PIB Backgrounder
2025-26-ம் நிதியாண்டில் காதி & கிராமத் தொழில்துறை பொருட்களின் விற்பனை ரூ.1.87 லட்சம் கோடியை எட்டி சாதனை
பாரம்பரியத்திலிருந்து தொழில்முனைவு வரை
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 11:12AM by PIB Chennai
ஒரு காலத்தில் கிராமங்களில் சுழன்ற ராட்டை, தேசிய உணர்வின் அடையாளமாக விளங்கியது. இன்று தேன், மூலிகைப் பொருட்கள், வாழை நார், ஜவுளி உள்ளிட்ட கிராமத் தொழில்கள் மூலம் அந்த உணர்வு புதிய வடிவம் பெற்று வருகிறது. உள்ளூர் வளங்கள், பாரம்பரியத் திறன்கள் ஆகியவை தொழில்நுட்பம், பயிற்சி, நிதியுதவி ஆகியவற்றின் மூலம் புதிய சந்தைகளை அணுகும் வாய்ப்புகள் உருவாக்கியுள்ளன. ‘உள்ளூர்ப் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தல்’, ‘தற்சார்பு இந்தியா’ ஆகிய தொலைநோக்குப் பார்வைகளுக்கு இத்துறை வலுசேர்க்கிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறும் காதி மகோத்சவம், குறிப்பாக இளைஞர்களிடையே காதி, உள்ளூர்ப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவற்றை வாங்க ஊக்குவிக்கிறது.
காதி & கிராமத் தொழில்கள் ஆணையச் சட்டம் 1956-ன் கீழ் நிறுவப்பட்ட காதி & கிராமத் தொழில்கள் ஆணையம், இத்துறையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிராமப்புறத் தொழில்களைத் திட்டமிடுதல், ஊக்குவித்தல், ஒருங்கிணைத்தல், பயிற்சி வழங்குதல், மூலப்பொருட்கள் கிடைக்கச் செய்தல், சந்தைப்படுத்துதல், ஆராய்ச்சி & தர மேம்பாடு ஆகியவற்றுக்கு இந்த ஆணையம் உதவுகிறது.
2025-26-ம் நிதியாண்டில் காதி & கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை ரூ.1.87 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்தது. 2013-14-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை 501% அதிகரித்துள்ளது. உற்பத்தி 380% உயர்ந்துள்ளது.. இத்துறையின் வேலைவாய்ப்பு 56% அதிகரித்து 2.04 கோடியாக உயர்ந்தது.
காதி & கிராமத் தொழில்கள் ஆணையத்தின் 35 பயிற்சி மையங்கள் மூலம் உணவுப் பொருட்கள் தயாரித்தல், தேனீ வளர்ப்பு, அகர்பத்தி, மெழுகுவர்த்தி தயாரித்தல், மோட்டார் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 2025-26-ம் நிதியாண்டில் 79,682 பேர் பயிற்சி பெற்றனர். இதில் சுமார் 59% (47,382) பெண்களாவர். காதித் துறையில் உள்ள சுமார் 5 லட்சம் கைவினைக்கலைஞர்களில் 80%-கும் அதிகமானோர் பெண்களாவர்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் மூலம், 2008 மார்ச் முதல் சுமார் 97.95 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிஹாரில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கிய திரு ஜிதேந்திர பைதா, ஆண்டுக்கு ரூ.72 லட்சம் வருவாய் ஈட்டுவதுடன் 20 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறார். கிராமத் தொழில்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2025-26-ம் ஆண்டில் 37,769 இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட்டன.
காதி நிறுவனங்களின் தயாரிப்புத் தரம், மதிப்புக்கூட்டல், சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு காதி வளர்ச்சித் திட்டம் உதவுகிறது. குறைந்த வட்டியில் கடன், மேம்படுத்தப்பட்ட பணிச்சூழல், உற்பத்திக் கருவிகள் ஆகியவை கைவினைக்கலைஞர்களுக்குக் கூடுதலாக ஆதரவளிக்கின்றன. பஞ்சாபில் தேன், குக்கீஸ் தயாரிக்கும் திரு எஸ்.பி. சிங் அவர்களின் நிறுவனம் 36 நாடுகளுக்கு தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு பி. சுந்தரராஜ், வெட்டிவேர் ஊதுபத்தி, மூலிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து வருகிறார். இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் திரு சாஹில் சௌத்ரியின் அட்டைப் பெட்டி தயாரிப்பு நிறுவனம் 23 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.
காதி இந்தியா இணையவழி விற்பனைத் தளம் (www.khadiindia.gov.in), நாடு முழுவதும் உள்ள விற்பனை நிலையங்கள், கண்காட்சிகள், உள்நாட்டு, சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகள் ஆகியவை சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்றன. நியூசிலாந்து ஆடை வடிவமைப்பு வாரம் 2026, லாக்மே ஆடை வடிவமைப்பு வாரம் 2025 போன்ற நிகழ்வுகளிலும் காதியின் பாரம்பரியக் கைவினைத்திறன்கள் நவீன வடிவமைப்புகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டன. பாரம்பரியத் திறன்களை நிதி, தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகளுடன் இணைப்பதன் மூலம் கிராமப்புறத் தொழில்முனைவு மேம்படுத்தப்படுவதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கம், தற்சார்பு இந்தியா ஆகிய இலக்குகளும் வலுப்படுத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322625®=3&lang=1
***
SS/PD/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322749)
வருகையாளர் எண்ணிக்கை : 13