உள்துறை அமைச்சகம்
சைபர் மோசடிகளிலிருந்து பொதுமக்கள் பணம் ரூ.11,158 கோடி பாதுகாக்கப்பட்டுள்ளது: மத்திய இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார்
प्रविष्टि तिथि:
12 AUG 2026 4:47PM by PIB Chennai
இணையவழியில் போலியான போக்குவரத்து அபராத சீட்டுகளை அனுப்பிப் பொதுமக்களை ஏமாற்றும் சைபர் மோசடியாளர்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், இந்தியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் கீழ் இதுகுறித்த புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இணையவழியிலான நிதி மோசடிப் புகார்களை உடனடியாகப் பதிவு செய்யவும் பணப் பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்தவும் குடிமக்கள் நிதி மோசடி புகார் மேலாண்மை திட்டம் (CFCFRMS) செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பெறப்பட்ட 32.80 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களின் அடிப்படையில், ரூ.11,158 கோடிக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், சட்டவிரோதமான 2,77,053-க்கும் மேற்பட்ட செயலிகள், வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சைபர் குற்றங்களை திறம்படக் கையாள்வதற்காக காவல்துறையினரின் திறன்களை மேம்படுத்திட இணையவழிக் கற்றல் தளங்கள் செயல்பட்டு வருவதோடு, 1,63,344-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள் இத்தளம் மூலம் பதிவு செய்து பயிற்சி பெற்றுள்ளதாகவும், சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டங்களின் கீழ் சிறப்புப் பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298330®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2298699)
आगंतुक पटल : 12