PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தீர்ப்பாயங்கள் கட்டமைப்பில் சீர்திருத்தம்: தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா, 2026

प्रविष्टि तिथि: 12 AUG 2026 2:29PM by PIB Chennai

இந்தியாவின் தீர்ப்பாயக் கட்டமைப்பை தன்னாட்சி மிக்கதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்றும் நோக்கில் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா 2026 கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின் மூலம் தேசிய தீர்ப்பாய ஆணையம் அமைக்கப்படவுள்ளது. தீர்ப்பாய உறுப்பினர்களின் நியமனங்கள், பதவிக்காலம், செயல்பாடுகள் தொடர்பான நீண்டகால சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இப்புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் நிர்வாகத்துறையின் தன்னிச்சையான அதிகாரங்களைக் குறைத்து, தீர்ப்பாயங்களின் தன்னாட்சியைப் அதிகரித்து பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

புதிதாக உருவாக்கப்படும் தேசிய தீர்ப்பாய ஆணையமானது நீதித்துறையின் உயர்நிலை உறுப்பினர்களின் பெரும்பான்மையைக் கொண்டு இயங்கும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அல்லது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இவ்வாணையத்தின் தலைவராக இருப்பார். மேலும் நீதித்துறை உறுப்பினர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். தீர்ப்பாயங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளைத் தேர்வுக் குழுக்கள் மூலம் இவ்வாணையம் மேற்கொள்ளும். நியமனப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கவும், நிர்வாகத்துறையின் தலையீட்டைக் குறைக்கவும் இந்த அமைப்பு பெரிதும் உதவும்.

தேசிய தீர்ப்பாய ஆணையம் தீர்ப்பாயங்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு, ஆண்டு அறிக்கைகளை மத்திய அரசுக்குச் சமர்ப்பிக்கும். தீர்ப்பாயங்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைக் கண்காணித்தல், அனைத்துத் தீர்ப்பாயங்களின் வழக்குகளையும் ஒருங்கிணைக்கும் தேசியத் தீர்ப்பாய தரவுக் கட்டமைப்பைப் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளையும் இந்த ஆணையம் மேற்கொள்ளும். ஆணையத்தின் தலைவர் அல்லது உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை மட்டுமே இப்பதவி வகிக்க முடியும். தீர்ப்பாய உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது 67 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பாயங்களுக்குத் தேவையான நிதி மற்றும் நிர்வாகத் தன்னாட்சியை வழங்குவதோடு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) மூலம் இவ்வாணையத்தின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்படும். இத்தகைய சீர்திருத்தங்கள் மூலம் நாட்டின் தீர்ப்பாய அமைப்பு மேலும் வலுவடைந்து, பொதுமக்களுக்கு விரைவாக நீதி வழங்குவது உறுதி செய்யப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298157&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2298560) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam