PIB Backgrounder
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம்
प्रविष्टि तिथि:
10 JUL 2026 5:51PM by PIB Chennai
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதிலும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதிலும் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கடந்த 2014-15 எத்தனால் விநியோக ஆண்டு முதல், இத்திட்டம் வெறும் கொள்கை ஆவணமாக இல்லாமல் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம் 1.97 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. சுமார் 316 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி தவிர்க்கப்பட்டுள்ளதுடன், 952 லட்சம் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது. 1.66 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக மட்டுமின்றி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பங்களிப்பவர்களாகவும் மாறியுள்ளனர்.
எத்தனால் கொள்கை என்பது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல, இது கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட பயணமாகும். கடந்த 2001-ம் ஆண்டு எத்தனால் கலப்புக்கான முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு, 2004-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2006-ல் ஐந்து சதவீத எத்தனால் கலப்பு பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கரும்பு மூலம் மட்டுமே போதிய எத்தனால் உற்பத்தி செய்ய முடியாத சூழல் நிலவியதால், 2014 வரை கலப்பு அளவு 1.5 சதவீதமாகவே இருந்தது. 2018-ம் ஆண்டு தேசிய உயிரி எரிபொருள் கொள்கை மூலம் சோளம், உபரி தானியங்கள் போன்றவற்றிலிருந்தும் எத்தனால் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் உற்பத்தி அதிகரித்தது. 2021-ல் நிதி ஆயோக் இதற்கான விரிவான வழிகாட்டுதலை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, எத்தனால் விநியோகம் 2020-21-ல் 8.1 சதவீதத்தில் இருந்து, 2025-26 காலக்கட்டத்தில் 20 சதவீத இலக்கை எட்டியுள்ளது.
வாகனங்களின் இயக்கத்தன்மை குறித்து எழும் சந்தேகங்களுக்கு அறிவியல் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் நிலையங்களில் தூய பெட்ரோல், பத்து சதவீத கலப்பு, இருபது சதவீத கலப்பு என தனித்தனியாக வழங்குவது உள்கட்டமைப்புச் செலவுகளைப் பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, வாகனத் தயாரிப்பாளர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்திய பிறகே இருபது சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டது. என்ஜின் ஆயுள், ரப்பர் பாகங்கள், உமிழ்வு அளவுகள் ஆகியவை பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. எத்தனால் கலந்த எரிபொருள் என்ஜின் எரிதிறனை மேம்படுத்துகிறது. மேலும் இது கார்பன் உமிழ்வை நாற்பது சதவீதம் வரை குறைக்கிறது. இந்த பெட்ரோல் பழைய வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் தவறானது என்று மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகனப் பராமரிப்புத் தரவுகள் நிரூபித்துள்ளன.
எத்தனால் கலந்த பெட்ரோல் விலை என்பது உலகளாவிய கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தது அல்ல. விவசாயிகளுக்கு எத்தனாலுக்கான நியாயமான விலை கிடைப்பதை அரசு உறுதி செய்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயரும்போது மட்டுமே எத்தனால் மலிவான மாற்று எரிபொருளாக அமையும். இருப்பினும், எத்தனால் கலப்பால் நாட்டின் எரிபொருள் தேவையில் இருபது சதவீதம் உள்நாட்டிலேயே பூர்த்தியாவதால், உலகளாவிய விலை ஏற்றங்கள், போர்கள் அல்லது கப்பல் போக்குவரத்துத் தடைபடுவதால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து இந்தியா பாதுகாக்கப்படுகிறது. கடந்த 2022 ஜூன் முதல் 2026 ஜூன் வரையிலான காலத்தில் அண்டை நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல் விலை பெருமளவு உயர்ந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல் விலை வெறும் 5.58 சதவீதம் மட்டுமே உயர்ந்தது இதற்குச் சான்றாகும். அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே எத்தனால் கலப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் தற்சார்பு மற்றும் நிலையான, எரிசக்தி பாதுகாப்பைக் கொண்ட எதிர்காலத்திற்கான முக்கியப் படியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283376®=3&lang=1
***
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2283426)
आगंतुक पटल : 24