பிரதமர் அலுவலகம்
இந்தியா - நியூசிலாந்து வணிக மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
11 JUL 2026 8:52AM by PIB Chennai
மாண்புமிகு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அவர்களே,
இந்தியா மற்றும் நியூசிலாந்தின் வணிகத் தலைவர்களே,
வணக்கம்!
கியா ஓரா !
உங்கள் அனைவருடனும் ஆக்லாந்தில் இருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா மீது நேர்மறையான பார்வையையும், ஆழ்ந்த ஈடுபாட்டையும் கொண்டுள்ள பிரதமர் லக்சன் அவர்களுக்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு உங்கள் வருகை, நியூசிலாந்தின் புத்தாக்க உணர்வையும், தொழில்முனைவையும், எதிர்காலத்தை நோக்கிய பார்வையையும் பறைசாற்றுகிறது. இந்தியாவின் சார்பில், 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளையும் லட்சியங்களையும் சுமந்து கொண்டு நான் இங்கு வந்துள்ளேன்.
நண்பர்களே,
இந்தியா - நியூசிலாந்து உறவு ஒரு திருப்புமுனையில் இருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று, நமது உறவை ஒரு உத்திசார் கூட்டு செயல்பாட்டிற்கு உயர்த்துகிறோம். இது வெறும் தூதரக ரீதியிலான மைல்கல் மட்டுமல்ல; இது நமது பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான ஒரு புதிய அர்ப்பணிப்பாகும்.
இந்த ஆண்டு, இந்தியாவும் நியூசிலந்தும் வெறும் 9 மாதங்களில் சாதனை படைக்கும் வகையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளன. இது சந்தை வாய்ப்பு, முதலீடு, சேவைகள், தொழில்நுட்பம் மற்றும் திறமையாளர்களின் இடப்பெயர்வு ஆகியவற்றில் உங்கள் அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், 2030-க்குள் நமது இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவோம் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.
அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய நியூசிலாந்தும் உறுதியளித்துள்ளது. இது வெறும் முதலீட்டுக்கான உறுதிமொழி மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பங்காளியாக இருப்பதற்கான அர்ப்பணிப்புமாகும்.
நண்பர்களே,
இன்று, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணிப் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. வளர்ச்சியடைந்து வரும் நமது நடுத்தர வர்க்கம், பரவலான டிஜிட்டல் பயன்பாடு மற்றும் வலுவான உள்கட்டமைப்பு ஊக்குவிப்பு ஆகியவை இந்தியாவை ஒரு தனித்துவமான வளர்ச்சிப் பாதையின் கதையாக மாற்றியுள்ளன.
இந்தியாவில், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகியவற்றை நமது நிர்வாகத்தின் அடித்தளமாக நாங்கள் உருவாக்கியுள்ளோம். இன்று, இந்தியா கொள்கை ஸ்திரத்தன்மை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை வழங்குகிறது.
எனவே, உலகிற்கான நமது செய்தி தெளிவாக உள்ளது: இந்தியா என்பது ஒரு சந்தை மட்டுமல்ல; இந்தியா என்பது உலகளாவிய வளர்ச்சிக்கான ஒரு மேடையாகும்.
இந்தியாவில் உருவாகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு உதவுவதற்காக, சில எடுத்துக்காட்டுகளைப் பகிர விரும்புகிறேன். உற்பத்தியை அதிகரிக்க, நாங்கள் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்தத் திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்துதல் முதல் ஜவுளித்துறை வரை 14 துறைகளில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உற்பத்தி எழுச்சியின் ஒரு பகுதியாக மாறுமாறு உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.
இந்தியாவில் விமான நிலையங்கள், பிராந்திய இணைப்பு, வான்வழி சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆகியவை வேகமாக விரிவடைந்து வருகின்றன. இன்று, உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா திகழ்கிறது. இணைந்து நாம் சரக்கு வழித்தடங்களை உருவாக்கலாம். விமான இணைப்பை வலுப்படுத்தலாம் மற்றும் கூட்டு சுற்றுலாத் தொகுப்புகளை உருவாக்கலாம்.
கீவி பழங்கள், ஆப்பிள்கள், தேன் மற்றும் கடல் உணவுகளுக்கான சரக்குப் போக்குவரத்து தீர்வுகளை உருவாக்க முடியும். நியூசிலாந்து தோட்டக்கலை, பால் அறிவியல் மற்றும் வனத்துறையில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது; அதே நேரத்தில் இந்தியா தனது பரந்த நுகர்வோர் சந்தை, உணவுப் பூங்காக்கள் மற்றும் வேளாண்-தொழில்நுட்பத் திறமையின் பலத்தை வழங்குகிறது. நாம் இணைந்து பண்ணை முதல் சந்தை வரையிலான மதிப்புச் சங்கிலிகளையும் உலகளாவிய ஏற்றுமதி தளங்களையும் உருவாக்க முடியும்.
இன்று, இந்தியா நிதிதொழில்நுட்பத் துறையில் உலகளாவிய தலைவனாகத் திகழ்கிறது. உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சுமார் 50 சதவீதம் இந்தியாவில் தான் செயலாக்கப்படுகின்றன. இந்த வலிமையின் அடிப்படையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல், பசுமைப் பத்திரம் மற்றும் கலப்பு நிதியளிப்பு ஆகியவற்றிலும் நமது ஒத்துழைப்பை ஆழப்படுத்தலாம்.
விண்வெளித் துறையைத் தனியார் பங்கேற்பிற்கு நாங்கள் திறந்துவிட்டுள்ளோம். இன்று, இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன, மேலும் இத்துறை ஏற்கனவே தனது முதல் யூனிகார்னை உருவாக்கியுள்ளது. சிறிய செயற்கைக்கோள்கள், தொலை உணர்வு திறன் மற்றும் பெருங்கடல் கண்காணிப்பு போன்ற துறைகளில் இந்தியாவின் விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பினுள் நமது இரு நாடுகளின் நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடியும்.
இந்தியாவின் பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ், 100 நகரங்களில் 8,000-க்கும் மேற்பட்ட திட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாம் இணைந்து நகர்ப்புற இயக்கம், நீர் மேலாண்மை மற்றும் கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் ஒத்துழைக்க முடியும்.
நண்பர்களே,
இங்கு குழுமியுள்ள மாவோரி வணிகத் தலைவர்களுக்கு எனது அன்பான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் நாகரிகமும் மாவோரி பாரம்பரியங்களும் இயற்கை சமூகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மீது ஆழமான மரியாதையைப் பகிர்ந்து கொள்கின்றன. நமது தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் மாவோரி வணிகங்களுக்கான வாய்ப்புகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் நாம் இணைந்து, உள்ளடக்கிய மற்றும் நிலையான வர்த்தகத்தின் புதிய மாதிரியை உருவாக்க முடியும்.
நண்பர்களே,
நாம் இணைந்து மிகவும் குறிக்கோள் கொண்ட வணிகத்திற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். நமது வலிமையை ஒன்றிணைப்பதன் மூலம், குறைந்தது ஐந்து முதன்மைத் திட்டங்களை நாம் அடையாளம் கண்டு, அவற்றின் வெற்றிகரமான செயலாக்கத்தை உறுதி செய்வதற்காக காலக்கெடுவுடன் கூடிய மதிப்பீட்டு முறையை நிறுவ வேண்டும். அப்போதுதான் நமது கூட்டாண்மையின் முழுத் திறனையும் நம்மால் முழுமையாக உணர முடியும், மேலும் நமது இரு நாட்டு மக்களின் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடியும்.
இந்தப் பயணத்தில் எங்களுடன் இணைந்து தோளோடு தோள் நின்று முன்னோக்கிச் செல்ல உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.
நமது கூட்டான்மையை வளத்திற்கான ஒரு தளமாகவும், புதுமைகளுக்கான பாலமாகவும், உலகளாவிய நலனுக்கான ஒரு சக்தியாகவும் மாற்றுவோம்.
இந்தியாவும் நியூசிலாந்தும் இணைந்து ஒரு புதிய சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நன்றி!
எனது மற்றொரு கோரிக்கை என்னவென்றால், நாம் சற்று முன்பு குறிப்பிட்டது போல, இந்த ஆண்டு நமது நாடுகளுக்கு இடையேயான விளையாட்டுத் துறை உறவுகளின் 100வது ஆண்டைக் குறிக்கிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாகும்.
இந்த மைல்கல்லை நாம் நிச்சயமாகக் கொண்டாடுவோம். ஆனால், நியூசிலாந்தில் இருந்து 35 வயதுக்குட்பட்ட வணிகத் தலைவர்களைக் கொண்ட ஒரு பெரிய பிரதிநிதிகள் குழுவை இந்தியாவுக்கு அழைத்து வர முடியுமா? அதேபோல், இந்தியாவிலிருந்து 35 வயதுக்குட்பட்ட வணிகத் தலைவர்கள் குழுவை நியூசிலாந்துக்கு அனுப்ப முடியுமா? இதன் மூலம், இந்தக் கூட்டாண்மையை முன்னோக்கி அழைத்துச் செல்ல புதிய தலைமுறையை நாம் தயார்படுத்த முடியும்.
இந்த நல்வாழ்த்துகளுடன், உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்பதுறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். அசல் உரையானது இந்தி மொழியில் நிகழ்த்தப்பட்டது.
(Release ID: 2283534)
***
AD/VK/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2288728)
வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam