பிரதமர் அலுவலகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 8:54PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 01 வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-வது தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் இன்று (01.09.2026) பங்கேற்றார்.
இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்நிகழ்வில், இதுவரை அடைந்த முன்னேற்றங்களை தலைவர்கள் ஆய்வு செய்ததுடன், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பங்கை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பிரதமர் தமது உரையை, கிர்கிஸ்தான் அதிபர் திரு சாதிர் ஜபரோவ் அவர்களின் அன்பான உபசரிப்புக்கு நன்றி தெரிவித்துத் தொடங்கினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பால் உருவாக்கப்பட்ட உரையாடல், ஒத்துழைப்பு ஆகியவற்றின் வலுவான பாரம்பரியத்தின் அடிப்படையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுப்பதற்கு இந்த உச்சிமாநாடு ஒரு உகந்த தருணம் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த உச்சிமாநாட்டில், பாதுகாப்பு, போக்குவரத்து இணைப்பு, வாய்ப்புகள் ஆகியவை குறித்த தொலைநோக்குப் பார்வையை இந்தியா பகிர்ந்து கொண்டதாகவும், இப்போது இந்த மூன்று கூட்டுப் பணித்திட்டத் தூண்களிலும் உறுதியான விளைவுகளை அடைய இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மோதல்களைப் போர்க்களத்தில் தீர்க்க முடியாது என்றும், பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே முன்னேறுவதற்கான ஒரே வழி என்றும் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தல் என்பதைச் சுட்டிக்காட்டி, பயங்கரவாதச் சூழலைத் தகர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எந்தவிதமான இரட்டை நிலைப்பாடுகளும் இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். யூரேசியா பிராந்தியத்தின் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானில் அமைதியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்ட அவர், அந்நாட்டிற்கு இந்தியா வழங்கும் வளர்ச்சி, மனிதாபிமான உதவிகளை எடுத்துரைத்தார்.
கூட்டு முன்னேற்றத்துக்கும் செழிப்புக்கும் வலுவான, நம்பகமான இணைப்பு முயற்சிகள் முக்கியமானவை என்று பிரதமர் கூறினார். சந்தைகளை இணைத்து, வர்த்தகத்தை மேம்படுத்தி, வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் இணைப்பு முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். அத்தகைய முயற்சிகள் நாடுகளின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொழில்நுட்பம், தொழில்முனைவு, புத்தாக்கம், புத்தொழில் நிறுவனங்கள் ஆகிய துறைகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் மக்களுக்கு மகத்தான வாய்ப்புகளைத் திறக்கின்றன என்று அவர் தெரிவித்தார். கிர்கிஸ்தானின் தலைமைத்துவத்தின் கீழ் இளைஞர் மேம்பாட்டில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டதை அவர் பாராட்டினார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதல் பாரம்பரிய நாகரிக கலந்துரையாடல் மன்றத்தை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைவதாகப் பிரதமர் கூறினார். உறுப்பு நாடுகளிடையே நாகரிகப் பரிமாற்றங்களை உருவாக்கும் நோக்கில் இது இந்தியாவின் முதன்மை முன்முயற்சி என அவர் தெரிவித்தார்.
பிஷ்கெக் பிரகடனத்தைத் தவிர, பருவநிலை, அணுசக்திப் பாதுகாப்பு, எரிசக்தி சேமிப்பு, போதைப்பொருள்களுக்கு எதிரான போராட்டம் போன்ற பல்வேறு அம்சங்களில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதுடன், இருபதுக்கும் மேற்பட்ட முடிவுகளும் அறிக்கைகளும் இந்த உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனத்தில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாகச் சேர்ப்பது; பாரம்பரிய நாகரிக உரையாடல் மன்றம்; இளம் விஞ்ஞானிகள் மன்றம்; இளம் எழுத்தாளர்கள் மாநாடு போன்ற பிஷ்கெக் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள பல முன்முயற்சிகளுக்கு இந்தியா தலைமை தாங்கி ஆதரவளித்தது.
உச்சிமாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக கிர்கிஸ்தான் அதிபர் திரு சாதிர் ஜபாரோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். பரஸ்பர முன்னேற்றம், செழிப்புக்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2305735®=48&lang=1
(Release ID : 2305735)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305768)
வருகையாளர் எண்ணிக்கை : 8