PIB Backgrounder
பருப்பு வகைகளில் தற்சார்பு இயக்கம்: 2030–31-க்குள் 350 லட்சம் டன் உற்பத்தி இலக்கு
இடுகை இடப்பட்ட நாள்:
11 OCT 2026 12:33PM by PIB Chennai
பருப்பு வகைகளில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில், மத்திய அரசு 2025 அக்டோபர் 11 அன்று 'பருப்பு வகைகளில் தற்சார்பு இந்தியா இயக்கத்தை’ தொடங்கியது. இன்றுடன் (2026 அக்டோபர் 11) இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு ஆண்டு நிறைவடைகிறது. இத்திட்டத்திற்காக 2025–26 முதல் 2030–31 வரையிலான ஆறு ஆண்டுகளுக்கு ₹11,440 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது. பருப்பு வகைகள் 20–25% புரதச்சத்தைக் கொண்டுள்ளன. மக்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்புக்கும் விவசாய ஏற்றுமதிக்கும் பருப்பு வகைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
உற்பத்தி இலக்குகளும் முக்கிய நடவடிக்கைகளும்:
2030–31-க்குள் பருப்பு உற்பத்தியை 350 லட்சம் டன்னாகவும், ஹெக்டேருக்கான சராசரி விளைச்சலை 1,130 கிலோவாகவும் உயர்த்துவதே இத்திட்டத்தின் இலக்காகும். இதற்காகத் துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகியவை உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விதைகள் ஊக்குவிக்கப்படுவதுடன், ஆறு ஆண்டுகளில் 87.5 லட்சம் இலவச விதைத் தொகுப்புகளும், 126 லட்சம் குவிண்டால் சான்றளிக்கப்பட்ட விதைகளும் வழங்கப்பட உள்ளன.
பருப்பு சாகுபடிப் பரப்பை 35 லட்சம் ஹெக்டேர் வரை மேலும் அதிகரித்து, மொத்தம் 310 லட்சம் ஹெக்டேராக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 489 மாவட்டங்களில் தொகுப்பு அடிப்படையிலான சாகுபடியும், 1,000 பருப்பு பதப்படுத்தும் ஆலைகளை நிறுவுவதும் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னேற்றம்:
2024–25-ல் 256.83 லட்சம் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தி, 2025–26-ல் 274.09 லட்சம் டன்னாக உயர்ந்தது. சாகுபடிப் பரப்பு 277.20 லட்சம் ஹெக்டேரிலிருந்து 286.46 லட்சம் ஹெக்டேராகவும், ஹெக்டேருக்கான விளைச்சல் 926 கிலோவிலிருந்து 957 கிலோவாகவும் அதிகரித்தது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகியவை முக்கிய பருப்பு உற்பத்திப் மாநிலங்களாகும்.
பருப்பு இறக்குமதிச் செலவு ₹46,427.60 கோடியிலிருந்து ₹31,793.59 கோடியாகக் குறைந்துள்ளது. ஏற்றுமதி 855 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 969.53 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2025–26-ல் மொத்தம் 10.01 லட்சம் டன் பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. சீனா, ஐக்கிய அரபு அமீரகம், பங்களாதேஷ், அமெரிக்கா, இலங்கை ஆகியவை முக்கியச் சந்தைகளாக உள்ளன.
குறைந்தபட்ச ஆதரவு விலையும் கொள்முதலும்:
2026–27 சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, 2024–25-ஐ ஒப்பிடுகையில் உளுந்துக்கு குவிண்டாலுக்கு ₹7,400-லிருந்து ₹8,200 ஆகவும், துவரைக்கு ₹7,550-லிருந்து ₹8,450 ஆகவும், மசூர் பருப்புக்கு ₹6,700-லிருந்து ₹7,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான நேஃபட் அமைப்பும் பிற கூட்டுறவு அமைப்புகளும், 2025–26 முதல் 2028–29 வரை நான்கு ஆண்டுகளுக்கு, பதிவு செய்த விருப்பமுள்ள விவசாயிகளிடமிருந்து துவரை, உளுந்து, மசூர் பருப்புகளை 100% வரை கொள்முதல் செய்ய அதிகாரம் பெற்றுள்ளன. 2026 ஜூன் 17 வரை ஒன்பது மாநிலங்களில் 10.55 லட்சம் டன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு, 4.69 லட்சம் விவசாயிகளுக்கு ₹7,047 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2025–26 கரீஃப் பருவத்தில் 7.89 லட்சம் டன் பருப்பு ₹6,431 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டு, 3.66 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். 2026–27 ரபி பருவத்தில் 23.51 லட்சம் டன் கொள்முதலுக்காக ₹14,217 கோடி வழங்கப்பட்டு, 10.20 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். மொத்தக் கொள்முதல் 2024–25-ல் 18.40 லட்சம் டன்னிலிருந்து 2025–26-ல் 31.41 லட்சம் டன்னாக உயர்ந்தது.
உள்கட்டமைப்பும் டிஜிட்டல் கண்காணிப்பும்:
பருப்பு வகைகளில் தற்சார்பு திட்டத்தின் முதல் கட்டத்தில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 528 பதப்படுத்தும் ஆலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தரிசு நிலங்களில் பருப்பு சாகுபடியை ஊக்குவிக்க, 2025–26 ரபி பருவத்தில் 9.25 லட்சம் விதைத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன.
தேசிய, மாநில, மாவட்ட அளவிலான மூன்றடுக்கு குழுக்கள் திட்டத்தைக் கண்காணிக்கின்றன கிருஷி மேப்பர் என்ற நில வரைபடமாக்கல் நடைமுறை பயிர் கண்காணிப்புக்கு உதவுகிறது.
இத்திட்டம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், இறக்குமதிச் சார்பைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும், நாட்டின் புரதச்சத்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321892®=3
***
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322174)
வருகையாளர் எண்ணிக்கை : 6