பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
திறன் மேம்பாட்டுடன் மனவலிமையை மேம்படுத்துவது அவசியம் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2026 4:12PM by PIB Chennai
உலக அளவில் இந்தியா தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ள, திறன்களுடன் சேர்த்து மன வலிமையையும் வளர்ப்பதும் சம அளவில் அவசியம் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற திறன் மேம்பாடு குறித்த வட்டமேசை மாநாட்டில் உரையாற்றிய அவர் வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப, திறன் மேம்பாடு என்பது தனிநபர் சார்ந்த அணுகுமுறையிலிருந்து ஒட்டுமொத்த சமூக முயற்சியாக பரிணமிக்க வேண்டும் என்று கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் அபரிமிதமாக அதிகரித்துள்ளதால், தொடர்ச்சியான கற்றல் இன்றியமையாததாகிவிட்டது என்று அவர் தெரிவித்தார். இன்று ஒருவர் கற்பது நாளையே காலாவதியாகிவிடக்கூடும் என்றும், எனவே தனிநபர்களும் நிறுவனங்களும் தொடர்ந்து கற்றுக் கொண்டு, தங்களைத் தாங்களே தொடர்ந்து மாற்றியமைத்துக் கொண்டு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திறன் மேம்பாடு என்பது திறன்களை வளர்ப்பது அல்லது தனிநபர்களை ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யத் தயார்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். தனிநபர்களும் நிறுவனங்களும் சரியான மனவலிமையை வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது என்று அவர் எடுத்துரைத்தார். உலக அளவில் நிலைத்திருக்க வேண்டுமானால், இந்தியா உலகளாவிய அளவுகோல்களையும் உலகளாவிய உத்திகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திறன் மேம்பாட்டில் தொடர் கற்றல் தளங்களின் பங்கையும் அமைச்சர் எடுத்துரைத்தார். அரசு அதிகாரிகளுக்குத் தொடர் கற்றலை வழங்கும் ஐஜிஓடி தளத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆராய்ச்சியிலும் புத்தாக்கத்திலும் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை, ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான ஆராய்ச்சி, புத்தாக்க மேம்பாட்டு நிதித் திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
நாட்டின் இளம் தொழில்முனைவோர், திறமையையும் தொழில்முனைவையும் கொண்டுள்ளனர் என்றும், அவர்களுக்குச் சரியான சூழலை உருவாக்குவது, வலுவான திறன்களை உருவாக்க உதவும் என்றும் அவர் கூறினார். திறன் மேம்பாட்டிலும் அறிவுப் பரிமாற்றத்திலும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303516®=3&lang=1
(Release ID : 2303516)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303562)
வருகையாளர் எண்ணிக்கை : 11