வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மறுசீரமைக்கப்பட்ட பிரதமரின் ஸ்வநிதித் திட்டம் ஓராண்டை நிறைவு செய்தது: கடன் வசதி, டிஜிட்டல் உள்ளடக்கம், வாழ்வாதார வாய்ப்புகள் விரிவாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 AUG 2026 5:07PM by PIB Chennai
நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு பிணையில்லா மூலதனக் கடன் வழங்குவதற்கான மறுசீரமைக்கப்பட்ட பிரதமரின் ஸ்வநிதி திட்டம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. 2030 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இத்திட்டம், முறையான கடன் உதவி, டிஜிட்டல் நிதி உள்ளடக்கம், சமூகப் பாதுகாப்பு, தொழில்முனைவு ஆகியவற்றை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. 50 லட்சம் புதிய பயனாளிகள் உட்பட மொத்தம் 1.15 கோடி சாலையோர வியாபாரிகளுக்கு பயனளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட முதல் ஆண்டில், 10.56 லட்சம் புதிய பயனாளிகளுக்கு ரூ.6,294 கோடி மதிப்பிலான 21.86 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. யுபிஐ வசதியுடன் கூடிய ரூ.30,000 வரை வரம்பு கொண்ட ரூபே கடன் அட்டைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடன் விண்ணப்பம், பரிசீலனை, நிதி வழங்கல் ஆகிய நடைமுறைகள் டிஜிட்டல் கடன் தளம் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளன. சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாடு முழுவதும் 50 சாலையோர உணவு மையங்கள் உருவாக்கப்படவுள்ளன.
இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 78.68 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.19,171 கோடி மதிப்பிலான 1.18 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடனை முறையாக திருப்பி செலுத்தியதற்காக ரூ.421 கோடி வட்டி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. ஸ்வநிதி மூலம் வளம் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்பங்களுக்கு சமூக-பொருளாதார சுயவிவரப் பதிவு மேற்கொள்ளப்பட்டு, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303797®=3&lang=1
------
SS/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303900)
வருகையாளர் எண்ணிக்கை : 11