PIB Backgrounder
azadi ka amrit mahotsav

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்: வேலைவாய்ப்புகள், தொழில்முனைவு நடவடிக்கைகள்

முத்ரா திட்டத்தின் கீழ் மூன்றில் இரண்டு பங்கு கடன்கள் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 12:23PM by PIB Chennai

இந்தியாவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு, வெறும் பங்கேற்பு என்பதைக் கடந்து, தரமான வேலை என்ற நிலையை நோக்கி பயணிக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 2017-18-ல் 23.3 சதவீதமாக இருந்தது. இது 2025-ல் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள்தொகையில் தொழிலாளர் விகிதமும் இதே காலக்கட்டத்தில் 22 சதவீதத்திலிருந்து 38.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2025-ல் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையை சுமார் 20 கோடி மகளிர் பணிபுரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களின் தொழில்முனைவுத்திறன், பொருளாதாரப் பங்களிப்பு

பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில், நிறுவனங்கள் பதிவு, கடன் வசதி, சந்தை வாய்ப்புகள், திறன் மேம்பாடு, பாதுகாப்பான பணிச்சூழல் ஆகியவற்றுக்கு அரசு ஆதரவளிக்கிறது. 2026 அக்டோபர் நிலவரப்படி, மகளிரால் நிர்வகிக்கப்படும் சுமார் 3.69 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மொத்தப் பதிவுகளில் சுமார் 38 சதவீதமாகும். 2026 மார்ச் நிலவரப்படி, 1.07 லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநராகவோ அல்லது பிற உயர் பதவியிலோ உள்ளார்.

கைப்பேசி உற்பத்தித் துறையில் நேரடியாக ஈடுபட்டுள்ள பணியாளர்களில் 70% பேர் பெண்களாவர். செமிகண்டக்டர் துறையில் பெண்களின் பங்களிப்பு சுமார் 25 சதவீதமாக உள்ளது. விமானப் போக்குவரத்துத் துறையில் விமானிகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பணிகளிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது.

தொழில்முனைவுக்கான நிதி மற்றும் சந்தை வாய்ப்புகள்

பெண்கள் தொழில் தொடங்கி வளர்ச்சி பெறுவதற்கு நிதியுதவி முக்கியமானதாகும். பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், 2026 ஏப்ரல் வரை 57.79 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு கடன்கள் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன. குறு, சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு 90 சதவீத கடன் உத்தரவாதப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

அரசு மின்னணுச் சந்தையின் வொமானியா முன்முயற்சி, பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை அரசு கொள்முதல் துறையுடன் இணைக்கிறது. 2026 ஜூலை நிலவரப்படி, 2.17 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள்ளன. 2025-26-ம் நிதியாண்டில், இந்நிறுவனங்களுக்கான ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.28,000 கோடியைத் தாண்டியது.

திறன் மேம்பாடு, பாதுகாப்பான பணிச்சூழல்

செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பெண்களின் பங்கேற்பை விரிவுபடுத்த திறன் பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2025-ல் தொடங்கப்பட்ட நவ்யா திட்டம், இளம் பெண்களுக்குப் பல்வேறு தொழில்துறை சார்ந்த பயிற்சி வழங்குகிறது. பெண்களுக்கான செயற்கை நுண்ணறிவுத் தொழில் வாய்ப்புத் திட்டம், 6 மாநிலங்களில் 30 சிறப்பு மையங்களை உருவாக்குவதுடன், 20,000 பேருக்குத் தொழில்துறைக்கேற்ற பயிற்சி வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

2025 நவம்பரில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்கள் 4 தொழிலாளர் சட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்டன. இவை பெண்களின் பணியிடப் பாதுகாப்பு, மகப்பேறு நலன்கள், பாலினப் பாகுபாட்டைத் தடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. பெண்களுக்கு 26 வாரங்கள் வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பெண்கள் இரவு நேர பணிகளிலும் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர்.

திறன் பயிற்சி, நிதி உதவி, சந்தை அணுகல், பாதுகாப்பான பணிச்சூழல் ஆகியவற்றை உறுதிசெய்வதன் மூலம், பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதுடன், தொழில்முனைவையும் ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை வலுப்படுத்தி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்துக்கு ஆதரவளிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323706&reg=3&lang=1

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2324017) வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati