குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புதுதில்லியில் 11-வது சந்த் ஈஸ்வர் சம்மான்-2026 நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2026 7:37PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், புதுதில்லியில் நடைபெற்ற 11-வது 'சந்த் ஈஸ்வர் சம்மான்-2026' விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சமூகத்திற்குச் சிறப்பான மற்றும் தன்னலமற்ற சேவையாற்றியதற்காக அங்கீகரிக்கப்பட்ட தனிநபர்களுக்கும், அமைப்புகளுக்கும் 'சந்த் ஈஸ்வர் சேவா சம்மான்' விருதை அவர் வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், சந்த் ஈஸ்வர் சம்மான் விருது தன்னலமற்ற சேவையின் உணர்வை அங்கீகரிப்பதுடன், இந்தியாவின் கருணை, பொறுப்புணர்வு சார்ந்த கலாச்சாரத்தைக் கொண்டாடுவதாகவும் அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியவை அடையும் இலக்கு பற்றிக் குறிப்பிட்ட அவர், வளர்ச்சியை வெறும் பொருளாதார முன்னேற்றம், உள்கட்டமைப்பு அல்லது தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே அளவிட முடியாது என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு குடிமகனும் கண்ணியம், வாய்ப்பு, நம்பிக்கையை அனுபவிக்கும் நிலையே உண்மையான வளர்ச்சியடைந்த இந்தியா என்று அவர் கூறினார்.
நாட்டின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு குடிமகனும் ஒரு பங்குதாரர் என்றும், சேவை அமைப்புகளும், தனிநபர்களின் செயல்பாடுகளும் அடிமட்ட அளவில் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியாக அமைகின்றன என்றும் அவர் கூறினார். தூய்மை இந்தியா இயக்கத்தை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் பங்கேற்பால் ஒரு அரசுத் திட்டத்தை எவ்வாறு மக்கள் இயக்கமாக மாற்ற முடியும் என்பதை இந்த முயற்சி எடுத்துக்காட்டியதாகத் தெரிவித்தார்.
போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கும் எதிர்காலத்திற்கும் விடுத்துள்ள தீவிர அச்சுறுத்தலையும் குடியரசுத் துணைத்தலைவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆகஸ்ட் மாதம், பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய போதைப்பழக்கமற்ற இளைஞர்கள் இயக்கத்தைத் தொடங்கி வைத்ததையும், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2029-க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியதையும் அவர் நினைவு கூர்ந்தார். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதை நோக்கிய முக்கியமான நடவடிக்கைகளாக இந்த இரண்டு முயற்சிகளும் அமைந்துள்ளன என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318358®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318576)
வருகையாளர் எண்ணிக்கை : 5