PIB Backgrounder
தேசிய கைத்தறி தினம் 2026: நெசவாளர்களைக் கெளரவித்தல், பாரம்பரியத்தைப் புதுப்பித்தல், எல்லைகளை விரிவுபடுத்துதல்
प्रविष्टि तिथि:
06 AUG 2026 1:49PM by PIB Chennai
இந்தியாவின் வளமான நெசவுப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுதேசி இயக்கத்தின் நினைவாகக் கொண்டாடப்படும் இந்நாளில், 72 சதவீதத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் உட்பட நாட்டின் 35.22 லட்சம் கைத்தறி நெசவாளர்கள், அந்தத்துறை சார்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பு கௌரவிக்கப்படுகிறது. 2015-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் தேசிய கைத்தறி தினம், கிராமப்புறப் பகுதிகளில் வாழும் நெசவாளர்களின் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதோடு, நவீன வடிவமைப்பு, டிஜிட்டல் தளங்கள், சர்வதேச சந்தைகள் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், மூலப்பொருள் விநியோகத் திட்டம் ஆகிய முதன்மைத் திட்டங்கள் மூலம் நெசவாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. சிறு கைத்தறிக் குழுமங்கள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் நெசவுக்கூடங்கள் கட்டுவதற்கும், மின்னணு ஜாக்கார்டு கருவிகளைப் பொருத்துவதற்கும் 100 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்ப மாற்றங்களால் நெசவாளர்களின் தினசரி உற்பத்தி 55 சதவீதமும், அவர்களின் தினசரி வருமானம் 42 சதவீதமும் உயர்ந்துள்ளது. மேலும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் மூலம் 6 சதவீதக் குறைந்த வட்டியில் கடன் உதவிகளும், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் சமூகப் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நெசவாளர்களின் தயாரிப்புகளுக்கு உரிய சந்தை வாய்ப்புகளை வழங்கும் வகையில் கைத்தறி முத்திரை, 'இந்தியா கைத்தறி பிராண்ட்', புவிசார் குறியீடுகள் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் போலித் தயாரிப்புகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. 1985-ம் ஆண்டின் கைத்தறி சட்டத்தின் கீழ் 11 வகையான ஜவுளிப் பொருட்கள் கைத்தறி உற்பத்திக்கு மட்டுமே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் மின்னணு சந்தை (ஜெம்) தளம், இந்தியா ஹேண்ட்மேட் தளம் ஆகியவற்றின் மூலம் கைத்தறிப்பொருட்கள் நுகர்வோருக்கு நேரடியாகப் விற்பனை செய்யப்படுகின்றன. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் கைத்தறி ஏற்றுமதி 1,330.96 கோடி ரூபாயை எட்டியுள்ளதோடு, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி கைத்தறிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி கிராம சுயராஜ்ய முன்முயற்சி, ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம் ஆகியவை கைத்தறித் துறையின் தற்சார்பை மேலும் வலுப்படுத்தியுள்ளன. சர்வதேச ஃபேஷன் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், தேசியக் கண்காட்சிகள் மூலம் இந்தியப் பாரம்பரிய நெசவு கலைகள் உலக அரங்கில் பிரபலப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலமாகப் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வலுவான இந்தியாவை உருவாக்குவதில் கைத்தறித் துறை மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295395®=3&lang=1
***
VJ/PD/SH
(रिलीज़ आईडी: 2295542)
आगंतुक पटल : 15