குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஷில்லாங்கில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 7:25PM by PIB Chennai
ஷில்லாங்கில் உள்ள சோசோ தாம் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று கலந்துகொண்டார். மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மேகாலய மக்களுக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார்.
ஒவ்வொருவரின் சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் மதிப்பதே உண்மையான மதச்சார்பின்மை என்று திரு சி. பி. ராதாகிருஷ்ணன் கூறினார். மக்கள் பரஸ்பர மரியாதையுடனும் நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், சமூகத்தின் எந்தப் பிரிவினரும் பின்தங்கிவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசுத் துணைத்தலைவர், தொலைதூரக் கிராமங்களை நகரங்களுடன் இணைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் வடகிழக்குப் பகுதிகளில் சுமார் ரூ. 47,000 கோடி செலவில் ஏறத்தாழ 46,000 கிலோமீட்டர் கிராமப்புறச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஜல் ஜீவன் இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்ட மேகாலயாவின் நடவடிக்கையையும் அவர் பாராட்டினார்.
2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை அடையும் தொலைநோக்குப் பார்வை குறித்துப் பேசிய திரு சி. பி. ராதாகிருஷ்ணன், மேகாலயாவின் வளமான சுற்றுச்சூழல், கலாச்சாரம், மரபுகளைப் பாதுகாப்பதுடன், சமூகத்தின் எந்தப் பிரிவினரும் கைவிடப்படாத வகையிலான உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மாநிலத்தின் வாழும் வேர் பாலங்கள் குறித்தும், சோஹ்ரா, மவ்ஸின்ராம் ஆகிய இடங்களின் நிலப்பரப்புகள் பற்றியும் குறிப்பிட்ட அவர், இயற்கையுடன் இயைந்து வாழ்வது குறித்த மதிப்புமிக்க பாடங்களை மேகாலயா கற்றுத் தருகிறது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் திரு கான்ராட் கே. சங்மா, துணை முதலமைச்சர்கள் திரு பிரஸ்டோன் டைன்சாங், திரு ஸ்னியாப்ஹலாங் தார், அமைச்சர் திரு சான்போர் ஷுல்லாய், தலைமைச் செயலாளர் டாக்டர் ஷகில் பி. அகமது, முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2307625®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2307679)
வருகையாளர் எண்ணிக்கை : 4