மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
என்சிஇஆர்டி-யின் 66-வது நிறுவன நாள் கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 5:35PM by PIB Chennai
மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இன்று (01.09.2026) புதுதில்லியில் உள்ள தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற அதன் 66-வது நிறுவன நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.என்சிஇஆர்டி, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடப்புத்தகங்கள், கற்றல் துணைப் பொருட்கள், பாடத்திட்டக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் வாயிலாக இந்தியக் கல்வி அமைப்பில் ஒரு முக்கியப் பங்காற்றி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். பள்ளிக் கல்வியில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கான விரிவான கட்டமைப்பைத் தேசிய கல்விக் கொள்கை 2020 வழங்கியுள்ளது என்றும், இது மாணவர்களின் முழுமையான வளர்ச்சி, படைப்பாற்றல், திறனாய்வுச் சிந்தனை, அனுபவக் கற்றல் மற்றும் திறன் அடிப்படையிலான கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.இச்சூழலில், அடித்தள நிலைக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு, பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான புதிய பாடப்புத்தகங்களின் உருவாக்கம் ஆகியவற்றில் என்சிஇஆர்டி ஆற்றியுள்ள பணிகளை அவர் எடுத்துரைத்தார். பன்மொழிக் கல்விக்கான என்சிஇஆர்டி-யின் முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சர், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து 22 மொழிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அத்துடன் 93 பழங்குடியின மொழிகள் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் 121 தொடக்கக் கல்விப் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறிவின் பங்கு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, என்சிஇஆர்டி தனது ஆராய்ச்சிச் சூழலமைப்பையும் தொழில்நுட்பப் பயன்பாட்டையும் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் திரு பிரல்ஹாத் ஜோஷி வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305565®=3&lang=1
(Release ID: 2305565)
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306594)
வருகையாளர் எண்ணிக்கை : 8