குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புதுதில்லியில் நடைபெற்ற மகாபர்வ க்ஷமாபனா விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்
தமிழ்நாட்டிற்கும் சமண மதத்திற்கும் ஆழமான வரலாற்றுத் தொடர்பு உள்ளது : திரு சி பி ராதாகிருஷ்ணன்
அகிம்சை என்பது எண்ணம், சொல், செயல் அனைத்திலும் வன்முறை இல்லாதிருத்தல் ஆகும்: திரு சி பி ராதாகிருஷ்ணன்
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2026 3:50PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (04.10.2026) புது தில்லியில் உள்ள விக்யான் பவனில், பகவான் மகாவீர் நினைவுக் குழு, தில்லி ஜெயின் மகாசபை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகாபர்வ க்ஷாமபான விழா – 2026-ல் உரையாற்றினார். மன்னிப்பு, நட்பு, அகிம்சை, அகத்தூய்மை ஆகிய உலகளாவிய விழுமியங்களின் கொண்டாட்டம் அது என இந்த நிகழ்வை அவர் விவரித்தார்.
க்ஷமாபானம் என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல எனவும் அது மனித இதயத்தை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டிற்கும் சமண மதத்திற்கும் இடையிலான ஆழமான வரலாற்றுத் தொடர்பை எடுத்துரைத்த திரு சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ் இலக்கியத்திற்கும் பண்பாட்டிற்கும் சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளது என்றார். செவ்வியல் தமிழ் இலக்கியத்திற்கு சமண அறிஞர்கள், துறவிகள் ஆற்றிய பங்களிப்புகளை அவர் நினைவு கூர்ந்தார். தமிழ்நாடு முழுவதும் பழமையான சமணக் கோயில்களும் கல்வி மையங்களும் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
சமண தத்துவத்தின் உலகளாவிய செய்தியைப் பற்றிப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், அனைத்து உயிரினங்களிடமும் நட்பு பாராட்டுவதும், யாரிடமும் பகைமை கொள்ளாமல் இருப்பதுமான போதனையானது, இந்தியாவின் 'வசுதைவ குடும்பகம்' என்ற நாகரிக நெறியுடன் இணைந்துள்ளது என்றார். மோதல்களையும் வன்முறைகளையும் காணும் இவ்வுலகில், பகவான் மகாவீரரின் போதனைகள் அமைதி, சகவாழ்வு, கருணை ஆகியவற்றுக்கான ஒரு பாதையை வழங்குகின்றன என்றும் அவர் கூறினார்.
அகிம்சை என்பது வெறும் உடல்ரீதியான வன்முறை இல்லாத நிலை மட்டுமல்ல எனவும், எண்ணம், சொல், செயல் அனைத்திலும் வன்முறை இல்லாத நிலையே அது என்றும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோபம், சகிப்பின்மை, பழிவாங்கும் உணர்வு ஆகியவற்றை வெல்வதில்தான் உண்மையான வலிமை அடங்கியுள்ளது என்பதை மக்களுக்கு நினைவூட்டி, பகவான் மகாவீரர் மனிதகுலத்திற்கு வெற்றியின் பாதையைக் காட்டியதாகக் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
க்ஷமாபானம் குறித்துப் பேசிய அவர், மன்னிப்பு என்பது அநீதியை ஏற்றுக்கொள்வதோ அல்லது உண்மையுடன் சமரசம் செய்துகொள்வதோ அல்ல என்றார். மன்னிப்பு என்பது பழிவாங்குதலுக்குப் பதிலாக சீர்திருத்தத்தையும், வெறுப்புக்குப் பதிலாக உரையாடலையும், பகைமைக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும் தேர்ந்தெடுப்பதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் போது பணிவு, இரக்கம், சேவை, ஒற்றுமை, பொறுப்பு ஆகிய விழுமியங்களை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இந்நிகழ்ச்சியில், பஞ்சாப் ஆளுநர் திரு குலாப் சந்த் கட்டாரியா, பகவான் மகாவீர் நினைவுக் குழுத் தலைவர் திரு கன்ஹையா லால் ஜெயின், தில்லி சமண மகாசபைத் தலைவர், திரு தினேஷ் தோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318888®=48&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318902)
வருகையாளர் எண்ணிக்கை : 10