பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது
प्रविष्टि तिथि:
30 JUL 2026 4:59PM by PIB Chennai
பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து விவாதத்தை தொடங்கிவைத்து பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த மசோதா நாட்டில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்கான விரிவான சட்ட கட்டமைப்பை கொண்டுள்ளதாக கூறினார்.
இந்த சட்டம், பொதுத்தேர்வு முறையில் தகுதி, நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதுடன், மாணவர்கள், இளைஞர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்புணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.
இந்த மசோதா குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அரசு வரவேற்பதாகவும், அண்மையில் கிடைத்த அனுபவங்களையும், கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு, இந்த சட்டத்தில் பிரிவுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தேர்வு தொடர்பான முறைகேடுகள், வினாத்தாள் கசிவு போன்ற சட்டவிரோத செயல்கள் மீது எவ்வித சகிப்புத் தன்மையற்ற கொள்கையை இந்த சட்டத்திருத்தம் உறுதி செய்வதுடன், மாணவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த சட்டத்திருத்தம் குறித்த அவசியத்தை எடுத்துரைத்த அமைச்சர், எந்த மாநிலம் அல்லது தேர்வு நடத்தும் முகமையை பொருட்படுத்தாமல், பல்வேறு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேர்வு தொடர்பான முறைகேடுகள் குறித்த புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், இத்தகைய முறைகேடுகளை தடுக்க வலுவான தேசிய சட்ட கட்டமைப்பிற்கான அவசியம் எழுந்துள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டம் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிப்ரவரி மாதம் சட்டமாக இயற்றப்பட்டது என்றும், இந்த சட்டம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார்.
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட பல்வேறு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளை இந்த சட்டம் உள்ளடக்கியுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்த சட்டத்திருத்த மசோதாவில் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் சேவை வழங்குநர்களுக்கு அதிகபட்ச அபராதமாக ரூ.5 கோடி விதிப்பதற்கும், பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான தடை காலத்தை 8 ஆண்டுகாலமாக அதிகரிப்பதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291811®=3&lang=1
*
TV/SV/RJ/SE
(रिलीज़ आईडी: 2292105)
आगंतुक पटल : 9