மாநிலங்களவைச் செயலகம்
பெரிய அளவிலான டிஜிட்டல்மயமாக்கல், நாடாளுமன்றத்தைக் காகிதமற்றதாகவும் திறன்மிக்கதாகவும் மாற்றியுள்ளது மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ்
प्रविष्टि तिथि:
26 JUL 2026 7:24PM by PIB Chennai
பெரிய அளவிலான டிஜிட்டல்மயமாக்கல், நடைமுறைகள் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை காகிதமற்றதாகவும் திறன்மிக்கதாகவும் மாற்றியுள்ளது என்று மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் கூறியுள்ளார்.
மாநிலங்களவையின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்காக நடைபெற்ற இரண்டு நாள் அறிமுகப் பயிலரங்கில் இன்று (2026 ஜூலை 26) அவர் நிறைவுரை ஆற்றினார்.
மாநிலங்களவையின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு, அவையின் விதிகள், நடைமுறைகள், மரபுகள், பழக்கவழக்கங்களை அறிமுகப்படுத்தி அவர்கள், அவையில் திறம்படப் பணியாற்ற உதவும் வகையில், அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று திரு ஹரிவன்ஷ் தெரிவித்தார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் தீவிரப் பங்கேற்புக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, நாடாளுமன்றச் செயல்பாடுகளின் நுணுக்கங்களையும் மாநிலங்களவைச் செயலகத்தின் பல்வேறு அம்சங்களையும் அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு உதவியிருக்கும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
உறுப்பினர்கள் செயல்முறை விதிகள் மற்றும் செயலகத்தின் செயல்பாடுகள் குறித்து முழுமையான புரிதலைப் பெறும் வகையில், அந்த நிகழ்ச்சி தனித்தனி அமர்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். மூத்த உறுப்பினர்கள், அதிகாரிகளின் விளக்கவுரைகள், மூலம் புதிய உறுப்பினர்கள் பயனடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தை ஒரு பிரதிநிதித்துவ நிறுவனமாகவும், வரலாற்று ரீதியாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட ஒரு உயர் பாதுகாப்பு மண்டலமாகவும் விவரித்த திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பாதுகாப்பைப் பேணுவதில் ஒத்துழைக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றக் கட்டடத்தை ஒரு பிரம்மாண்டமான அமைப்பாகவும், இந்தியாவின் பழைய கலாச்சாரத்தின் சாரத்தைக் கொண்ட ஜனநாயகத்தின் நவீன ஆலயமாகவும் அவர் விவரித்தார்.
கடந்தகால நாடாளுமன்ற நடைமுறைகளைப் படிக்கவும், குறிப்பிடத்தக்க விவாதங்களைப் படிக்கவும், அடல் பிஹாரி வாஜ்பாய், அருண் ஜேட்லி, சந்திரசேகர் போன்ற புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதிவுகளைப் பார்க்கவும், பிற நாடுகளில் உள்ள நாடாளுமன்ற மரபுகளைக் கவனிக்கவும் அவர் புதிய உறுப்பினர்களை ஊக்குவித்தார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மீது நம்பிக்கை தெரிவித்ததோடு, அவர்கள் தங்கள் பதவிக்காலத்தில் அவையின் கௌரவத்திற்குப் பங்களித்து, திறமையான மக்கள் பிரதிநிதிகளாக உருவெடுப்பார்கள் என்று திரு ஹரிவன்ஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289660®=48&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2289684)
आगंतुक पटल : 8