இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்ற நட்புறவு மிதிவண்டிப் பயணம்: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே தலைமை வகித்தனர்
प्रविष्टि तिथि:
23 AUG 2026 3:04PM by PIB Chennai
இந்தியா நடத்திய பிரிக்ஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, 'ஃபிட் இந்தியா ஞாயிறு மிதிவண்டிப் பயண' இயக்கத்தின் 87-வது வார நிகழ்வாக விசாகப்பட்டினத்தில் பிரிக்ஸ் நட்புறவு மிதிவண்டிப் பயணம் நடைபெற்றது. இதற்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே ஆகியோர் தலைமை வகித்தனர்.
பிரிக்ஸ் நாடுகளிடையே நிலவும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உணர்வை எடுத்துக்காட்டும் வகையில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் இந்த மிதிவண்டிப் பயணத்தில் பங்கேற்றனர். இந்த வார மிதிவண்டிப் பயணமானது 'உன்னத பாரத்' என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு மன்சுக் மாண்டவியா, பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கம் நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக விரிவடைந்து வருவதாகக் கூறினார். மிதிவண்டி ஓட்டுவது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக அமைவதோடு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும் உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இது எரிபொருளைச் சேமித்து நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும் துணைபுரிகிறது என்றார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மிதிவண்டி ஓட்டி நாம் அனைவரும் உடற்தகுதியுடன் வைத்துக்கொள்வோம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஃபிட் இந்தியா மிதிவண்டிப் பயணத்தின் 87-வது வார நிகழ்வு புதுதில்லி, லே, கார்கில், போர்ட் பிளேர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கும், இளைஞர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும் உறுதியளிக்கும் வகையில் 'போதையில்லை பாரதம்' உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302481®=3&lang=1
***
SS/PLM/PD
(रिलीज़ आईडी: 2302509)
आगंतुक पटल : 10