பிரதமர் அலுவலகம்
எகனாமிக் டைம்ஸ் நடத்திய உலகளாவிய தலைவர்கள் மன்றம் 2026 நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
21 AUG 2026 9:51PM by PIB Chennai
“உலகத் தலைவர்கள் மன்றம்” என்ற இந்த சிறப்புமிக்க தளத்தில், உலகின் புகழ்பெற்ற தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் முன்னணி தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பிற முக்கியப் பிரமுகர்கள், பெரியோர்களே, தாய்மார்களே!
இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'கூட்டு எதிர்காலம்' என்பதாகும். கடந்த சில ஆண்டுகளில் உலகம் பல ஏற்றத் தாழ்வுகளைக் கண்டுள்ளது. இந்த அனுபவங்கள் ஒரு உண்மையை மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளன. யாருக்குப் பிடித்திருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு நாட்டின் எதிர்காலமும் மற்றொன்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது. அதனால்தான் இந்த 'கூட்டு எதிர்காலம்' என்ற கருத்து இன்று மிகவும் பொருத்தமானதாக மாறியுள்ளது.
இந்த உணர்வை இந்தியா எப்போதுமே பின்பற்றி வருகிறது. தனது ஜி-20 தலைமைப் பதவிக் காலத்தில், 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதே இந்தியாவின் வழிகாட்டும் மந்திரமாக இருந்தது. கூட்டு எதிர்காலம் என்ற எண்ணமும், அதனோடு கூடிய பொறுப்புணர்வும் 21ம் நூற்றாண்டின் பல சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குகின்றன.
நண்பர்களே,
இன்று உலகில் வளர்ச்சி குறித்த பல கவலைகள் உள்ளன. சமீப காலங்களில் உலகம் மிகவும் பயங்கரமான ஒரு வடிவத்தைக் கண்டுள்ளது. வளங்கள் ஆயுதமாக மாற்றப்படுகின்றன. அவநம்பிக்கை சூழ்ந்த ஒரு சூழல் உலகிற்கு பல புதிய சவால்களைக் கொண்டுவருகின்றன. ஆனால் இத்தகைய காலத்திலும் கூட, வளர்ச்சிக்கான மற்றும் நம்பிக்கையின் ஒரு ஒளிப்பிழம்பாக உலக நாடுகள் இந்தியாவைப் பார்க்கின்றன. கடந்த 10-12 ஆண்டுகளில், இந்தியா 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது. அது மட்டுமின்றி, வருங்காலத்தில், உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கும் என்பதே பன்னாட்டு நாணய நிதியத்தின் கணிப்பாகும். மேலும், தனது வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
நண்பர்களே,
ஆகஸ்ட் 15 அன்று, செங்கோட்டையில் நான் ஏழு வழிமுறைகளைக் கொண்ட செயல் திட்டம் பற்றி பேசினேன். உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், உணவு பதப்படுத்துதல், பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் - இன்று இந்தியா எந்தெந்தத் துறைகளில் அதிக கவனம் செலுத்துகிறதோ அந்த ஏழு துறைகளைப் பற்றி நான் குறிப்பிட்டேன். அதனால்தான் நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க, கொள்கை அளவில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள், வாழ்வாதாரத்தை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. இதே தளத்தின் மூலம் நான் உங்களுடன் முன்பு உரையாற்றியபோதும் இதைக் கூறினேன் - இந்தச் சீர்திருத்தங்கள் நமக்கு எந்தக் கட்டாயமும் அல்ல. அவை நமது அர்ப்பணிப்பு, அவை நமது அசைக்க முடியாத நம்பிக்கை.
நண்பர்களே,
2014-ல் நமது அரசு அமைந்தது முதல், மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் நாட்டின் திசையையும் நிலையையும் மாற்றியுள்ளன. இதைப் பற்றி உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். இங்குள்ளவர்களில் யாருக்காவது 'பி.எல்.பி' பற்றித் தெரியுமா? அதைப் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? உங்கள் கைகளை உயர்த்துங்கள். ஊடகத் துறையைச் சேர்ந்த பல ஜாம்பவான்கள் இங்கே அமர்ந்துள்ளீர்கள். உங்களுக்கு பிஎல்பி பற்றித் தெரியுமா? இதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பிஎல்பி என்றால் 'உற்பத்தியுடன் கூடிய தண்டனை' என்று பொருள். இதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம், நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்ட மற்றொரு சொல் - 'பி.எல்.ஐ'. பெரும்பாலானோருக்கு இதைப் பற்றித் தெரியும். பிஎல்ஐ என்றால் 'உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை' என்று பொருள்.
நண்பர்களே,
இந்த இரண்டும் இந்தியாவின் இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களை வரையறுக்கின்றன. இன்றைய காலம் விளக்கக் காலக்கட்டம், எனவே அதை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.
நண்பர்களே,
நமது நாட்டில் ஒரு காலத்தில், ஏதேனும் ஒரு நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி அதிகமாக உற்பத்தி செய்தால், அதற்குத் தண்டனை வழங்கப்பட்டது என்ற செய்தியைக் கேட்கும்போது இன்றைய இளம் தலைமுறை அதிர்ச்சியடையும். இதுதான் முந்தைய லைசென்ஸ் ராஜ் அரசாங்கங்களின் உற்பத்தியுடன் கூடிய தண்டனை மாதிரியாக இருந்தது. ஒரு தொழிற்சாலை தேவை அதிகமானதையடுத்து கூடுதலாக உற்பத்தி செய்ததற்காகவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட உதாரணங்கள் கூட இருந்தன. இதனால் பாதிக்கப்பட்ட அந்த நிறுவனம், தனது பொருள்களைச் சந்தையில் விற்பனை செய்வதற்குப் பதிலாகத் தானே அழித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
நண்பர்களே,
இன்று 'இந்தியாவுக்கான உற்பத்தி இயக்கம்' மற்றும் 'தற்சார்பு இந்தியா' இயக்கத்தை யார் கேலி செய்கிறார்களோ, அவர்களின் முன்னோர்களின் சிந்தனை துல்லியமாக இதுவாகத்தான் இருந்தது: அதாவது உற்பத்தியுடன் கூடிய தண்டனை. இத்தகைய செயல்களுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட விகாரமான மனநிலை இருந்தது. அத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். நாட்டு மக்களை வறுமையிலும் பற்றாக்குறையிலும் வைத்திருப்பது அவர்களின் கொள்கையாக இருந்தது. மக்கள் தங்கள் முன்பு கைகளைக் கட்டிக்கொண்டு, கெஞ்ச வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்பது உங்களுக்குப் புரியும். மக்களைத் தங்களை நோக்கி கைகூப்பச் செய்த பிறகு, அவர்கள் ஏதோ பெரிய உதவி செய்வது போல நடந்துகொள்வார்கள். அதுதான் அந்த அரசாங்கங்களின் வழிமுறையாக இருந்தது, அதனால்தான் அவர்கள் உற்பத்தியுடன் கூடிய தண்டனை மாதிரியைப் பின்பற்றினார்கள். நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம், இதைச் செய்வதன் மூலம் அவர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் அடிப்படைக் கொள்கையை கழுத்தை நெரித்துக் கொன்றார்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் - அவர்களின் பல்லக்கைத் தூக்குபவர்கள், அதற்கு எதிராக ஒருபோதும் குரல் எழுப்பவில்லை.
நண்பர்களே,
ஒவ்வொரு சீர்திருத்தமும் முதலில் நமது சிந்தனை முறையை, நமது மனக் கட்டமைப்பை, நாம் பணியாற்றும் எல்லையைச் சீர்திருத்துவதில்தான் தொடங்குகிறது. முந்தைய காலத்தில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது தண்டனைக்குறிய குற்றமாக கருதப்பட்டது. ஆனால், இன்றைய நமது அரசோ உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஊக்கத்தொகையை வழங்குகிறது. இன்று பி.எல்.ஐ திட்டத்தின் வெற்றியை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒரே ஒரு திட்டத்தின் காரணமாக மட்டும் - நான் மற்ற அனைத்துத் திட்டங்களையும் குறிப்பிடவில்லை, ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே சொல்கிறேன் - சுமார் 2.5 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நேரடி முதலீடு வந்துள்ளது. 22 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உற்பத்தியும் விற்பனையும் நடந்துள்ளன. 15 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. மேலும், 14 லட்சத்திற்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை நான் உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன் - இந்தப்புள்ளிவிவரங்கள் ஒரே ஒரு திட்டத்திற்கானவை மட்டுமே. சிந்தித்துப் பாருங்கள்: முந்தைய லைசென்ஸ் ராஜ் அரசாங்கங்களின் தண்டனை மாதிரி வேலையின்மையை அதிகரித்தது, ஆனால் இன்றைய நமது ஊக்கத்தொகை மாதிரியோ இலட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
நண்பர்களே,
இன்று இந்தியாவில் இந்த அளவுக்கு வேகமான வளர்ச்சியும், விரைவான சீர்திருத்தங்களும் நடைபெறுவதற்குக் காரணம், சத்யா அவர்கள் சற்று முன்பு குறிப்பிட்டதைப் போல, இந்தியாவில் அரசியல் நிலைத்தன்மை இருப்பதும், நமது கொள்கைகளில் தொடர்ச்சி இருப்பதும்தான். கடந்த காலங்களில் நாட்டில் சீர்திருத்தங்கள் குறித்து பேசுபவர்கள், பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார்கள். ஆனால், பின்னர் அவற்றை மறந்துவிடுவார்கள். ஆனால், நாங்கள் சீர்திருத்தங்களுக்கான தெளிவான செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இந்த செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் — ஆட்சி முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது! இதற்காக, 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவில், நாங்கள் வெறுமனே விதிமுறைகளை மாற்றவில்லை; விதிமுறைகளை உருவாக்கும் முறையையே, அதன் முழுமையான அணுகுமுறையையே மாற்றி வருகிறோம். முன்பு விதிமுறைகளின் அணுகுமுறை, “அனுமதி அளிக்கப்படாவிட்டால் தடை” என்பதாக இருந்தது. அதாவது, அரசு அனுமதி அளிக்கும் வரை, ஒரு குறிப்பிட்ட பணியை நீங்கள் செய்ய முடியாது. இப்போது இந்த அணுகுமுறையை “தடை செய்யப்படா விட்டால் அனுமதி” என்ற முறைக்கு மாற்றி வருகிறோம். அதாவது, சட்டத்தால் வெளிப்படையாகத் தடை செய்யப்படாத ஒரு பணியை மேற்கொள்வதற்கு, ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. இந்தச் சிந்தனைக்குப் பின்னால் இருப்பது மிகவும் எளிமையான ஒரு கருத்துதான் — அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான உறவின் அடிப்படையாக சந்தேகம் இருக்கக்கூடாது; நம்பிக்கையே இருக்க வேண்டும்.
நண்பர்களே,
இந்தச் சிந்தனை இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்க வகை செய்யும் மசோதாவிலும்' தெளிவாக வெளிப்படுகிறது. நடைமுறையில் ஏற்படும் ஒவ்வொரு சிறிய தவறும் குற்றச் செயலல்ல என்ற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். அதனால்தான் பல குற்றங்கள் குற்றவியல் வரம்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பல வழக்குகளில் சிறைத் தண்டனைக்குப் பதிலாக, வெறும் பண அபராதம் மட்டுமே விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கும் வணிக நிறுவனங்களுக்கும் இடையிலான உறவிலும் நாம் இதே சீர்திருத்த மனப்பான்மையைத் முன்னெடுத்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணக்க விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளன - 1,500-க்கும் மேற்பட்ட பழைய மற்றும் பயனற்ற சட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. இந்தச் சீர்திருத்தங்கள் அனைத்தையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கும்போது, நமது தொழில்களும் வணிகங்களும் எத்தகைய பெரும் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்பதை உங்களால் உணர முடியும்.
நண்பர்களே,
நிர்வாகச் சீர்திருத்தங்கள் என்ற இந்தப் பணியில் நாம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். நாடாளுமன்றத்தின் சமீபத்திய மழைக் கால கூட்டத்தொடரில் 'வங்கியாளர் புத்தகம் சாட்சியச் சட்டம்' நிறைவேற்றப்பட்டது. அதுவும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயும் இது சாத்தியமானது. நாட்டுக்குச் சேவை செய்யும் பணியை ஒருபோதும் நாங்கள் தடைபட அனுமதிக்கவில்லை. இப்போது இந்தச் சட்டம் 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயச் சட்டத்திற்கு மாற்றாக வந்துள்ளது. இதன் மூலம் வங்கிகளின் டிஜிட்டல் ஆவணங்களின் நம்பகத்தன்மைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டப்பூர்வ சிக்கல்களைக் குறைத்து, அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்து, வணிகம் செய்வதை எளிதாக்கும்.
நண்பர்களே,
ஆட்சியில் சீர்திருத்தம் என்பதன் ஒரு பொருள், ஒவ்வொரு மனித உயிருக்கும் அதன் மதிப்புக்கும் உணர்திறனுடன் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதாகும். இதற்கு நான் இரயில்வே துறையை உதாரணமாகக் கூறுகிறேன். நமது இரயில்வே துறையிலும் இதே அணுகுமுறையோடுதான் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைக்கு 6,500-க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் மின்னணு குறுக்குப் பிணைப்பு (எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்) முறையைக் கொண்டுள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட ஆளில்லா/ஆள் உள்ள லெவல் கிராசிங் கேட்கள் இந்த குறுக்குப் பிணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இது மனிதத் தவறுகளால் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
நண்பர்களே,
2014-ல் நமது அரசு பொறுப்பேற்றபோது, காவலர்கள் இல்லாத சுமார் 9,000 ஆளில்லா ரயில்வே கேட்கள் இருந்தன. அவற்றை அகற்றுவது ஒன்றும் பெரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு அல்ல. ஆளில்லா கடவுப் பாதைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர், ஆனால் முந்தைய அரசாங்கங்கள் அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. நாங்களோ ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றுவதைக் குறிக்கும் வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் ஆளில்லா கடவுப் பாதைகளை முற்றிலுமாக அகற்றினோம். மேலும், சாலை மேம்பாலங்கள் மற்றும் சாலை தரைப்பாலங்கள் அமைக்கும் வேகத்தை நாம் பல மடங்காக அதிகரித்தோம். இதன் விளைவாக, 2014-க்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் வரை குறைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருடத்தில் ஏறத்தாழ 150 இரயில் விபத்துகள் நடந்து வந்தன. இப்போது அந்த எண்ணிக்கை 15 முதல் 20 ஆகக் குறைந்துள்ளது. மேலும் அதனை இன்னும் குறைக்க நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம்.
நண்பர்களே,
ரயில்வேயில் தூய்மை என்பது நிர்வாகச் சீர்திருத்தத்தின் மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரு காலத்தில் ரயில் தண்டவாளங்களில் இருந்த அசுத்தமும் மனிதக் கழிவுகளும் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தன. இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. 2014-க்கு முன்பு, நமது ரயில்களில் சுமார் 12,000 உயிரி கழிவறைகள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தன. 2014-க்குப் பிறகு, ரயில்களில் 3,60,000-க்கும் மேற்பட்ட உயிரி கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதாவது கடந்த 12 ஆண்டுகளில் 97 சதவீதத்திற்கும் அதிகமான உயிரி கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் தூய்மையைப் பற்றியது மட்டுமல்ல, இது பயணிகளின் சுயமரியாதை, தூய்மை மற்றும் நவீன இந்தியாவை உருவாக்கும் திசையிலான நிர்வாகத்தின் ஒரு புதிய மாதிரியாகும். கோடிக்கணக்கான பயணிகளுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் ஒரு இயக்கமாகவும் இது திகழ்கிறது.
நண்பர்களே,
நிர்வாகத் தரத்தின் மற்றொரு அளவுகோல் நேரமாகும். தொடங்கப்பட்ட ஒரு திட்டம் சரியான நேரத்தில் முடிக்கப்பட வேண்டும். மேலும் மக்களுக்குக் கிடைக்கும் சேவையும் காலத்தின் சோதனையை வென்றிருக்க வேண்டும். தில்லி - மீரட் நமோ பாரத் விரைவு ரயில் கட்டமைப்பு இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். இந்த வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. நமது நாட்டில் இதற்கு முன்பு இதைக் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாது. இதுவரை 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இதில் பயணம் செய்துள்ளனர். அதேபோல், பெரிதும் விவாதிக்கப்படாத மற்றொரு முக்கியமான காரணியும் உள்ளது. தில்லி - மீரட் நமோ பாரத் விரைவு ரயிலின் நேரந்தவறாமை 99.9 சதவீதமாகும். இல்லையென்றால் எதற்கெடுத்தாலும் தாமதமாக வருவது குறித்து, "இதுதான் இந்திய நேரம்" என்று நாம் வழக்கமாகக் கூறுவோம். காலம் மாறிவிட்டது. நிர்வாகத்தின் பணி எவ்வளவு பரந்ததாகவும் விரிவானதாகவும் உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்காகவே இத்தகைய சிறிய விஷயங்களை நான் குறிப்பிடுகிறேன். இதேபோல், தில்லி மெட்ரோவின் நேரந்தவறாமையும் 99.9 சதவீதமாகும். இந்தத் நேரந்தவறாமை என்பது நியூயார்க், ஹாங்காங் மற்றும் பாரிஸ் போன்ற நகரங்களின் மெட்ரோக்களுக்கு நிகராக மாறியுள்ளது. இது வெறும் நேரத்தில் இயங்கும் மெட்ரோ மற்றும் விரைவு ரயிலின் கதை மட்டுமல்ல. இது காலத்திற்கேற்ப மாறிவரும் இந்தியாவின் அடையாளமாகும். இதைக் குறிப்பிடும்போது இத்துடன் திருப்தி அடைந்து அமர்ந்திருக்கும் மனிதன் நான் அல்ல. இன்னும் இந்தத் திசையில் நாம் செய்ய வேண்டியவை பல உள்ளன, இன்னும் நிறைய மீதமுள்ளன. ஆனால் நாம் அதைத் தொடர்ந்து செய்து வருகிறோம். ஒரு தொடக்கம் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தத் தொடக்கம் பாராட்டுக்குரியது.
நண்பர்களே,
நமது சீர்திருத்த நடவடிக்கையின் மற்றொரு முக்கிய பரிமாணம் கொள்கை மட்டத்திலான சீர்திருத்தங்களாகும்! இன்று நாம் மக்கள் நலன், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட கொள்கைகளை உருவாக்கி வருகிறோம். கொள்கைகள் என்பவை நாட்டின் மற்றும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டுமே தவிர, கொள்கைகள் உருவாக்கப்பட்டு நாடு அவற்றின்படி இயங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படக்கூடாது! இதற்கு மற்றொரு சுவாரஸ்யமான உதாரணத்தை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டின் ஒரு வரைபடத்தை உருவாக்குவது கூடச் சட்டவிரோதமாக இருந்தது. நீங்கள் ஒரு வரைபடத்தை உருவாக்கினால் அது சட்டவிரோதம், நீங்கள் சிறை செல்ல நேரிடலாம். அனுமதியின்றி நாட்டில் மேப்பிங் பணியைக்கூட உங்களால் செய்ய முடியாது. சிந்தித்துப் பாருங்கள் - வெளிநாட்டுச் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் இந்தியாவின் எந்த மூலையையும் வரைபடமாக்க முடியும், ஆனால் இந்தியாவிலேயே இந்தியர்கள் இந்தியாவின் வரைபடத்தை உருவாக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
நண்பர்களே,
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், இந்த ஒரே ஒரு தடை பல தொடக்க நிலை நிறுவனங்களை முடக்கியிருக்கக்கூடும்! பல புதிய யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் தடையைச் சந்தித்திருக்கலாம். நாங்கள் இந்த அமைப்பையும் மாற்றினோம். புவிசார் வெளித்தரவுகளில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தினோம், இன்று புவிசார் வெளித்தரவு பல புத்தொழில் நிறுவனங்களுக்கு அடித்தளமாக மாறியுள்ளது.
நண்பர்களே,
இன்று ட்ரோன்களின் அதிகரித்து வரும் பயன்பாட்டை நீங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறீர்கள். விவசாயத்தில், பாதுகாப்பில், விநியோகத்தில், படப்பிடிப்பில், உள்ளடக்க உருவாக்கத்தில் என அனைத்து துறைகளிலும் இது சாத்தியமாகியுள்ளது என்றால், அரசாங்கம் இது தொடர்பான விதிகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டதால்தான் இது சாத்தியமானது. முந்தைய காலத்தில் நாட்டில் ட்ரோன் பறப்பது என்பது விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நாங்கள் அதை அந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்தோம், இன்று இந்தியாவின் ட்ரோன் தொழில் முன்னேப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து பறந்து வருகிறது.
நண்பர்களே,
முன்பெல்லாம் எல்லைப் பகுதிகள் பற்றிய அரசாங்கங்களின் சிந்தனை எப்படி இருந்தது என்றால், எல்லையில் சாலைகளும் உள்கட்டமைப்புகளும் அதிகரித்தால், எதிரியும் அதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்பதாகத்தான் இருந்தது. நாங்கள் இந்தச் சிந்தனையை மாற்றினோம். எல்லை உள்கட்டமைப்பு என்பது பலவீனமல்ல, அது நாட்டின் பலம் என்று நாங்கள் கூறினோம். அதனால்தான் இன்று எல்லைப் பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் கட்டமைப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டும், எல்லைச் சாலைகள் அமைப்பின் 250 உள்கட்டமைப்புத் திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சிந்தனை மாறியபோது, எல்லை உள்கட்டமைப்பின் தோற்றமும் மாறியது.
நண்பர்களே,
அணுசக்தி சீர்திருத்தங்கள் குறித்தும் ஒரு உதாரணம் உள்ளது. வளர்ச்சி முழுமையாக ஆற்றலைச் சார்ந்து இருந்த ஒரு காலகட்டத்தில், கட்டுப் பாடுகள் மற்றும் தடைகள் காரணமாக நாட்டினால் தனது அணுசக்தி திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. 'சாந்தி மசோதா' மூலம் நாம் இதிலும் ஒரு மிகப்பெரிய சீர்திருத்தத்தை மேற்கொண்டோம். இன்று இந்தியாவில் அணுசக்தி துறையில் தனியார் துறைக்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல், பாதுகாப்புத் துறையிலும் நாம் ஒரு பெரிய கொள்கைச் சீர்திருத்தத்தைச் செய்தோம். 200 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த அமைப்பை மாற்றி, 40-க்கும் மேற்பட்ட ஆயுத ஆலைகளை 7 நிறுவனங்களாக மாற்றினோம். அதன் பலன்களை இன்று நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இன்று இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகளுக்கே தற்சார்பு நாடாக மாறி வருகிறது, 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நமது பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 55 மடங்கு அதிகரித்துள்ளது. அதனால்தான், பல நேரங்களில் சீர்திருத்தங்கள் நம் வாழ்வில் எந்தளவுக்கு ஒன்றிவிட்டன என்றால், அவை நிகழ்வதைக்கூட நாம் கவனிக்காமல் கடந்துவிடுகிறோம். இன்று உங்களது சாதாரண ஒரு நாள் எப்படிக் கடந்து செல்கிறது என்று யோசித்துப் பாருங்கள். காலையில் தூக்கத்திலிருந்து எழுகிறீர்கள். உங்கள் தொலைபேசியில் வீட்டுத் தேவைகளுக்கான பொருட்களை ஆர்டர் செய்கிறீர்கள், நீங்கள் அலுவலகத்திற்குத் தயாராகும் நேரத்திற்குள் அந்தப் பொருட்கள் அனைத்தும் உங்கள் வீட்டிற்கு வந்து சேருகின்றன. உங்கள் தெருவில் உள்ள சிறிய கடை முதல் உங்கள் கார் ஷோரூம் வரை அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் வெறும் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமே முடிந்துவிடுகின்றன. உங்கள் மகள் வேறு நகரத்தில் படித்துக் கொண்டிருந்தால், அவளுக்குத் தொலைபேசி மூலமாகவே பணம் அனுப்பலாம், அந்தப் பணம் சில நொடிகளில் அவளைச் சென்றடைகிறது. பல நேரங்களில் மகளே ஒரு கியூஆர் குறியீட்டைப் பகிர்ந்து, "அப்பா - அம்மா, நான் இந்த உடையை வாங்கியிருக்கிறேன், தயவுசெய்து பணம் செலுத்துங்கள்" என்று கூறுவாள், நீங்களும் வீட்டிலிருந்தபடியே அவளது ஷாப்பிங்கை முடித்துக் கொடுக்கிறீர்கள். இந்த விஷயங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை, ஆனால் இப்போது இவை இந்தியாவின் மக்களுக்கு ஆச்சரியத்தைத் தருவதில்லை. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இதைப் பார்த்து வியந்துபோகிறார்கள் - "ஓ, இப்படித்தான் நடக்குமா?" என்று கேட்கிறார்கள். ஆனால் இந்திய மக்களுக்கு இது ஒரு வழக்கமான அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. இந்தியாவின் சாதாரண குடிமகனின் வாழ்வோடு இது இரண்டறக் கலந்துவிட்டது.
யோசித்துப் பாருங்கள் - 2014-க்கு முன்பு இவற்றில் எத்தனை விஷயங்கள் சாத்தியமாக இருந்தன?
நண்பர்களே,
கடந்த 10-12 ஆண்டுகளில், வாழ்க்கைமுறையை எளிதாக்குவது தொடர்பாக இந்தியா மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் மக்களின் வாழ்க்கையை - குறிப்பாக நமது நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை - மாற்றி அமைத்துள்ளன. உலகின் பல வளர்ந்த நாடுகளில் இது இப்போதும் ஒரு கனவாக மட்டுமே உள்ளது.
நண்பர்களே,
இன்று உலகின் மிகக் குறைந்த விலையில் டேட்டா இந்தியாவில் உள்ளது. நாம் குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து வருகிறோம். சத்யா இப்பதான் அதைக் குறிப்பிட்டார். உலகில் மிக வேகமாக 5ஜி சேவையை வழங்கி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். நாம் ஆதார் எண்ணை வங்கி சேவைகள், மொபைல் இணைப்பு மற்றும் பிற சேவைகளுடன் இணைத்துள்ளோம்; இதன் மூலம் ஈ-கேஒய்சி மற்றும் டிஜிட்டல் அங்கீகாரம் போன்ற சேவைகள் சாத்தியமாகியுள்ளோம். இன்று நீங்கள் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்க விரும்பினால், வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம்கூட இல்லை. அரசே வங்கியை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளது. இன்று மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கோ, பில் செலுத்துவதற்கோ, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கோ அரசு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை - இந்தப் பணிகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறுகின்றன. வருமான வரி தாக்கல் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. படிவத்தில் உள்ள பெரும்பாலான தகவல்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும் வகையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்தத் தகவல்களைச் சரிபார்த்து, உங்களுக்குத் தேவையானதைச் சேர்த்துச் சமர்ப்பிக்கிறீர்கள் - உங்கள் வேலை முடிந்தது. முன்பெல்லாம் ரீஃபண்ட் வர பல மாதங்கள் ஆகும், ஆனால் இப்போது சில நாட்களில் வந்துவிடுகிறது.
நண்பர்களே,
இன்று ஈ-சஞ்சீவனி உதவியுடன் - ஒருவேளை இது குறித்து இன்னும் மிகக் குறைவாகவே விவாதிக்கப்படலாம் - ஈ-சஞ்சீவனி உதவியுடன், தொலைதூர கிராமங்களில் உள்ள மக்கள் எங்கிருந்தும் நேரடியாக மருத்துவர்களைத் தொடர்புகொண்டு சிகிச்சைப் பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும். மருத்துவமனைக்குச் செல்ல பல கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டியிருந்தவர்கள், இன்று தங்களது திரையிலேயே, வீட்டிலிருந்தபடியே மருத்துவரை அணுக முடியும். இந்தப் புள்ளிவிவரம் நிச்சயமாக உங்களை ஆச்சரியப்படுத்தும் - இந்தியா எவ்வாறு தொழில்நுட்பத்தைத் தன்வசப்படுத்தியுள்ளது, சாதாரண மனிதனின் வாழ்க்கையை அது எவ்வாறு எளிதாக்கியுள்ளது என்பதை இது காட்டுகிறது. இதுவரை, ஈ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ் தொலைபேசி வாயிலாக கிட்டத்தட்ட 500 மில்லியன் ஆலோசனைகள் நடந்துள்ளன.
நண்பர்களே,
இன்று இந்தியாவில் பயண அனுபவம் மாறி வருகிறது, இந்தியாவின் குடிமக்களின் பயணங்கள் முற்றிலும் மாறிவிட்டன. விமான நிலையத்தில் 'டிஜியாத்ரா' பயன்படுத்தாத ஒருவரை இந்த அரங்கில் கண்டுபிடிப்பது கடினம். இதேபோல், தற்காலத்தில் பல பணிகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டேக்குகள் செயல்படுகின்றன, இதன் மூலம் நீங்கள் நிற்காமல் கட்டணம் செலுத்திவிட்டு முன்னேறிச் செல்லலாம். இதுதான் வாழ்க்கை முறையை எளிதாக்குவதன் உண்மையான அர்த்தமாகும். நேரம் சேமிக்கப்படுகிறது, வாழ்க்கை எளிதாகிறது, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடிகிறது.
நண்பர்களே,
அரசியலில், பெரும்பாலும் அந்த முடிவுகள் மட்டுமே தலைப்புச் செய்திகளாகின்றன, அவற்றின் தாக்கம் உடனுக்குடன் - அதாவது 24 மணி நேரம் மட்டுமே - காணக்கூடியதாக இருக்கும். முந்தைய அரசாங்கங்கள் தேர்தலைக் கருத்தில் கொண்டு அறிவிப்புகளை வெளியிடும் சூத்திரத்தையே பின்பற்றின. ஆனால் அத்தகைய அறிவிப்புகள் நாட்டை மாற்றவில்லை. நாட்டை மாற்றும் முடிவுகள் என்பவை, தற்காலத்தையும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு எடுக்கப்பட்டு, நேரடியாக தாக்கம் செலுத்தக் கூடியவையாகும்.
நண்பர்களே,
பிரதமரின் எரிசக்தி பாதுகாப்பு திட்டம் மற்றும் பிரதமரின் சூரிய சக்தியுடன் கூடிய இலவச மின்சார திட்டம் ஆகியவை இதற்கு மிகச்சிறந்த தனித்துவமான உதாரணங்களாகும். எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள் மின்சாரத்தைப் பற்றிய கவலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சூரிய இல்லத் திட்டம் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் பயனடைந்துள்ளனர்.
நண்பர்களே,
கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இன்றிலிருந்து மின்சாரம் இலவசம் என்று நான் அறிவித்திருந்தால், ஊடகங்கள், திரைகள் மற்றும் செய்தித் தாள்கள் அனைத்தும் "மோடிஜி இன்று இலவச மின்சாரத்தை அறிவித்தார்" என்று பெரிய தலைப்புச்செய்திகளை வெளியிட்டிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் ஒரு வித்தியாசமான அணுகுமுறையுடன் பணியைத் தொடங்கினோம். ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் சூரியனை எழச் செய்வோம் என்று நாங்கள் உறுதியளித்தோம். இன்று நாட்டின் 50 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பிரதமரின் இலவச சூரிய மின்சாரத் திட்டத்துடன்' இணைக்கப்பட்டுள்ளன. சூரிய மின் தகடுகளைப் பொருத்தி, தங்கள் கூரைகளிலேயே சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக, இந்தக் குடும்பங்களுக்கு அரசு 22,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளது. இப்போது இந்தக் குடும்பங்கள் தங்களுக்கு மிஞ்சும் மேலதிக மின்சாரத்தை மின் கட்டமைப்புக்கு விற்றுப் பணம் சம்பாதித்து வருகின்றன. அவர்களது சொந்த மின் கட்டணம் பூஜ்ஜியமாகிவிட்டதுடன், அவர்கள் சம்பாதிக்கவும் தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் மக்களின் கனவுகளையும் விரிவுபடுத்துகிறது. மின் கட்டணம் குறைந்ததால், மக்கள் இப்போது குளிர்சாதனப் பெட்டிகள், கூலர்கள், சலவை இயந்திரங்கள் தொலைக்காட்சிகள் போன்ற பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது மின்தடையால் பால் கெட்டுவிடுமோ என்ற பயமோ, கவலையோ இல்லை. இப்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இரவில் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. நான் மீண்டும் சொல்கிறேன் - தேர்தல் நடந்தாலும் சரி, நடக்கவிட்டாலும் சரி, இல்லங்களுக்கான சூரியமின் திட்டமும் அதன் ஒளியும் எப்போதும் தொடரும். இந்தத் திட்டத்தின் பலன் இன்னும் பல ஆண்டுகளுக்கு நாட்டின் குடும்பங்களைச் சென்றடைந்து கொண்டே இருக்கும்.
நண்பர்களே,
வரும் காலங்களில், வாழ்க்கையை எளிதாக்குவதும், தொழில் மற்றும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதும் மேலும் விரிவடையும். நாட்டின் இளைஞர்களுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், விவசாயிகளுக்காகவும், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்காகவும் எங்கள் அரசு தொடர்ந்து பணியாற்றும். நமது சீர்திருத்தப் பயணம் இன்னும் அதிக வேகத்தில் முன்னேறும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நிறைவேற்றுவதற்காக, முழுமையான அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றுவோம். என்னைப் பொறுத்தவரை, இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக இருந்தால், உலகின் எதிர்காலத்திலும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய பணியும் இந்த மண்ணிலிருந்தே மேற்கொள்ளப்படும். இந்த நம்பிக்கையுடன், இந்தியா எவ்வளவு நிலையானதாக மாறுகிறதோ, அந்த அளவுக்கு இந்தியாவின் எதிர்காலமும் பாதுகாப்பானதாக மாறும். அதே நேரத்தில், உலகிற்கும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வலிமை இந்த மண்ணிலிருந்தே உருவாகும். இந்தத் திறனுடனும், இந்த உறுதியுடனும், இன்றைய நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழின் முழுக் குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வந்தே மாதரம்!
குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் வழங்கப்பட்டது.
(Release ID: 2302204)
***
AD/VK/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2307873)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam