்தனையாகும். இந்தச் சிந்தனையோடு, பொறுப்பான மற்றும் நீடித்த நிலைத்தன்மை கொண்ட எதிர்காலத்தைக் கட்டமைக்க இந்தியா பணியாற்றி வருகிறது.

இம்மாநாட்டில் நடைபெறும் விவாதங்களும், இதிலிருந்து வெளிப்படும் புதிய யோசனைகளும் தீர்வுகளும் வருங்கால சந்ததியினருக்குப் பெரும் பக்கபலமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இம்மாநாட்டிற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!

***

(Release ID: 2312342)

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327183) வருகையாளர் எண்ணிக்கை : 11