மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட மீனவர் குடும்பங்கள்
प्रविष्टि तिथि:
21 JUL 2026 3:04PM by PIB Chennai
தமிழ்நாடு அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 1,480 உள்நாட்டு மீன் வளர்ப்பாளர்கள் 'மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில்' பதிவு செய்துள்ளனர்; மேலும், 1,234 உள்நாட்டு மீனவர்கள் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களில் பதிவு செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-22 முதல் 2023-24 வரை), 'பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் கீழ் ரூ. 196.30 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்ததன்படி, மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றுப் பகுதியில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. நன்கு கட்டமைக்கப்பட்ட கால்வாய் வலையமைப்பு மூலம் விவசாயத் தேவைகளுக்காக ஆற்று நீர் பெருமளவில் திருப்பி விடப்படுவதால், ஆண்டின் பெரும்பகுதி இப்பகுதியில் நீரோட்டம் குறைவாகவே உள்ளது என்று அந்த ஆய்வு வெளிப்படுத்தியது. இப்பகுதிக்கு முக்கியமாக பருவமழைக் காலங்களிலும், ஆற்றின் மேல்புறத்தில் உள்ள அணைகளிலிருந்து முறைப்படுத்தப்பட்ட நீர் திறப்பு மூலமாகவும் நீர் கிடைக்கிறது. இதன் விளைவாக, தஞ்சாவூர் ஆற்றுப் பகுதியில் நடைபெறும் மீன்பிடித் தொழில் குறைந்த அளவிலான தீவிரத்தன்மையுடன், பருவகாலச் செயல்பாடாகவே உள்ளது.
மீன் பிடிப்பை அதிகரிக்கவும் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், மாநிலம் முழுவதும் உள்ள ஆற்றுப் பகுதிகளில் 176 லட்சம் வளர்ந்த மீன் குஞ்சுகள் விடப்பட்டன (இதில் காவிரி ஆற்றுப் பகுதியில் மட்டும் 59.76 லட்சம் குஞ்சுகள் அடங்கும்). காவிரி ஆற்றுப் படுகையில் மீன் குஞ்சுகளை இவ்வாறு இருப்பு செய்வதன் மூலம், மீன் உற்பத்தி 220 டன்களாக அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக உள்நாட்டு மீன் உற்பத்தி மேம்பட்டு, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2015-ஆம் ஆண்டு முதல், மத்திய மீன்வளத் துறை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் - குறிப்பாகத் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் - மீன்வளம், உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் மீனவர் நலன் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களின் மூலம் இத்துறையில் முதலீட்டை கணிசமாக அதிகரித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 355 பயனாளிகளுக்கு, உள்ளீட்டு உதவி மற்றும் நன்னீர் மீன் குஞ்சு பொரிப்பகங்கள், புதிய மீன் குஞ்சு வளர்ப்புப் குளங்கள், மீன் வளர்ப்புக் குளங்கள், அலங்கார மீன் வளர்ப்பு அலகுகள் ஆகியவற்றை அமைத்தல் மற்றும் மீன்பிடி உபகரணங்களை வாங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்காக மானிய உதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், 2024-25 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகளில், டெல்டா மாவட்டங்களில் உள்ள 450 ஹெக்டேர் பரப்பளவிலான ஊராட்சிக்குச் சொந்தமான குளங்களில் 9.00 லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
கேள்வி ஒன்றுக்கு மக்களவையில் பதிலளிக்கும்போது, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Release ID: 2286992
****
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2287502)
आगंतुक पटल : 11