PIB Backgrounder
புவிசார் குறியீடுகள்: நாட்டின் பாரம்பரிய வளங்களை உலகளாவிய பிராண்டுகளாக தரம் உயர்த்துதல்
प्रविष्टि तिथि:
04 AUG 2026 9:45AM by PIB Chennai
இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, உள்ளூர் சமூகங்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் புவிசார் குறியீடுகள் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன. பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தை அவற்றுடன் இணைப்பதன் மூலம் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதுடன், தவறான பயன்பாட்டைத் தடுத்து நுகர்வோரின் நம்பிக்கையையும் புவிசார் குறியீடுகள் அதிகரிக்கின்றன. கைவினைக்கலைஞர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், உற்பத்தியாளர் குழுக்கள் சந்தையில் சிறந்த அங்கீகாரத்தைப் பெறவும், சர்வதேச உயர்தரச் சந்தைகளை அணுகவும் இவை பெரிதும் உதவுகின்றன. நிதி உதவி, ஏற்றுமதி ஊக்குவிப்பு, சுற்றுலா ஒருங்கிணைப்பு, பிரத்தியேக சந்தைப்படுத்தல் தளங்கள் மூலம் இச்சூழலை மத்திய அரசு மேலும் மேம்படுத்தி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நெசவாளர்களால் பாரம்பரிய முறையில் உருவாக்கப்படும் பனாரஸ் பட்டுச் சேலைகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம், அவற்றின் உண்மைத்தன்மையும் தரமும் சான்றளிக்கப்பட்டு உள்நாட்டு, சர்வதேசச் சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனையாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகாவின் சன்னபட்னா பொம்மைகள், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் தேயிலை, கேரளாவின் ஆரன்முளா கண்ணாடி, தெலங்கானாவின் போச்சம்பள்ளி இக்கத் ஆகியவை புவிசார் குறியீட்டின் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன. புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 365-ல் இருந்து 29,000 ஆக பெருமளவில் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள், இயற்கை வளங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2025 டிசம்பர் நிலவரப்படி 81 புவிசார் குறியீடுகளுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும், 76 புவிசார் குறியீடுகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், 55 புவிசார் குறியீடுகளுடன் மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன. 1999-ம் ஆண்டின் புவிசார் குறியீடுகள் சட்டத்தில் 2025-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, விண்ணப்பக் கட்டணம் 80 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதோடு, புதுப்பித்தலுக்கான கட்டணம் 3,000 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதிக்கு அருகிலுள்ள அறிவுசார் சொத்துரிமை வளாகத்தில் புவிசார் குறியீடு பதிவு அலுவலகம் அகில இந்திய அதிகார வரம்புடன் இயங்கி வருகிறது.
ரயில் நிலையங்களில் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள், ஜிஐ டிரெயில்ஸ் என்ற சிறப்புச் சுற்றுலா முறைகள் ஆகியவை மூலம் புவிசார் பொருட்கள் பிரபலப்படுத்தப்பட்டு வருகின்றன. அபெடா அமைப்பின் தீவிர முயற்சியால் சேலம் ஜவ்வரிசி கனடா நாட்டிற்கும், கர்நாடகாவில் விளையும் பழங்கள் மாலத்தீவிற்கும், அசாமின் ஜோஹா அரிசி பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டிற்குள் 10,000 புவிசார் குறியீடுகளைப் பதிவு செய்வதை இலக்காகக் கொண்டு, கிராமப்புற வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை நோக்கிய பாதையில் நாட்டின் பாரம்பரியப் பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294126®=3&lang=1
***
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2294447)
आगंतुक पटल : 12