நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி வாயுவாக்கல், தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை: மத்திய இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே தகவல்
प्रविष्टि तिथि:
27 JUL 2026 5:12PM by PIB Chennai
தேசிய நிலக்கரி வாயுவாக்கல் திட்டத்தின் கீழ் 2030-ம் ஆண்டிற்குள் 100 மில்லியன் டன் நிலக்கரி வாயுவாக்கல் திறனை எட்டுவதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், தற்போது வரை ஆண்டுக்கு சுமார் 22.6 மில்லியன் டன் திறன் கொண்ட நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்கள் செயல்பாட்டிலோ அல்லது அமலாக்க நிலையிலோ உள்ளதாகக் கூறினார்.
நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய புதிய திட்டத்திற்கு 2026 மே 13 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்புதிய திட்டம் சுமார் 75 மில்லியன் டன் நிலக்கரியைப் பயன்படுத்தி 100 மில்லியன் டன் வாயுவாக்கல் இலக்கை அடையப் பெரிதும் உதவும் எனத் தெரிவித்தார். ஏற்கனவே 2024 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட ரூ.8,500 கோடி நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 8 நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
இத்திட்டங்களுக்கு நிதிச் சலுகைகள், 30 ஆண்டுகள் வரையிலான நிலக்கரி இணைப்பு வசதி, வருவாய் பங்கீட்டில் 50 சதவீத தள்ளுபடி போன்ற பல்வேறு கொள்கை ரீதியிலான ஆதரவுகளை அரசு வழங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். நிலக்கரி வாயுவாக்கல் மூலம் செயற்கை இயற்கை எரிவாயு, ரசாயனங்கள், உரங்கள், ஹைட்ரஜன் தயாரித்து இறக்குமதி சார்பைக் குறைக்க முடியும் எனக் கூறிய அவர், இத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படும் போது ஆண்டிற்குச் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி அளவிற்கு இறக்குமதியைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289975®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2290084)
आगंतुक पटल : 10