பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 1:58PM by PIB Chennai

கிர்கிஸ்தான் குடியரசுத் தலைவர் அவர்களே,

மேன்மைமிகு தலைவர்களே,

வணக்கம்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த சிறப்பான தருணத்தில், உங்கள் அனைவருடனும் இங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பிஷ்கெக்கில் எங்களுக்கு அன்பான வரவேற்பையும், சிறப்பான விருந்தோம்பலையும் வழங்கியதற்காக, அதிபர் ஜபரோவ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று கிர்கிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்கு இருப்பதற்கான பெருமையைப் பெற்றோம். கிர்கிஸ்தான் அதிபர் அவர்களுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் மீண்டும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று உஸ்பெகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, உஸ்பெகிஸ்தான் அதிபர் அவர்களுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகளின் சிறப்புமிக்க தொடக்க விழாவில், கிர்கிஸ்தானின் வளமான கலாச்சாரத்தையும், நம் அனைவருக்கும் பொதுவான பாரம்பரியத்தையும் நாம் அனைவரும் நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றோம். இந்தப் பொதுவான பாரம்பரியமும், மக்களிடையேயான நமது ஆழமான தொடர்புகளும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் குடும்பத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பலங்களில் ஒன்றாகும்.

நண்பர்களே,

கடந்த 25 ஆண்டுகளில், யூரேசியாவின் பரந்த நிலப்பரப்பு முழுவதும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வலுவான பாரம்பரியத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கியுள்ளது.

நமது மக்களின் நல்வாழ்வுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் நாம் இணைந்து மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செய்துள்ளோம்.

இந்த 25 ஆண்டுகளில், ஒத்துழைப்புக்கான வலுவான அடித்தளத்தை நாம் அமைத்துள்ளோம். அடுத்த 25 ஆண்டுகளில், இந்த ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் பயனுள்ள மற்றும் கண்கூடாகத் தெரியும் பலன்களை உருவாக்குவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.

உலகம் நிச்சயமற்ற தன்மை மற்றும் நிலையற்ற சூழலை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில், நமக்குப் பொதுவாக உள்ள புவியியல் அமைப்பை, அனைவருக்கும் பொதுவான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்.

நமது முயற்சிகள் மூலம், நமது மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

நண்பர்களே,

முந்தைய கூட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் மூன்று முக்கியத் தூண்களை நான் எடுத்துரைத்திருந்தேன்:

எஸ் – பாதுகாப்பு,

சி – இணைப்பு,

ஓ – வாய்ப்பு.

இந்த மூன்று தூண்களையும் வெறும் தொலைநோக்குப் பார்வையாக வைத்திருக்காமல், அவற்றை நடைமுறைப்படுத்தி, உறுதியான பலன்களாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.  இதற்கு முதலும் முக்கியமானதுமான தேவை அமைதியும் பாதுகாப்புமாகும். பயங்கரவாதம் தொடர்ந்து ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், வெறுமனே செயல்பாடு மற்றும் எதிர்வினை என்ற அணுகுமுறைக்குள் நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல், ஆட்களைச் சேர்த்தல், தீவிரவாதச் சிந்தனையைப் பரப்புதல், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்குதல் என அதன் முழுமையான கட்டமைப்பையும் நாம் தகர்க்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் நாம் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும். மேலும், இவ்வளவு தீவிரமான பிரச்சினையில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு எந்த இடமும் இருக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

பயங்கரவாதத்தைத் தங்களது கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் மற்றும் ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கும் நாம் வலுவான செய்தியைத் தெரிவிக்க வேண்டும். பயங்கரவாதம் என்பது யாருக்கும் ஒருபோதும் ஒரு உத்திசார் பலமாக இருக்க முடியாது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

அமைதியான மற்றும் பாதுகாப்பான யூரேசியாவை உருவாக்க வேண்டும் என்ற நமது பொதுவான விருப்பம், ஆப்கானிஸ்தானில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவுவதுடன் நெருக்கமாகத் தொடர்புடையதாகும்.

ஆப்கானிஸ்தான் மக்களின் மேம்பாட்டுக்கும், அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் இந்தியா தொடர்ந்து பங்களித்து வருகிறது. இனியும் இதைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.

இன்றைய ஒன்றோடொன்று இணைந்த உலகில், பாதுகாப்பின் பரப்பு மேலும் விரிவடைந்துள்ளது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் மோதல் அந்தப் பிராந்தியத்திற்குள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்டுவிடாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது. இது எரிசக்திப் பாதுகாப்பு, கடல்வழி வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதுபோன்ற இடையூறுகளால் உலகளாவில் வளர்ந்துவரும் நாடுகளே மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.

எனவே, அனைத்து பதற்றங்களும் மோதல்களும் போர்க்களத்தில் தீர்க்கப்படாமல், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

போதைப்பொருள் கடத்தல் என்பது வெறும் குற்றச்செயல் மட்டுமல்ல; அது நமது இளைய தலைமுறைக்கும், பிராந்தியப் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், திட்டமிட்ட குற்றச்செயல்கள், தகவல் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மையங்கள் ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

இந்த மையங்களை நடைமுறை ஒருங்கிணைப்பு மற்றும் உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பயனுள்ள கருவிகளாக நாம் மாற்ற வேண்டும்.

நண்பர்களே,

நமது பகிர்ந்துகொள்ளப்பட்ட வளர்ச்சியின் இரண்டாவது தூண் வலுவானதும் நம்பகமானதுமான இணைப்பாகும்.

சந்தைகளை ஒன்றிணைத்து, வர்த்தகத்தை எளிதாக்கி, வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. எனினும், இதுபோன்ற முயற்சிகள் அனைத்து நாடுகளின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிப்பது மிகவும் அவசியமாகும்.

இதுவே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனத்தின் அடிப்படை நோக்கமாகவும் உள்ளது. இனி வரும் காலங்களில், இணைப்பின் பரப்பு மேலும் விரிவடையும். சாலைகள், ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துப் பாதைகளுடன், சுங்க நடைமுறைகளையும் நாம் எளிமைப்படுத்த வேண்டும். மின்னணு ஆவணப் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். சரக்குப் போக்குவரத்து வலையமைப்புகளை மேலும் திறம்பட செயல்படச் செய்ய வேண்டும்.

நண்பர்களே,

மூன்றாவது தூண் — வாய்ப்பு.

இதன் பொருள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒத்துழைப்பின் பலன்கள் நேரடியாக நமது மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதாகும்.

நமது மிகப்பெரிய பலம், நமது மக்களுக்கு இடையேயான தொடர்புகள்தான்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சிறப்புமிக்க நாகரிகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சிந்தனைகளின் சங்கமமாகும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடுத்த 25 ஆண்டு காலப் பயணத்திலும், மக்களிடையேயான தொடர்புகள் நமது ஒத்துழைப்பின் மையமாகத் தொடர்ந்து இருக்க வேண்டும்.

நமது முயற்சிகள் இளைஞர்களுக்கு எத்தனை புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன, நமது தொழில்முனைவோருக்கு எத்தனை புதிய சந்தைகளைத் திறக்கின்றன, தொழில்நுட்பத்தின் மூலம் நமது விவசாயிகள் எந்த அளவுக்குப் பயனடைகிறார்கள், நமது குடிமக்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு மேம்படுகிறது என்பதுதான் நமது வெற்றிக்கான உண்மையான அளவுகோலாக இருக்க வேண்டும்.

இதுதான் “பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு” என்பதன் உண்மையான பொருளாகும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் நமது ஒத்துழைப்பு என்பது அரசுகளால் மட்டுமே முன்னெடுக்கப்படுவதாக இருக்கக் கூடாது; அது மக்களால் முன்னெடுக்கப்படுவதாகவும் இருக்க வேண்டும்.

கிர்கிஸ்தானின் தலைமையின் கீழ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இளைஞர்களின் பங்கேற்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தொடக்க நிறுவனங்கள், இளம் எழுத்தாளர்கள் மாநாடு, இளம் விஞ்ஞானிகள் மன்றம் போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரிகங்களுக்கிடையேயான கலந்துரையாடல் குறித்த  மன்றத்தை இந்தியா முன்மொழிந்தது.

இந்த மன்றத்தின் முதல் அமர்வு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்கள் அனைவரின் தீவிரமான பங்கேற்புடன், இந்த மன்றம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்குள் ஆக்கப்பூர்வமான மற்றும் உயிரோட்டமிக்க கலந்துரையாடலுக்கான வலுவான தளமாக மாறும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

கிர்கிஸ்தானின் தலைசிறந்த இலக்கிய ஆளுமையான சிங்கிஸ் ஐத்மாத்தோவ், உலகிற்கு அழகானதும் ஆழமானதுமான ஒரு சிந்தனையை வழங்கினார்.

நம்மைப் பிரிக்கும் விஷயங்களில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம்; நம்மை ஒன்றிணைக்கும் விஷயங்களில் குறைவாகவே கவனம் செலுத்துகிறோம் என்று அவர் கூறினார்.

இந்தச் செய்தி இன்றைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

நமது பன்முகத்தன்மையே நமது அடையாளம். நமக்குப் பொதுவான நோக்கமே நமது பலமாகும்.

பிஷ்கெக்கில் இருந்து நாம் இந்த உறுதியுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்:

பொதுவான புவியியல் அமைப்பிலிருந்து பொதுவான வாய்ப்புகளை நோக்கி,

தொலைநோக்குப் பார்வையிலிருந்து நடைமுறைப் பலன்களை நோக்கி,

அரசுகளால் முன்னெடுக்கப்படும் ஒத்துழைப்பிலிருந்து மக்களால் முன்னெடுக்கப்படும் கூட்டாண்மையை நோக்கி.

இதே நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் குடும்பத்தின் பொதுவான பயணத்தில் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது.

மிக்க நன்றி.

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான தமிழாக்கமாகும். அசல் உரை இந்தியில்  நிகழ்த்தப்பட்டது.

(Release ID: 2305405)

***

AD/VK/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2320554) வருகையாளர் எண்ணிக்கை : 15