பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லி ஐஐடி-ன் 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 AUG 2026 2:09PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அவர்களே, ஹரிஷ் சால்வே அவர்களே, பேராசிரியர் அபய் கரந்திகர் அவர்களே, ஐஐடி தில்லி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி அவர்களே, அனைத்து பேராசிரியர்களே, சிறப்பு விருந்தினர்களே, மாணவச் செல்வங்களே,

இன்று நாட்டின் திறமைமிக்க இளைஞர்களான உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு புதிய பயணம் தொடங்குகிறது. உற்சாகம், மகிழ்ச்சி, கனவுகள், உணர்வுகள் என பல்வேறு உணர்ச்சிகள் நிறைந்த, உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணத்தை நீங்கள் அனுபவித்து வருகிறீர்கள். இந்தத் தருணத்தில் உங்களுடன் இணைந்து, ஐஐடி தில்லி வளாகத்திற்கு வந்து, இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கும் மிகவும் சிறப்பானதாகும்.

கடந்த முறை இங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நான் பங்கேற்றபோது, ஒட்டுமொத்த நாடும்  பெருந்தொற்று காலகட்டத்தைக் கடந்து கொண்டிருந்தது. அப்போது நான் இணையவழியாக உங்களுடன் இணைந்திருந்தேன். ஆனால் இன்று உங்கள் மத்தியில் நேரடியாக இருக்கிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

நண்பர்களே,

இன்று உங்கள் குடும்பத்தினர் எவ்வாறு பெருமிதம் கொள்கிறார்களோ, அதேபோல நானும் உங்கள் அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். ஏனெனில் நீங்கள் வெறுமனே ஒரு பட்டத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே செல்லவில்லை. நாட்டிற்காக மிகப் பெரிய செயல்களைச் செய்ய வேண்டும் என்ற கனவுகளுடன் நீங்கள் இங்கிருந்து புதிய பயணத்தைத் தொடங்குகிறீர்கள்.

பல மாணவர்கள் தங்களின் சிறப்பான சாதனைகளுக்காக பதக்கங்களையும் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் ஒன்று அல்லது இரண்டு மாணவிகள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மன்னிக்கவும்... ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமல்ல; இன்னும் அதிகமான மாணவிகள் இருந்திருக்க வேண்டும்.

இன்று தில்லி ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சில புதிய முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நீங்கள் அனைவரும், அனைத்து மாணவர்களும் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் மனதின் ஏதோ ஒரு மூலையில் வேறு ஏதோ ஒன்று ஓடிக்கொண்டிருக்க வேண்டும். நான் பாபா பாகேஷ்வர் அல்ல. ஆனால் உங்கள் மனதில் நிச்சயமாக ஏதாவது இருக்கும்.

ஒவ்வொரு மாணவருக்கும் தங்களுடைய எதிர்காலம் குறித்த ஒரு கற்பனை இருக்கிறது. சிலர் தங்களுடைய முதல் சம்பளத்திற்காகக் காத்திருக்கிறார்கள். சிலர் ஒரு புதிய நகரத்தில் புதிய தொடக்கத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். சில நண்பர்கள் தங்களுடைய முதல் தொழில் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். சிலர் அடுத்த போட்டித் தேர்வுகளை இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் பாதையும் வேறுபட்டது. ஒவ்வொருவரின் கனவும் வேறுபட்டது. ஆனால் உங்கள் அனைவரது மனதிலும் ஒரு பொதுவான உணர்வு இருக்கிறது.

நீங்கள் ஐஐடி தில்லியில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்த அந்த நாளை நினைத்துப் பாருங்கள். இன்று பட்டமளிப்பு விழா நாள் வந்துவிட்டது. நேற்றுதான் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது போல் இருந்தது; அதற்குள் பட்டமளிப்பு விழாவும் வந்துவிட்டதே என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

அறிமுக நிகழ்ச்சியிலிருந்து பட்டமளிப்பு விழா வரை நீங்கள் மேற்கொண்ட இந்தப் பயணம் உங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்திருக்கும். அதே நேரத்தில், உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்கப்போகிறது என்ற உற்சாகமும் உங்களுக்குள் இருக்கும். அதனால்தான் நான் சொல்கிறேன் — இந்தத் தருணத்தை முழுமையாக அனுபவியுங்கள்.

 எதிர்காலத்தில் உங்கள்மீது பெரிய பொறுப்புகள் வரும்போது, இந்தப் பழைய நினைவுகள் நிச்சயமாக உங்களை மீண்டும் அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்லும். அந்த நினைவுகள் உங்களுக்கு புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் அளிக்கும்.

ஒவ்வொரு விடுதிக்கும் தனித்தனி நினைவுகள் உள்ளன — குமாவுன், அராவலி, காரகோரம், விந்தியாச்சல், நீலகிரி, கைலாஷ், ஹிமாத்ரி என ஒவ்வொரு விடுதியுடனும் பல நினைவுகள் இணைந்திருக்கின்றன.

விடுதிகளுக்கு இடையிலான போட்டிகள், பழைய சண்டைகள் என நீங்கள் புறப்படுவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்க வேண்டிய எத்தனையோ கதைகள் இருக்கின்றன.

நண்பர்களே,

இது படிப்பைப் பற்றி மட்டுமே அல்ல.

இன்று உங்களில் சிலரை ஜியா சராயின் அவல் உணவு அழைத்துக் கொண்டிருக்கலாம். சிலரது மனதில் சத்புரா விடுதியின் உணவகத்தில் கிடைத்த பராத்தாக்கள் நினைவுக்கு வந்திருக்கலாம். உங்களில் சிலர் ‘விண்ட் டி’யில் இன்னும் சில தருணங்களைச் செலவிட வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அங்கு சென்றால் என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள்.

சிலர் தாங்கள் படித்த துறைக்கு இன்னுமொரு முறை சென்று பார்க்க வேண்டும் என்று விரும்பலாம். இன்னும் சிலர் தங்களுக்குப் பிடித்தமான சந்திப்பு இடத்தில் மீண்டும் ஒருமுறை அமர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்.

நண்பர்களே,

இந்த உணர்ச்சிபூர்வமான தருணத்தில் நான் உங்களிடம் ஒன்றைச் சொல்ல வேண்டும். வாழ்க்கை எப்போதெல்லாம் பின்னோக்கிப் பார்க்கும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறதோ, அப்போதெல்லாம் இந்த வளாக வாழ்க்கை உங்கள் நினைவுக்கு வரும். உங்களுடைய குடும்பமாகவே மாறிய நண்பர்கள், ஆசிரியர்கள், வழிகாட்டிகள் மற்றும் உங்களுக்கு ஆதரவாக இருந்த பணியாளர்கள் அனைவரும் நினைவுக்கு வருவார்கள்.

உங்களைப் போன்ற திறமைகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பேராசிரியர்களை நீங்கள் நினைவுகூர்வீர்கள். படிப்படியாக உங்கள் இல்லமாகவே மாறிப்போன இந்த ‘நிறுவனத்தையும்’ நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள். உங்கள் ஒவ்வொரு வெற்றியிலும் அவர்களை நீங்கள் நினைவுகூர்வீர்கள். அவர்களுக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள்.

எனவே, நீங்கள் இங்கிருந்து வெளியேறும்போது, இவர்களை உங்கள் வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க சொத்தாக உடன் எடுத்துச் செல்லுங்கள். அவர்களை மறந்துவிடாதீர்கள். அவர்களைப் பின்னால் விட்டுவிடாதீர்கள். அவர்களையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.

என்னுடைய ஒரு வேண்டுகோள் — நீங்கள் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு, இங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் மேலும் ஒரு முறை சந்தியுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும், இந்த உறவை என்றென்றும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

நண்பர்களே,

உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்தான் நீங்கள் இங்கிருந்து வெளியேறுகிறீர்கள்.

 

உலக நாடுகளுக்கு இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளும் கணிசமான வேகத்தில் மாறி வருகின்றன. உலகளாவிய அதிகாரச் சமநிலையும் ஒவ்வொரு தருணமும் மாறிக்கொண்டிருக்கிறது.

இதற்குப் பின்னால் மிகப்பெரிய சக்தியாக இருப்பது தொழில்நுட்பத்தின் வேகம்தான்.

இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் எப்படி இருக்கும் என்பதை யாராலும் உறுதியாகக் கூற முடியாது.

ஆனால் நண்பர்களே,

மாற்றத்தின் காலம் எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் சவால்களும் வரும்; புதிய வாய்ப்புகளும் உருவாகும். உலகம் மாறும். தொழில்நுட்பம் மாறும். தொழில்கள் மாறும். பணிகளும் மாறும். ஆனால் இவை அனைத்திற்கும் நடுவில், நான் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் — தொடர்ந்து கற்றுக்கொள்பவர்கள்தான் தொடர்ந்து வெற்றி பெறுவார்கள். புதிய சவால்களுக்கு புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கத் துணிபவர்கள், சவால்களையே வாய்ப்புகளாக மாற்றுவார்கள். இதைத்தான் நீங்கள் தில்லி ஐஐடியில் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் பட்டம் எதைச் சொல்கிறது? நீங்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றீர்கள், நல்ல மதிப்பெண் சராசரியைப் பெற்றீர்கள் அல்லது நல்ல வேலைவாய்ப்பைப் பெற்றீர்கள் என்பதற்கான சான்று மட்டும்தானா அது? நிச்சயமாக, இவை அனைத்துக்கும் அவற்றுக்கான முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், உங்கள் பட்டம் உலகிற்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன் — கடினமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உங்களுக்குத் தெரியும். தில்லி ஐஐடியில் நீங்கள் மேற்கொண்ட பயணத்தை நினைத்துப் பாருங்கள். இங்கு வந்து சேர்வது எளிதாக இருக்கவில்லை. படிப்பதும் எளிதாக இருக்கவில்லை. ஆனால் நீங்கள் ஒருபோதும் மனம் தளரவில்லை. இந்தப் பட்டம் ஒரே நாளில் கிடைத்துவிடவில்லை. ஒவ்வொரு பாடமும், ஒவ்வொரு செயல்திட்டமும், இடைத்தேர்வும், இறுதித் தேர்வும் என ஒவ்வொரு சிறிய படியும் உங்களை இன்று இந்த நிலைக்கு அழைத்து வந்திருக்கிறது. வாழ்க்கையும் இதே கொள்கையில்தான் இயங்குகிறது. ஒரு சவால் மிகப் பெரியதாகத் தோன்றும்போதெல்லாம் பயப்படாதீர்கள். அந்தச் சவாலைச் சிறிய பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஆய்வகங்களில் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். சில பிரச்சினைகளுக்கு இனி தீர்வே இல்லை என்பது போலத் தோன்றியிருக்கும். சில கணினி மாதிரியை தயாரிக்க பல மணி நேரங்களோ அல்லது பல நாட்களோ எடுத்திருக்கும். ஆனால் இறுதியில் அவற்றுக்குத் தீர்வு கண்டீர்கள்; புதிதாக ஒன்றையும் உருவாக்கினீர்கள். வாழ்க்கையிலும் சிரமங்கள் வரும். ஆனால் சிரமங்களின் இயல்பு என்னவென்றால், அவை ஒருபோதும் தனியாக வருவதில்லை. அவை தங்களுடன் வாய்ப்புகளையும் கொண்டு வருகின்றன. எனவே, ஒவ்வொருவரும் விழிப்புடன் இருங்கள். எப்போதும் கவனமாக இருங்கள். இந்த நிறுவனம் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றை தொடர்ந்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நண்பர்களே,

வாழ்க்கையின் சில நடைமுறை அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வளாக வாழ்க்கையும், வளாகத்திற்கு வெளியேயான வாழ்க்கையும் மிகவும் வேறுபட்டவை. ஐஐடியில் நடைபெறும் தேர்வுகளுக்கு ஒரு பாடத்திட்டம் இருக்கும். ஆனால் வாழ்க்கை என்னும் தேர்வில், அனைத்துமே பாடத்திட்டத்திற்கு வெளியேதான் இருக்கும். இதை நினைவில் கொள்ளுங்கள். வளாக வாழ்க்கையில் எல்லாமே தெளிவாக இருந்தது — என்ன படிக்க வேண்டும், எந்தப் பணியை முடிக்க வேண்டும், எந்தத் தேர்வை எழுத வேண்டும் என்பது தெரிந்திருந்தது. ஆனால் வாழ்க்கை அப்படி இயங்குவதில்லை. இங்கு குறிப்பிட்ட பாடத்திட்டம் எதுவும் கிடையாது; கேள்வித்தாளும் கிடையாது. பல நேரங்களில், உண்மையான கேள்வி என்ன என்பதைக்கூட யாரும் உங்களிடம் சொல்ல மாட்டார்கள். அதை நீங்கள்தான் கண்டறிய வேண்டும். பல ஐஐடி முன்னாள் மாணவர்களின் வாழ்க்கைப் பயணங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் வெற்றிக்குக் காரணம் சரியான பதில்களை அளித்தது மட்டுமல்ல; உலகமே கேட்பதை நிறுத்திவிட்ட கேள்விகளை அவர்கள் அடையாளம் கண்டது அறிந்துகொண்டதுதான். மற்றவர்கள் தீர்க்க முடியாதவை என்று ஏற்றுக்கொண்ட பிரச்சினைகளுக்கு அவர்கள் தீர்வு கண்டனர். அதனால்தான், உங்கள் ஆர்வத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருங்கள்; கற்றுக்கொள்ளும் உந்துதலை விழிப்புடன் வைத்திருங்கள்; உங்கள் விழிப்புணர்வை கூர்மையாக வைத்திருங்கள். கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்படுவதை கேள்விக்கு உட்படுத்துங்கள்; தீர்வுகளைக் கண்டறியும் துணிவைப் பெற்றிருங்கள். இந்தச் சிந்தனை உங்களுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கித் தரும்.

நண்பர்களே,

இன்றைய காலகட்டத்தில் நமது சவால்கள் வேறுபட்டவை. அதேபோல், நமது பொறுப்புகளும் வேறுபட்டவை. அடுத்த 30 முதல் 35 ஆண்டுகளில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுமே வளர்ச்சியடைந்த இந்தியாவின் பயணத்தை வடிவமைக்கும். எனவே, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அது நாட்டுக்கு எவ்வாறு பயனளிக்கும், நாட்டின் எந்தத் தேவையை அது நிறைவேற்றும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இன்று இந்தியா பொருளாதாரத் தற்சார்பு, தொழில்நுட்பத் தற்சார்பு, தொழில்துறைத் தற்சார்பு ஆகியவற்றை நோக்கிப் பயணித்து வருகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அடித்தளத்தின் மீது நீங்கள் ஒரு பிரமாண்டமான, அழகான வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும்.

நண்பர்களே,

இந்தப் பயணத்தில் உங்களுடைய பங்கு மிகப்பெரியது. இளைஞர்கள் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு நாடும் வலிமையாக இருக்கும். இந்த நோக்கத்துடன், ஒரு காலத்தில் இளைஞர்களுக்காக மூடப்பட்டிருந்த பல துறைகளை நாம் தற்போது திறந்துவிட்டோம். நவீன கொள்கைகளின் காரணமாக, இளைஞர்களுக்காகப் புதிய துறைகள் உருவாகி வருகின்றன.

நண்பர்களே,

கடந்த முறை உங்கள் மூத்த மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் நான் இணையவழியாகப் பங்கேற்றபோது, விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து பேசினேன். அப்போது, இந்தத் துறையில் பெரும்பாலான பணிகள் அரசாங்கத்தால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இன்று, அதே விண்வெளித் துறை ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கான வாய்ப்புகளின் வானமாக மாறியுள்ளது. நமது இளைஞர்கள் ஏவுகணை வாகனங்களை உருவாக்குகிறார்கள், ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துகிறார்கள், உலகில் ஒரு சில நாடுகளால் மட்டுமே சாதிக்க முடிந்த சாதனைகளையும் நிகழ்த்துகிறார்கள். எங்கோ ஓர் இடத்தில், ஓர் இளம் பொறியாளர் பெருமையுடன், “எங்கள் குடும்பத்தில் ராக்கெட் உருவாக்கிய முதல் நபர் நான்” என்று கூறுகிறார்.

செமிகண்டக்டர் துறையும் இதற்கு மற்றொரு சிறந்த உதாரணமாகும். இந்தத் திசையில் நாம் நடவடிக்கைகளை எடுத்தபோது, இந்தியாவின் திறன் குறித்து சிலர் சந்தேகம் தெரிவித்தனர். இந்தியாவால் இதைச் செய்ய முடியாது என்று அவர்கள் கூறினர். ஆனால் இன்று, முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி தொடங்கியுள்ளது. நான் உறுதியாக நம்புகிறேன் — குறுந்தகடு முதல் கப்பல் வரை அனைத்தும் இங்கேயே, உங்கள் கைகளால் உருவாக்கப்படும். எங்கோ ஓர் இடத்தில், ஓர் இளைஞர் நம்பிக்கையுடன், “இந்தியாவில் குறுந்தகடு தயாரித்த எங்கள் குடும்பத்தின் முதல் நபர் நான்” என்று கூறுகிறார்.

நண்பர்களே,

நமது ட்ரோன் துறையைப் பாருங்கள். இளைஞர்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். வேளாண்மையில் ட்ரோன் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன, மருந்துகள் கொண்டு செல்லப் படுகின்றன, பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்புப் பணிகளிலும் அவை உதவி வருகின்றன. எங்கோ ஓர் இடத்தில், ஓர் இளம் கண்டுபிடிப்பாளர், “எங்கள் குடும்பத்தில் ட்ரோன் விமானத்தை உருவாக்கிய முதல் நபர் நான்” என்று கூறுகிறார்.

நண்பர்களே,

இந்தியாவின் புதிய தொழில் நிறுவனப் புரட்சியை உங்களைப் போன்ற இளைஞர்கள்தான் உருவாக்கி, முன்னெடுத்துச் செல்கிறார்கள். பல புதிய தொழில் நிறுவனங்களின் நிறுவனர்கள் இந்த நிறுவனத்திலிருந்தே உருவாகியுள்ளனர். ஒரு கல்வி நிறுவனம் இவ்வளவு சாதிக்க முடியும் என்றால், நாடு முழுவதும் உருவாகி வரும் வலிமையை நினைத்துப் பாருங்கள். பெரும் மதிப்புமிக்க புதிய தொழில் நிறுவனங்கள், மின்னணுப் பணப்பரிவர்த்தனைகள், நிதித் தொழில்நுட்பம் ஆகியவை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முதன்முறையாகப் புதிதாக ஏதாவது செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளன.

நண்பர்களே,

இந்தியா புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள இன்னும் பல துறைகள் உள்ளன. அந்தத் துறைகளில் நாடு உங்களைப் பொறுப்புடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்க்கிறது. செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள், முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள், ஆழ்கடல் ஆய்வு, மின்கலன்கள், மின்சாரச் சேமிப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, மின்சாரப் போக்குவரத்து, குவாண்டம் கணினியியல் என அனைத்துத் துறைகளும் உங்கள் திறமை, புதுமைச் சிந்தனை மற்றும் தலைமைத்துவத்திற்காகக் காத்திருக்கின்றன. நானும் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

நண்பர்களே,

உங்கள் முன்னால் இருக்கும் மற்றொரு மிகப்பெரிய வாய்ப்பு ஆராய்ச்சித் துறையாகும். நாட்டிற்கு புதிய ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. அதற்கும் நாம் சம அளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பிரதமரின் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டம் திறமைமிக்க இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. புதிய சிந்தனைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்காக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. ஆராய்ச்சித் துறைக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை நிதி ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதேபோல், நண்பர்களே, கல்வி சார்ந்த வளங்களை எளிதாகப் பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ திட்டத்தின் மூலம், புகழ்பெற்ற ஆய்வு இதழ்கள் இப்போது கூடுதல் கட்டணம் இல்லாமல் மிகச் சிறிய நகரங்களிலும் கிடைக்கின்றன.

நண்பர்களே,

இந்தத் திசையில் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன். அது உங்கள் ஆராய்ச்சிப் பணிக்கான அர்ப்பணிப்பின் மூலமே சாத்தியமாகும். நாடு அதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் மீது நாடு நம்பிக்கை வைத்துள்ளது.

நண்பர்களே,

இப்போது கவனச் சிதறல் குறித்து பேசுகிறேன். நாம் பெரிய இலக்குகளை அடைவதற்காகப் பயணிக்கும்போது, ஒரு முக்கியமான கவனச் சிதறல் நம்மை எதிர்கொள்கிறது . ஒப்பீடு, யாருக்கு எவ்வளவு ஊதியம் கிடைத்தது, எந்த நிறுவனம், எந்த நகரம், எந்த நாடு, யார் புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்கினார் என மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது. இன்றைய சமூக ஊடக காலத்தில், இந்த ஒப்பீடு ஒருபோதும் முடிவதில்லை.

ஆனால் நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கை என்பது முன்னிலைப் பட்டியல் அல்ல. உங்கள் உண்மையான போட்டி மற்றவர்களுடன் அல்ல; உங்களுடன்தான். ஒவ்வொரு நாளும், நேற்றைவிட இன்று சிறப்பாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள். அதேபோல், உங்கள் உடல் நலத்தையும் மனநலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

நண்பர்களே,

மீண்டும் ஒருமுறை அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும், உங்கள் ஆசிரியர்களுக்கும், இந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கட்டும். நீங்கள் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டிக்கொண்டே இருக்கட்டும்.

இந்த நல்வாழ்த்துகளுடன், மிக்க நன்றி.

வணக்கம்!

பொறுப்புத் துறப்பு — இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் ஆற்றப்பட்டது.

(Release ID: 2296481)

***

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2307860) வருகையாளர் எண்ணிக்கை : 11