மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லட்சத்தீவின் அகத்தியில் மீன்வள மேம்பாடு குறித்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 2:34PM by PIB Chennai

மத்திய அரசின் மீன்வளத் துறை, இன்று (2026 ஆகஸ்ட் 31) லட்சத்தீவின் அகத்தியில் மீன்வள மேம்பாடு தொடர்பான நிகழ்ச்சியை நடத்தியது. சூரை மீன், கடற்பாசி, அலங்கார மீன்வள ஆதாரங்கள் போன்ற உயர் மதிப்புள்ள இனங்களை நிலையான முறையில் பயன்படுத்தும் அதே வேளையில், மீன் உற்பத்தியாளர் அமைப்புகளையும் மீன்வளக் கூட்டுறவு சங்கங்களையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அலங்கார வண்ண மீன்வள மேம்பாட்டிற்கான “ மிஷன் ரங்கீன் மச்லி 2031” என்ற உத்திசார் செயல் திட்டத்தை வெளியிட்டார்.

இந்த மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல், லட்சத்தீவு, தாத்ரா - நாகர் ஹவேலி, டாமன் - டையூ ஆகியவற்றின் நிர்வாகி திரு பிரஃபுல் கோடே படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட மீன் வளர்ப்போர், மீனவர்கள், மீன்வளத் துறை அதிகாரிகள், தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், லட்சத்தீவை நாட்டின் விலைமதிப்பற்ற கடல்சார் சொத்து என்று கூறினார்.  நீலப் பொருளாதாரத்தின் மூலம் நிலையான வளர்ச்சியை உருவாக்குவதில், மத்திய அரசு, லட்சத்தீவு நிர்வாகம், அறிவியல் நிறுவனங்கள், மீனவ சமூகங்கள் ஆகியவற்றின் கூட்டு அர்ப்பணிப்பை இந்த மக்கள் தொடர்புத் திட்டம் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.  லட்சத்தீவு கடல் பகுதியில் 1 லட்சம் டன்களுக்கும் அதிகமான மீன்வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார். மேலும், மீனவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், உலகளாவிய கடல் உணவுச் சந்தைகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும், நிலையான மீன்பிடி நடைமுறைகளின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்நிகழ்ச்சியின் போது, ​ பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை குடியரசு துணைத்தலைவர் வழங்கினார்.

மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பேசுகையில், லட்சத்தீவின் மீனவ சமூகங்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, மீனவர்களின் வருமானத்தை உயர்த்த ஒரு விரிவான செயல்திட்டத்தைத் தயாரிப்பதில் மத்திய அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த மக்கள் தொடர்புத் திட்டம் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304929&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2305041) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada , Malayalam