PIB Backgrounder
பிரதமரின் விவசாயிகள் வருவாய் பாதுகாப்பு திட்டம்: குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல்
प्रविष्टि तिथि:
21 AUG 2026 10:43AM by PIB Chennai
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு நியாயமான, விலை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசால் பிரதமரின் விவசாயிகள் வருவாய் பாதுகாப்பு திட்டம் (பிஎம்-ஆஷா) செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையை வலுப்படுத்துவது, விலை குறையும் காலங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குறைந்த விலைக்கு அவசரமாக விற்பனை செய்வதைத் தடுப்பது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட விளைபொருட்கள் நஃபெட், என்சிசிஎஃப் போன்ற மத்திய அமைப்புகள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுகின்றன. 2026-27-ம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.7,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதார் அடிப்படையிலான பயனாளி அங்கீகாரம், இ-நாம், இ-சம்ரித்தி போன்ற டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மூலம் கொள்முதல் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விலை ஆதரவுத் திட்டம், விலை நிலைப்படுத்தலுக்கான நிதி, விலை பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான நிதி, சந்தை சார் நடவடிக்கைகள் ஆகிய நான்கு முக்கியக் கூறுகளை இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. அறுவடைக் காலங்களில் சந்தை விலை குறையும் போது, விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. உள்நாட்டில் பருப்பு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இறக்குமதியைக் குறைக்கவும் துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகியவை மாநிலங்களின் உற்பத்தியில் 100 சதவீதம் வரை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. விலை நிலைப்படுத்தல் நிதியின் மூலம் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகளின் கையிருப்பு பராமரிக்கப்பட்டு விலை உயர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களுக்கு, சந்தை விலைக்கும் ஆதரவு விலைக்கும் உள்ள வித்தியாசத் தொகை விலை பற்றாக்குறையை ஈடுசெய்யும் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. தக்காளி, வெங்காயம் போன்ற எளிதில் அழுகக்கூடிய தோட்டக்கலை பயிர்களுக்கு சந்தை நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பளிக்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 2024-25-ம் ஆண்டில் ரூ.5,437.99 கோடியாக இருந்த செலவினம், 2026-27-ம் (ஆண்டில்) ரூ.7,200 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாகுபடி செலவை விட குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகமாக நிர்ணயிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு நிலையான லாபம் உறுதி செய்யப்படுகிறது. 2026-27-ம் ஆண்டில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.814, சோயாபீனுக்கு ரூ.1,903, கோதுமைக்கு ரூ.1,346, சணலுக்கு அதிகபட்சமாக ரூ.2,293 கூடுதல் வருமானம் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது.
விவசாய உள்கட்டமைப்பு நிதி மூலம் சேமிப்புக் கிடங்குகள், சந்தைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மின்னணு சந்தை (இ-நாம்) தளம் மூலம் ஆயிரக்கணக்கான ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வழியாக பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். உறுதியான கொள்முதல், விலையில் நிலைத்தன்மை, சிறந்த சந்தை நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, நாட்டின் வேளாண் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் பிஎம்-ஆஷா திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301814®=3&lang=1
****
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2302108)
आगंतुक पटल : 8