PIB Backgrounder
செமிகண்டக்டரும் செயற்கை நுண்ணறிவுப் புரட்சியும்
எதிர்காலத்தை பலப்படுத்துதல்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 1:47PM by PIB Chennai
நவீன தொழில்நுட்பத்தின் அடித்தளமாக செமிகண்டக்டர்கள் விளங்குகின்றன. கைப்பேசிகள், வாகனங்கள், செயற்கைக்கோள்கள் முதல் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் வரை பல்வேறு துறைகளின் செயல்பாட்டுக்கு இவை முக்கிய ஆதாரமாக உள்ளன. செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சி மேம்பட்ட சிப்கள், சிறப்புத் தேவைக்கான செயலிகள், உயர் செயல்திறன் கொண்ட கணினி வசதிகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது. இதனால் செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு ஆகிய இரு தொழில்நுட்பங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இணைந்துள்ளன. இந்த ஒருங்கிணைப்பை கருத்தில் கொண்டு, சிப் வடிவமைப்பு, உற்பத்தி, மேம்பட்ட தொகுப்பு தொழில்நுட்பம், கணினி உள்கட்டமைப்பு, உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் என பல்வேறு துறைகளில் இந்தியா தனது திறன்களை விரிவுபடுத்தி வருகிறது.
இந்தியாவின் செமிகண்டக்டர் சூழலுக்கு ரூ.76,000 கோடி ஒதுக்கீட்டுடன் செமிகான் 1.0 திட்டம் அடித்தளமிட்டது. இதன் தொடர்ச்சியாக, உலகளாவிய சூழலமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் ரூ.1,27,500 கோடி ஒதுக்கீட்டுடன் செமிகான் 2.0 திட்டத்திற்கு 2026 ஜூலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டர் உபகரணங்கள், மூலப்பொருட்கள், உற்பத்தி நிலையங்கள், மேம்பட்ட தொகுப்பு, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு ஆகியவை இதன் முக்கிய தூண்களாக உள்ளன. ஆறு மாநிலங்களில் 12 செமிகண்டக்டர் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1.64 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இவற்றில் மூன்று நிலையங்கள் ஏற்கனவே வர்த்தக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
உள்நாட்டு சிப் வடிவமைப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் சிப் முதல் புத்தொழில்கள் வரை (C2S) திட்டத்தின் கீழ் 320 கல்வி நிறுவனங்களில் மின்னணு வடிவமைப்பு தானியங்கி தொழில்நுட்பங்கள் மூலம், 68,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 2026 ஏப்ரல் வரை 75 நிறுவனங்களால் 211 சிப்கள் வடிவமைப்பு நிறைவுபெறும் நிலையை எட்டியுள்ளன. ஏழு சிப்கள் வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், நெதர்லாந்து, ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடனான கூட்டாண்மைகள் உலகளாவிய செமிகண்டக்டர் மதிப்புக் கட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துகின்றன.
சுமார் ரூ.10,372 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம், பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு சூழலை உருவாக்கி வருகிறது. 2026 ஜூன் நிலவரப்படி பகிரப்பட்ட கணினித் திறன் 45,000-க்கும் அதிகமான கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளாக உயர்ந்துள்ளது. 506 விண்ணப்பங்களில் இருந்து 20 உள்நாட்டு அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான முன்மொழிவுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஜூலை 2026 ஜூலை நிலவரப்படி ஏஐ கோஷ் தளத்தில் 14,000-க்கும் மேற்பட்ட தரவுத்தொகுப்புகள், 331 செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இடம்பெற்றுள்ளன.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த 62 முன்மாதிரிகள் உருவாக்கப்பட்டு, 20 தீர்வுகள் பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. 58 செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை உறுதி செய்ய 13 செயற்கை நுண்ணறிவு திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு தொழில்நுட்பத் திறன், புதுமை, ஆராய்ச்சி, உயர்திறன் வேலைவாய்ப்பு ஆகியவை விரிவடைந்து, தன்னிறைவு பெற்ற உலகளாவிய தொழில்நுட்பத் தலைமைக்கான இந்தியாவின் பயணம் மேலும் வலுப்பெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298788®=3&lang=1
***
TV/PD/KR
(रिलीज़ आईडी: 2299047)
आगंतुक पटल : 14