சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் புறநோயாளிகள் பிரிவில் கியூஆர் குறியீடு மூலம் 25 கோடி பதிவுகள்
प्रविष्टि तिथि:
07 AUG 2026 3:27PM by PIB Chennai
நாட்டின் டிஜிட்டல் சுகாதாரச் சேவைக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கியூஆர் குறியீடு மூலம் ஸ்கேன் செய்து பதிவு செய்யும் சேவையைப் பயன்படுத்தி புறநோயாளிகள் பிரிவில் (OPD) 25 கோடிக்கும் அதிகமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
2022 அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்ட இச்சேவை, காகித வடிவிலான படிவங்கள், நீண்ட வரிசைகளில் நிற்பதைத் தவிர்த்து, கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மருத்துவமனைப் பதிவுகளை வேகமாகவும் எளிதாகவும் மாற்றியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 756 மாவட்டங்களைச் சேர்ந்த 30,800 மருத்துவமனைகளில் இச்சேவை செயல்பாட்டில் உள்ளது. இதில் 24,323 அரசு மருத்துவமனைகளும் 6,481 தனியார் மருத்துவமனைகளும் அடங்கும். தினசரி சராசரியாக சுமார் 4 லட்சம் நோயாளிகள் இச்சேவையைப் பயன்படுத்திப் பலனடைந்து வருகின்றனர். பெண்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இச்சேவை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
மாநில அளவில் பீகார் 7.30 கோடிக்கும் அதிகமான பதிவுகளுடன் முதலிடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் 4.09 கோடி பதிவுகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆந்திரப் பிரதேசம் 3.38 கோடி பதிவுகளுடன் மூன்றாம் இடத்திலும், ஜம்மு காஷ்மீர் 1.39 கோடி பதிவுகளுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை 54.29 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகளை மேற்கொண்டு நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. போபால், புவனேஸ்வர், பாட்னா, ராய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, டிஜிட்டல் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் பெரும் பங்காற்றி வருவதாகத் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமைச் செயலதிகாரி டாக்டர் சுனில் குமார் பர்ன்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295972®=3&lang=1
***
TV/PD/RJ
(रिलीज़ आईडी: 2296219)
आगंतुक पटल : 11