PIB Backgrounder
மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக்கும் முன்னெடுப்பு
நாட்டின் ஏற்றுமதியை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துதல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2026 11:50AM by PIB Chennai
இந்தியாவின் ஏற்றுமதிப் பயணம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதுடன், இந்த வேகத்தைத் தொடர ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியமாகிறது. ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதித் திட்டமிடல் மையமாக மாற்றுவதே மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக்கும் முன்னெடுப்பின் (டிஇஹெச்) முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம், உலகளாவிய சந்தை வாய்ப்புகளைக் கொண்ட பொருட்கள், சேவைகளைக் கண்டறிந்து உள்ளூர் உற்பத்தியாளர்கள் சர்வதேச சந்தையுடன் இணைப்பைப் பெறுகின்றனர். ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், நிறுவனங்கள், தொழில்துறைகளை ஒருங்கிணைக்கும் கட்டமைப்பாக இது விளங்குகிறது. மாவட்டங்களின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை உலகளாவிய சந்தையுடன் இணைப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பலம் பெறுகின்றன.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. வெளிநாட்டுச் சந்தைகள் மூலம் ஈட்டப்படும் ஒவ்வொரு ரூபாயும் உள்நாட்டில் வேலைவாய்ப்புகளையும், வருவாயையும், தொழில்துறையையும் மேம்படுத்துகிறது. இந்தியாவின் மொத்தப் பொருட்கள், சேவைகள் ஏற்றுமதி 2024-25-ல் 825.25 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டி சாதனை படைத்துள்ளதுடன், 2025-26-ல், சுமார் 863.11 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. பல தசாப்தங்களாக ஏற்றுமதி நடவடிக்கைகள் குறிப்பிட்ட சில தொழில்துறை மையங்கள், துறைமுக நகரங்களைச் சுற்றியே இருந்து வந்தன. பல சிறு நகரங்கள், மாவட்டங்கள் தனித்துவமான, உயர்தரப் பொருட்களைக் கொண்டிருந்தபோதிலும் ஏற்றுமதிப் பட்டியலில் இடம்பெறாமல் இருந்தன. இந்த நிலையை மாற்றியமைக்க ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவத்தையும் பயன்படுத்தி ஏற்றுமதி வளர்ச்சியை அதிகரிக்க மாவட்ட அளவிலான ஏற்றுமதி வியூகத்தை அரசு முன்னெடுத்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தவும், ஏற்றுமதித் திறனை வெளிக்கொணரவும் மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக மாற்றும் முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. உள்ளூர் நிறுவனங்கள் உலகளாவிய சந்தைகளை அணுகவும், போட்டித்தன்மையை மேம்படுத்தவும், மாவட்ட அளவிலான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது. தற்சார்பு இந்தியா இயக்கத்துடனும், உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் இத்திட்டம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இத்திட்டம், நாட்டின் 770-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
இத்திட்டம் நிதி வழங்கும் திட்டமாக மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்களை ஒன்றிணைக்கும் கட்டமைப்பாகச் செயல்படுகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி ஏற்றுமதி, உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன. மாவட்ட அளவில் ஏற்றுமதி சார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலம் போட்டித்தன்மை மேம்படுத்தப்படுகிறது. மாநில அளவில் ஏற்றுமதி ஊக்குப்புக் குழுக்களும், மாவட்ட அளவில் மாவட்ட ஏற்றுமதி ஊக்குப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் கண்டறியப்பட்டு நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன. மாவட்ட ஏற்றுமதிச் செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்கட்டமைப்பு, தளவாட வசதிகள் மதிப்பீடு செய்யப்பட்டுத் தேவையான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
உள்ளூர் பொருட்கள் சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தரம், பரிசோதனை வசதிகள், பேக்கேஜிங், வர்த்தக முத்திரை, சான்றிதழ்கள் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் அணுகல் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வணிகங்களுக்கும் பரந்த சந்தை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அஞ்சலக ஏற்றுமதி மையங்கள் குறைந்த கட்டணத்தில் ஆவணங்கள், பேக்கேஜிங் சேவைகளை வழங்குகின்றன.
1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற ஏற்றுமதி இலக்கை நோக்கி நாடு முன்னேறிவரும் வேளையில், மத்திய அரசு, மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மூலம் மாவட்டங்களின் உற்பத்தித் திறன் ஏற்றுமதி வாய்ப்புகளாக மாறி வருகின்றன. இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பு இந்தியாவின் ஏற்றுமதிச் சூழலமைப்பை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305826®=3&lang=1
***
SS/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306052)
வருகையாளர் எண்ணிக்கை : 10