உள்துறை அமைச்சகம்
விரைவான நீதி வழங்கும் நடைமுறை
प्रविष्टि तिथि:
21 JUL 2026 4:04PM by PIB Chennai
இந்திய சட்ட ஆணையம் தனது பல்வேறு அறிக்கைகளில் குற்றவியல் சட்டங்களில் பிரிவு சார்ந்த திருத்தங்களைப் பரிந்துரைத்திருந்தது. மேலும், பெஸ்பரூவா குழு, விஸ்வநாதன் குழு, மாலிமத் குழு, மாதவ மேனன் குழு போன்ற குழுக்கள் குற்றவியல் சட்டங்களில் பிரிவு சார்ந்த திருத்தங்கள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பில் பொதுவான சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்கின.
உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவும், தனித்தனியாகத் திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பை முழுமையாக மறுஆய்வு செய்து விரிவான சட்டத்தைக் கொண்டுவரப் பரிந்துரைத்தது.இதனடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியத் தண்டனைச் சட்டம் (1860), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (1973) மற்றும் இந்தியச் சாட்சியச் சட்டம் (1872) ஆகியவற்றை முழுமையாக மறுஆய்வு செய்து, அவை முறையே பாரதிய நியாய சன்ஹிதா (2023), பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (2023) மற்றும் பாரதிய சாட்சிய நியம் (2023) ஆகிய மூன்று புதிய சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இப்புதிய சட்டங்கள் மூலம் முதற்கட்ட விசாரணை (14 நாட்கள்), ஆவணங்கள் வழங்குதல் (14 நாட்கள்), குற்றச்சாட்டுப் பதிவு (60 நாட்கள்) மற்றும் தீர்ப்பு அளித்தல் (45 நாட்கள்) போன்ற பல்வேறு முக்கிய நிலைகளுக்குக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீதான விசாரணை இரண்டு மாதங்களுக்குள் முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விசாரணை தாமதமாவதைத் தவிர்க்க அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே ஒத்திவைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றச் செயல்பாடுகளின் வேகத்தையும் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்க மின்னணுச் சான்றுகளைப் பாதுகாப்பாகப் சமர்ப்பிக்க 'இ-சாட்சியம்’, அழைப்பாணைகளை அனுப்ப 'இ-சம்மன்' மற்றும் காணொலி வாயிலாக ஆஜராக 'நியாய-ஸ்ருதி' போன்ற செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகவலை மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287042®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2287398)
आगंतुक पटल : 8