PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிகளில் சரக்குப் போக்குவரத்து 200 மில்லியன் மெட்ரிக் டன்னை கடந்து சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 12:07PM by PIB Chennai

இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான, நவீன பயணக் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீரியல் ஆய்வுகள், நீர்வழிப் பாதைகளைப் பராமரித்தல் ஆகியவை கப்பல்கள் தடையின்றி செல்ல உதவுகின்றன. டிஜிட்டல் தளங்கள் மூலம் நீரின் ஆழம், வழித்தடங்கள், வானிலை குறித்த நிகழ்நேரத் தகவல்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் பாதுகாப்பான கப்பல் பயணத்தை உறுதி செய்வதுடன், சரக்குப் போக்குவரத்தையும் அதிகரிக்க உதவுகின்றன.

இந்தியாவில் 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 20,187 கி.மீ. நீளத்தில் 111 தேசிய நீர்வழிகள் உள்ளன. இவற்றில் 32 நீர்வழிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. உள்நாட்டு நீர்வழிகளில் சரக்குப் போக்குவரத்து 2014-15-ம் ஆண்டில் 29 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. இது 2025-26-ம் ஆண்டில், 218 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 20.13% வளர்ச்சியடைந்துள்ள நீர்வழிப் போக்குவரத்து, கடல்சார் இந்தியா தொலைநோக்குத் திட்டம் 2030-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 200 மில்லியன் மெட்ரிக் டன் இலக்கையும் கடந்துள்ளது. சாலைப் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது, நீர்வழிப் போக்குவரத்துக்கான செலவு சுமார் மூன்றில் ஒரு பங்காகவும், ரயில் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது பாதியாகவும் உள்ளது. இதனால் எரிபொருள் பயன்பாடு, கார்பன் வெளியேற்றம் குறைகின்றன.

நீரியல் ஆய்வுகள், பாதுகாப்பான பயணக் கட்டமைப்பு

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம், தேசிய நீர்வழிகளில் நீரியல் ஆய்வுகளை மேற்கொள்கிறது. ஆற்றின் ஆழம், படுகையின் அமைப்பு, நீரோட்டம், மணல் திட்டுகள் ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன. கப்பல்கள் செல்லக்கூடிய ஆழமான பாதையை அடையாளம் காணும் ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. 2026 செப்டம்பர் நிலவரப்படி, 22 தேசிய நீர்வழிகளில் இத்தகைய ஆய்வுகள் வாரந்தோறும், இரு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதந்தோறும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகள், கப்பல் பயணத்திற்கான குறைந்தபட்ச நீரின் ஆழம், கப்பல்களின் சரக்குத் திறன், பயண வழித்தடம், காலநிலை சார்ந்த போக்குவரத்துத் திட்டமிடல் ஆகியவற்றைத் தீர்மானிக்க உதவுகிறது.

கேரளாவில் உள்ள தேசிய நீர்வழி-3 முழுவதிலும் 24 மணி நேர கப்பல் பயணத்திற்கு உதவும் வகையில் சூரியசக்தியில் இயங்கும் 312 ஒளிரும் மிதவைகள், 17 கலங்கரை விளக்கக் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், பிரம்மபுத்திராவில் பாண்டு, போகிபீல், சில்காட், பிஸ்வநாத் காட் ஆகிய இடங்களில் ரூ.74 கோடி செலவில் 4 நதி கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்படுகின்றன. 891 கி.மீ. நீளமுள்ள தேசிய நீர்வழி-2, அசாமின் துப்ரியிலிருந்து சாடியா வரை நீண்டுள்ளது. தேயிலை, நிலக்கரி, உரம் உள்ளிட்டவற்றின் போக்குவரத்துக்கு இது முக்கியப் பங்காற்றுகிறது. இப்பாதையில் சரக்குப் போக்குவரத்து 2024-25-ம் ஆண்டில் 0.90 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து, 2025-26-ம் ஆண்டில் 1.29 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் நவீன வழிகாட்டல்

2026 செப்டம்பர் நிலவரப்படி, தேசிய நீர்வழிகளுக்கான மின்னணு வழிகாட்டி வரைபடங்கள் 18 நீர்வழிகளுக்குத் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை பானி (PANI) மற்றும் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையக் கப்பல் கண்காணிப்புத் தளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பானி தளம் நீர்வழிகள், உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து வசதிகள் குறித்த தகவல்களை வழங்குகிறது. கப்பல்களின் இருப்பிடம், நீரின் ஆழம், வழித்தடங்கள் ஆகியவற்றை நிகழ்நேரத்தில் அறியவும் இந்தத் தளங்கள் உதவுகின்றன.

தேசிய நதி போக்குவரத்து மற்றும் வழிகாட்டல் அமைப்பான நவதர்ஷிகா 2025-ல் தொடங்கப்பட்டது. கங்கை தேசிய நீர்வழி-1-ல் செயல்படுத்தப்பட்டுள்ள நதி தகவல் சேவைகள், கப்பல் கண்காணிப்பு, வானிலைத் தகவல், தகவல் தொடர்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்றன. 4 கட்டுப்பாட்டு நிலையங்கள், 13 அடிப்படை நிலையங்கள் மூலம் இந்த அமைப்பு செயல்படுகிறது.

இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இந்தியாவின் நீர்வழிப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாகவும், திறன்மிக்கதாகவும் மாற்றுவதுடன், சரக்குப் போக்குவரத்தின் வளர்ச்சிக்கும் வலுசேர்க்கின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324232&reg=48&lang=2

***

SS/PD/SH  

 


(வெளியீட்டு அடையாள எண்: 2324509) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati