PIB Backgrounder
மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
09 AUG 2026 9:56AM by PIB Chennai
மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு - கண்காணிப்பு அமைப்பான சிபிஜிஆர்ஏஎம்எஸ் (CPGRAMS), டிஜிட்டல் புத்தாக்கம், நிறுவன சீர்திருத்தங்கள், மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் பொது மக்கள் குறைதீர்ப்பு முறையை மாற்றியமைத்துள்ளது. அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒரே தளத்தின் மூலம் இணைப்பதன் மூலம், சிபிஜிஆர்ஏஎம்எஸ் குறைகளை உரிய நேரத்தில் தீர்க்க உதவி, பொறுப்புடைமையை ஊக்குவிக்கிறது, அத்துடன் வெளிப்படையான நிர்வாகத்தை வலுப்படுத்துகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு நபரின் குரலும் கேட்கப்பட்டு, அதற்குத் தீர்வு காணப்படுவதையும் இது உறுதி செய்கிறது.
சிபிஜிஆர்ஏஎம்எஸ் - பொறுப்புமிக்க ஆளுகை மூலம் மக்களுக்கு அதிகாரம் அளித்தல்;
செயல்திறன் மிக்க பொது மக்கள் குறை தீர்க்கும் நடைமுறையானது, பொறுப்புமிக்க ஆளுகையின் அடித்தளமாகும். அது, அரசு நிறுவனங்கள் பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும், அணுகக்கூடியவையாகவும் இருப்பதை உறுதி செய்வதோடு, பொதுச் சேவை வழங்கல் குறித்த தங்கள் கவலைகளை வெளிப்படுத்த மக்களுக்கு ஒரு தளத்தையும் வழங்குகிறது.
மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைதீர்ப்பு - கண்காணிப்பு அமைப்பு (சிபிஜிஆர்ஏஎம்எஸ் - CPGRAMS) என்பது அரசின் முதன்மையான டிஜிட்டல் குறைதீர்ப்புத் தளமாகும். மக்களுக்கு 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் கிடைக்கக்கூடிய சிபிஜிஆர்ஏஎம்எஸ், அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுடன் இணைக்கப்பட்ட ஒரு ஒற்றை இணையதள சேவையை வழங்குகிறது.
மக்கள், பொதுச் சேவை வழங்கல் தொடர்பான குறைகளை ஒரு வெளிப்படையான, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் செயல்முறையின் மூலம் பதிவு செய்து தீர்வைக் கண்காணிக்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளில், சிபிஜிஆர்ஏஎம்எஸ் ஒரு குறை பதிவு இணையதளமாக இருந்து ஒரு விரிவான ஆளுகைத் தளமாகப் பரிணமித்துள்ளது. இது நாடு முழுவதும் பொதுச் சேவை வழங்கலை வலுப்படுத்தவும் தொடர்ச்சியாக மேம்படுத்தவும் டிஜிட்டல் புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.
சிபிஜிஆர்ஏஎம்எஸ்-ன் பரிணாமம்:
2014-ம் ஆண்டு முதல், இந்தியாவின் பொது மக்கள் குறை தீர்க்கும் அமைப்பு ஒரு பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. ஆண்டுதோறும் கையாளப்படும் குறைகளின் எண்ணிக்கை, 2014-ல் சுமார் 3.01 லட்சத்திலிருந்து 2024-ல் ஏறத்தாழ 27 லட்சமாக, கிட்டத்தட்ட 9 மடங்கு அதிகரித்துள்ளது. இது பொதுமக்களின் நம்பிக்கை வளர்ந்து வருவதைப் பிரதிபலிக்கிறது.
குறைதீர்ப்பு கட்டமைப்பும் கணிசமாக விரிவடைந்துள்ளது. குறைதீர்ப்பு அலுவலர்களின் எண்ணிக்கை 2014-ல் 10,232 ஆக இருந்து, 2025-க்குள் 1.11 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் சேவை வழங்கலை மேம்படுத்தி, தாமதங்களைக் குறைத்துள்ளன. மத்திய அமைச்சகங்கள், துறைகளில் குறைகளைத் தீர்ப்பதற்கான சராசரி நேரம், 2014-ல் 157 நாட்களில் இருந்து 2025-ல் வெறும் 15 நாட்களாகக் குறைந்துள்ளது.
சிபிஜிஆர்ஏஎம்எஸ் எவ்வாறு செயல்படுகிறது:
மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைதீர்ப்பு - கண்காணிப்பு அமைப்பான சிபிஜிஆர்ஏஎம்எஸ் (CPGRAMS), திறம்பட்ட, எளிதில் அணுகக்கூடிய குறைதீர்ப்பை உறுதி செய்வதற்காக, விரிவான டிஜிட்டல் சூழலமைப்பாகச் செயல்படுகிறது.
பதிவு : குடிமக்கள் https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் ஒருமுறை பதிவு செய்து, இணையத்தில் புகார் அளிக்கலாம் . அவர்கள் சிபிஜிஆர்ஏஎம்எஸ் மொபைல் செயலி (இது UMANG - உமாங்-உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது) மூலமாகவோ அல்லது நாடு முழுவதும் உள்ள 2.5 லட்சம் கிராமப்புற தொழில்முனைவோருடன் தொடர்புடைய 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களில் (CSCs) ஏதேனும் ஒன்றிலோ புகார்களை அளிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் நேரடிக் குறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, கணினி அமைப்பில் பதிவேற்றப்படுகின்றன.
21 நாட்களுக்குள் தீர்வு: ஆகஸ்ட் 2024-ல் வெளியிடப்பட்ட, விரிவான வழிகாட்டுதல்கள், குறைதீர்ப்புக் காலக்கெடுவை 30 நாட்களில் இருந்து 21 நாட்களாக முறைப்படுத்தியது. இது பிரத்யேக குறைதீர்ப்புப் பிரிவுகள், மூல காரணப் பகுப்பாய்வு, வலுப்படுத்தப்பட்ட மேல்நிலைப்படுத்தும் வழிமுறைகள் ஆகியவற்றைக் கட்டாயமாக்கியுள்ளது. மத்திய அமைச்சகங்கள்/துறைகளில் குறைகளைத் தீர்ப்பதற்கான சராசரி நேரம் 2014-ல் 157 நாட்களில் இருந்து 2025-ல் 15 நாட்களாகக் குறைந்துள்ளது.
மேல்முறையீடு :
பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு, ஒரு பிரத்யேக பின்னூட்ட அழைப்பு மையமானது, மக்களை நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் திருப்தியை மதிப்பிடும். மக்கள் திருப்தியடையாத பட்சத்தில், மேல்முறையீட்டு வழிமுறையின் மூலம், ஒருங்கிணைப்பு மேல்முறையீட்டு ஆணையத்திடம் முறையிடலாம்.அந்த ஆணையம் 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டைத் தீர்த்து வைக்க வேண்டும்.
பின்வரும் பிரச்சினைகள் தீர்வுக்காக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை:
* தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விஷயங்கள்
* நீதிமன்றம் தொடர்பான / நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள்
* மதம் தொடர்பான விஷயங்கள்
* அரசு ஊழியர்களின் சேவை தொடர்பான குறைகள், ஒழுங்கு நடவடிக்கைகள் போன்றவை
மொழி உள்ளடக்கம்:
குறைதீர்ப்பை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக, சிபிஜிஆர்ஏஎம்எஸ் ஆங்கிலத்துடன் கூடுதலாக 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளில் சமர்ப்பிப்புகளை ஆதரிக்கிறது . பாஷினியுடனான ஒருங்கிணைப்பு, குறைதீர்ப்பு அலுவலர்கள், மக்கள் பயன்படுத்தும் மொழியிலேயே பதிலளிக்க உதவுகிறது.
மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை வலுப்படுத்துதல்:
கடந்த 10 ஆண்டுகளில், சிபிஜிஆர்ஏஎம்எஸ், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொதுக் குறைதீர்ப்புத் தளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், தொழில்நுட்பப் புதுமைகள், மக்கள் திருப்தியின் மீதான வலுவான கவனம் ஆகியவற்றின் மூலம், மக்கள் அரசு நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை இந்தத் தளம் சிறப்பாக மாற்றியமைத்துள்ளது.
சரியான நேரத்தில் குறைகளைத் தீர்ப்பதை சாத்தியமாக்குவதன் மூலமும், பொறுப்புடைமையை ஊக்குவிப்பதன் மூலமும், மக்களின் பின்னூட்டங்கள் மூலம் சேவை வழங்குதலைத் தொடர்ச்சியாக மேம்படுத்துவதன் மூலமும், சிபிஜிஆர்ஏஎம்எஸ் மக்களை மையமாகக் கொண்ட ஆளுகையின் அடித்தளங்களை வலுப்படுத்தியுள்ளது. 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாடு முன்னேறி வரும் வேளையில், திறமையான, வெளிப்படையான, எளிதில் அணுகக்கூடிய குறைதீர்ப்பு அமைப்பின் மூலம் ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படுவதையும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதி செய்வதில் சிபிஜிஆர்ஏஎம்எஸ் தொடர்ந்து ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296724®=48&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296766)
வருகையாளர் எண்ணிக்கை : 64