PIB Backgrounder
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் IMEI முறைகேடு

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 10:15AM by PIB Chennai

இந்தியாவில் வேகமாக நடைபெற்று வரும் டிஜிட்டல் புரட்சி காரணமாக தொலைத்தொடர்பு சேவைகள் அன்றாட வாழ்க்கை, வர்த்தகம், நிர்வாகம் ஆகியவற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. 2026 ஜூலை நிலவரப்படி நாட்டின் கைப்பேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 120.401 கோடியாக உள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள், இணையவழிச் சேவைகள், மக்களை மையப்படுத்திய நிர்வாகம் ஆகியவற்றில் கைப்பேசி  சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், தொலைத்தொடர்பு கட்டமைப்புகள், சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகியுள்ளது. இச்சூழலில் சர்வதேச கைப்பேசி  சாதன அடையாள எண்ணான ஐஎம்இஐ (IMEI)-யை முறைகேடாக மாற்றுவது சாதனங்களின் உண்மையான அடையாளத்தைக் கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஐஎம்இஐ என்பது தொலைத்தொடர்பு கட்டமைப்பில் ஒரு கைப்பேசி  சாதனத்தை அடையாளம் காணும் தனித்துவமான 15 இலக்க எண்ணாகும். இதில் முதல் 8 இலக்கங்கள் சாதனத்தின் வகை, மாதிரியை அடையாளம் காணும் குறியீடாக உள்ளன. இரட்டை சிம் வசதி கொண்ட கைப்பேசிகளில் பொதுவாக 2 ஐஎம்இஐ  எண்கள் இருக்கும். கைப்பேசியில் *#06# என்பதை அழுத்துவதன் மூலம் ஐஎம்இஐ  எண்ணை அறியலாம். சஞ்சார் சாத்தி தளம் அல்லது செயலி மூலம் சாதன விவரங்களைச் சரிபார்க்கலாம். 15 இலக்க ஐஎம்இஐ எண்ணுடன் KYM எனத் தட்டச்சு செய்து 14422 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் சரிபார்க்கலாம்.

ஐஎம்இஐ  எண்ணை திட்டமிட்டு நீக்குதல், அழித்தல், மாற்றுதல், மாற்றியமைக்கப்பட்ட ஐஎம்இஐ  கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துதல் அல்லது அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வன்பொருள், மென்பொருளை வைத்திருத்தல் சட்டவிரோதமாகும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களின் ஐஎம்இஐ  எண்களை முதல் விற்பனைக்கு முன்பாக அரசு தளத்தில் பதிவு செய்வது உற்பத்தியாளர்களின் பொறுப்பாகும். இறக்குமதியாளர்களும் சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு முன் ஐஎம்இஐ  எண்களைப் பதிவு செய்ய வேண்டும். விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் சாதனங்களின் ஐஎம்இஐ  எண்கள் செல்லுபடியாகும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் மாற்றியமைக்கப்பட்ட ஐஎம்இஐ கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டுகளைப் பெறுதல், தங்களது பெயரில் பெறப்பட்ட சிம் கார்டுகளைப் பிறரிடம் ஒப்படைத்தல், தொலைத்தொடர்பு அடையாளங்களை மாற்றும் செயலிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே கைப்பேசிகளை வாங்கி ஐஎம்இஐ விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். சாதனங்களை அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் மட்டுமே பழுதுபார்க்க வேண்டும்.

தொலைத்தொடர்பு சட்டம், 2023 ஐஎம்இஐ உள்ளிட்ட தொலைத்தொடர்பு சார்ந்த அடையாளங்களை மாற்றுவதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளை வகுத்துள்ளது. இச்சட்டத்தின் பிரிவு 42(3)(c) தொலைத்தொடர்பு அடையாளங்களை மாற்றுவதைத் தடை செய்கிறது. மோசடி, ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் மூலம் சிம் கார்டுகள் அல்லது தொலைத்தொடர்பு அடையாளங்களைப் பெறுவதையும் பிரிவு 42(3)(e) தடை செய்கிறது. விதிமீறல்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இத்தகைய குற்றங்கள் பிணையில் வெளிவராத முடியாத குற்றங்களாகும்.

தொலைத்தொடர்பு சாதனங்களின் பாதுகாப்பு என்பது அரசு, தொழில்துறை, உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர் ஆகிய அனைவரின் கூட்டுப்பொறுப்பாகும். விழிப்புணர்வு, விதிமுறைகளைப் பின்பற்றுதல், பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றின் மூலம் மோசடிகளைத் தடுத்து, பொதுமக்களைப் பாதுகாத்து, இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முடியும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313715&reg=3&lang=1

***

TV/PD/SH   


(வெளியீட்டு அடையாள எண்: 2315969) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Urdu , Bengali