உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜெயப்பிரகாஷ் நாராயண் நூலகத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா புது தில்லியில் இன்று திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 11 JUL 2026 3:31PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா இன்று புது தில்லியில் ஜெயப்பிரகாஷ் நாராயண் நூலகத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, அமைச்சர் திரு. பர்வேஷ் வர்மா, புதுதில்லி மாநகராட்சி தலைவர் திரு. கேசவ் சந்திரா உட்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. அமித் ஷா, ஒரு நாட்டின் எதிர்காலத்தை, அதன் சந்தைப் பயன்பாடு  அல்லது தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட முடியாது என்று ஒரு சிறந்த சிந்தனையாளர் கூறியதை நினைவு கூர்ந்தார். மாறாக, அந்நாட்டின் நூலகங்களில் பயிலும் இளைஞர்களின் எண்ணிக்கையைக் கொண்டே அது அளவிடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஒரு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும், நாட்டைக் கட்டமைக்கும் பணிகளுக்குப் பங்களிக்கும், வளத்தை நோக்கி வழிநடத்தும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அறிவும், ஞானமும் அடித்தளமாக அமைகின்றன என்று அவர் கூறினார். அத்தகைய அறிவை, ஒரு நூலகத்தின் மூலமாகவே உண்மையாக வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இளம் தலைமுறையினர், தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது நூலகத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று திரு. அமித் ஷா கேட்டுக் கொண்டார். நூலகத்துடனான தொடர்பு ஒருவரின் ஆளுமையில் குறிப்பிடத்தக்க வளத்தை உருவாக்குகிறது  என்று அவர் கூறினார். தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட உள்துறை அமைச்சர், தான் பிறந்த,  குழந்தைப் பருவத்தைக் கழித்த சிறிய நகரத்தில் நல்ல நூலகம் ஒன்று இருந்ததாகக் குறிப்பிட்டார். அந்த நூலகத்துடனான தொடர்பு தனது வாழ்க்கையில் வலுவான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். புத்தகங்களை வாசிக்கும்போது, அறியாமலேயே வேதங்கள், உபநிடதங்களைப் பயிலும் நிலைக்குத் தான் படிப்படியாக முன்னேறியதை உணர்ந்ததாகவும் திரு அமித் ஷா தெரிவித்தார்.

நூலக அரங்கில் எழுதப்பட்டிருந்த ஒரு வரியை தாம் இன்று கவனித்ததாகக் கூறிய திரு அமித் ஷா, பேசுவதற்கு முன்பு  சிந்திக்க வேண்டும் என்றும், ஏனென்றால் வார்த்தைகள் திரும்ப வராது என்றும் அவர் கூறினார். பேசுவதற்கு முன் ஒருவர் எப்போதும் சிந்திக்க வேண்டும் என்றும், எதை  நினைக்க வேண்டும் என்பதை அறிய முதலில் படிக்க வேண்டும் என்றும், அத்தகைய புரிதலை ஒரு நூலகத்தின் மூலம் மட்டுமே பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

தனது வாழ்க்கையை வடிவமைப்பதில் நூலகங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன என்று அவர் தெரிவித்தார். தனது நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், அங்கு ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு நூலகம் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொன்றும் 3,000 முதல் 4,000 புத்தகங்களைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நூலகங்கள் 1.25 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களைக் கொண்ட மைய நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்றார். மேலும், நான்கு நடமாடும் நூலக வாகனங்களும்  பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். கிராமங்களில் உள்ள குழந்தைகள் தாங்கள் விரும்பும் எந்த புத்தகத்திற்கும், நூலகத்தில் தலைப்பை எழுதி பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்தந்த கிராமங்களுக்கு அவர்கள் கேட்கின்ற  புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு நூலகத்தையும் பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283625&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2283648) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Kannada