குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டுகால சேவை, இந்தியாவின் சேவை பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது: குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆர்எஸ்எஸ் குறித்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனின் நூல் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 8:43PM by PIB Chennai

தெலங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் எழுதிய “ஒரு நூற்றாண்டுகால சேவை- ஆர்எஸ்எஸ்-ன் சேவை சார்ந்த 100 செயல்பாடுகள்” (A Century of Service – The RSS in 100 Acts of Seva) என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத்தலைவர் திரு  சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று புதுதில்லியில் குடியரசுத் துணைத்தலைவர் மாளிகையில் வெளியிட்டார்.’’

 

விழாவில் பேசிய குடியரசுத் துணைத்தலைவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு கால சேவை, அதன் சமூகப் பொறுப்புணர்வு, தேசக் கட்டமைப்பில் அதன் பங்களிப்பு ஆகியவற்றை இந்நூல் ஆவணப்படுத்துவதாகக் கூறினார்.

 

"இன்றைய செய்தி, நாளைய வரலாறு" என்று குறிப்பிட்ட திரு சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களின் நினைவிலிருந்து மறைந்துபோகக்கூடிய நல்ல பணிகளை ஆவணப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சேவை மனப்பான்மை, எவ்வாறு தொடர்ச்சியான சமூக சேவையாக உருவெடுத்துள்ளது என்பதை இந்நூல் எடுத்துரைப்பதாக அவர் கூறினார்.

 

"சேவையே தர்மம்; அது ஒரு கடமை" என்பதை ஒரு அடிப்படை லட்சியமாகக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், ஆர்எஸ்எஸ்-ன் சேவை முயற்சிகள் தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் ஏழைகள், விளிம்புநிலை மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சென்றடைந்துள்ளதாகக் கூறினார். கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் உணவு, மருந்துகள், அத்தியாவசிய உதவிகளை வழங்குவதில் ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் ஆற்றிய பங்கை அவர் நினைவு கூர்ந்தார்.

 

அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள "நற்பண்பு கட்டமைப்பின் மூலம் தேச நிர்மாணம்" என்ற கருப்பொருளைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேசப்பற்று, ஒழுக்கம், சமூகப் பொறுப்புணர்வு, தேச ஒற்றுமை ஆகியவை அவசியம் என்று வலியுறுத்தினார்.

 

இந்தப் புத்தகம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு கால சேவையின் பதிவாக மட்டுமின்றி, இந்தியாவின் சேவை மரபு, கலாச்சாரம், தேசிய உணர்வு ஆகியவற்றை வருங்கால சந்ததியினருக்குப் பிரதிபலிக்கும் ஒரு ஆவணமாகவும் விளங்கும் என்று அவர் கூறினார்.

 

வரலாற்றைப் பதிவு செய்யும் இது போன்ற மேலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய குடியரசுத் துணைத்தலைவர், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், இந்த வெளியீட்டுடன் தொடர்புடைய அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு ஏ. நமச்சிவாயம், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310671&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310696) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , हिन्दी , Marathi , Malayalam