PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவில் அணுசக்தியின் பயன்பாடுகள், பாதுகாப்பு, தயார்நிலை

இடுகை இடப்பட்ட நாள்: 28 AUG 2026 10:15AM by PIB Chennai

இந்தியாவின் அணுசக்தித் திட்டம் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கும் கொள்கையின் அடிப்படையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒழுங்குமுறை, மேற்பார்வை, பல அடுக்கு பாதுகாப்பு முறைகள், விரிவான அவசரகால ஏற்பாடுகள் ஆகியவற்றுடன் பொதுமக்களையும் சுற்றுச்சூழலையும் அணுசக்தி பாதுகாக்கிறது. மின்சார உற்பத்திக்கும் அப்பால் சுகாதாரம், விவசாயம், உணவுப் பாதுகாப்பு, தொழில்துறை, அறிவியல் ஆராய்ச்சி, தூய்மையான ஹைட்ரஜன் உற்பத்தி போன்ற பல துறைகளுக்கும் அணுசக்தி உறுதுணையாக விளங்குகின்றது. சாந்தி சட்டம், 2025, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அணுசக்தி இயக்கம், உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் வளர்ச்சியின் எதிர்காலத் தூணாக அணுசக்தி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

தாராப்பூர் அணுமின் நிலையம் தொடங்கப்பட்ட நாள் முதல், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அணுசக்தி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தற்போது வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்குத் தேவையான மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்கிறது. சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து அணுசக்தி பாதுகாப்புக்கான வழிமுறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் ஏழு இடங்களில் 24 அணு உலைகள் இயங்கி வருகின்றன. கூடுதலாக 9 உலைகள் அமைக்கப்பட்டு வருவதுடன், மேலும் 10 உலைகளுக்கான கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான உலைகளை உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அணுசக்தி தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிதல், துல்லியமான புற்றுநோய் சிகிச்சை, நவீன மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றில் அணுசக்தி தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், டாடா நினைவு மையம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் புதிய மருத்துவ முறைகளைக் கண்டறிந்து வருகின்றன. முசாபர்பூர் பகுதியில் புதிய புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கான மக்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் மூலமாக மருத்துவக் உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டு நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன.

விவசாயத் துறையில் கதிர்வீச்சு மூலம் உருவாக்கப்பட்ட புதிய பயிர் வகைகள் அதிக மகசூலைத் தருவதோடு, வறட்சியைத் தாங்கும் திறன் கொண்டவையாக விளங்குகின்றன. பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருட்களைப் பதப்படுத்திக் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதில் கதிர்வீச்சு தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. கனிம வளங்கள் ஆய்விலும் அணுசக்தித் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது. செமிகண்டக்டர், மின்னணுவியல் துறைகளில் இறக்குமதியைக் குறைக்கும் வகையில் புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கல்பாக்கத்தில் அணுசக்தியின் வெப்பத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் உலகின் முதல் ஆலை தொடங்கப்பட்டு தூய்மையான எரிசக்தி இலக்குகள் எட்டப்பட்டு வருகின்றன.

அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல அடுக்கு பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. கதிர்வீச்சு வெளிப்பாட்டைக் குறைந்த அளவில் பராமரிப்பதற்கான நடைமுறைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. கதிரியக்கக் கழிவுகளை அறிவியல் பூர்வமாகப் பாதுகாப்பான முறையில் கையாள்வதற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் நம் நாட்டில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எந்த ஒரு அவசரகாலச் சூழலையும் எதிர்கொள்ளத் தேசிய, மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டுத் தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய நமது பயணத்தில், நீடித்த வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு, தேசத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் அணுசக்தித் துறை தொடர்ந்து முக்கியப் பங்கை வகித்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304032&reg=3&lang=1

***

SS/PD/RJ   


(வெளியீட்டு அடையாள எண்: 2304204) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati