பிரதமர் அலுவலகம்
கொல்கத்தாவில் ஐ.என்.எஸ் அக்ரே, ஐ.என்.எஸ் துணகிரி மற்றும் ஐ.என்.எஸ் சன்ஷோதக் ஆகியவற்றின் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
21 JUN 2026 11:37AM by PIB Chennai
மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களே, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அவர்களே, கடற்படை தளபதி கிருஷ்ணா சுவாமிநாதன் அவர்களே, இங்கே வருகை தந்துள்ள மதிப்பிற்குரிய பெரியோர்களே மற்றும் நண்பர்களே!
இன்றைய தினம் பல வழிகளில் சிறப்பு வாய்ந்தது. உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்த நன்னாளில், வங்காளத்தின் இந்த மகத்தான நிலத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவிற்கு புதிய திசையைக் காட்டிய, இந்தியாவின் மறுமலர்ச்சியை விரைவுபடுத்திய, மற்றும் பல நூற்றாண்டுகளாக கடல் வழியாக இந்தியாவை உலகத்தோடு இணைத்த பூமி இது. இன்று, இதே மண்ணில், தன்னிறைவு இந்தியா, பாதுகாப்பான இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. சற்று முன்புதான், ஐ.என்.எஸ் அக்ரே, ஐ.என்.எஸ் துணகிரி மற்றும் ஐ.என்.எஸ் சன்ஷோதக் ஆகியவை இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. தற்செயலாக, ஜூன் 21-ம் தேதி உலக நீரியல் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், இந்தியாவின் அதிநவீன நீரியல் ஆய்வு கப்பலான ஐ.என்.எஸ் சன்ஷோதக் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க தற்செயல் நிகழ்வாகும். இந்தியக் கடற்படைக்கும், இந்தப் பணிகளுடன் தொடர்புடைய அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் எனது அன்பிற்குரிய நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
கடல்சார் திறன் இல்லாமல் எந்தவொரு நாடும் பெரும் சக்தியாக உருவெடுக்க முடியாது என்பதற்கு உலகமே சாட்சியாக இருக்கிறது. வளர்ச்சி கடலோடு பிணைந்துள்ளது, பாதுகாப்பு கடலோடு பிணைந்துள்ளது, செழுமை கடலோடு பிணைந்துள்ளது. இன்று, உலகின் பெரும்பாலான வர்த்தகம் கடல் வழித்தடங்கள் மூலமே நடைபெறுகிறது. உலகை இணைக்கும் பிரம்மாண்டமான தரவு வலைப்பின்னல்கள் கடலுக்கு அடியில் கடந்து செல்கின்றன. வரும் காலங்களில், மிக முக்கியமான கனிமங்கள், ஆழ்கடல் வளங்கள் மற்றும் புதிய எரிசக்தி ஆதாரங்களும் கடலோடு தொடர்புடையதாக இருக்கும். எனவே, ஒரு நாட்டின் கடல்சார் வலிமை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அதன் பொருளாதார மற்றும் உத்திசார்ந்த செல்வாக்கு அமையும். இந்த எதார்த்தத்தை இந்தியா நன்கு புரிந்துகொண்டுள்ளது. அதற்காக இந்தியா தன்னைத் தயார்படுத்தி வருகிறது. எங்கள் திறன் என்ன? எங்கள் சாமர்த்தியம் என்ன? என்பதற்கு இன்றைய இந்த நிகழ்வே சான்றாகும்.
நண்பர்களே,
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐ.என்.எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தபோது, இந்தியா தனது கடல்சார் வலிமையின் புதிய அத்தியாயத்தைப் பிரகடனப்படுத்தியது. அது உலகிற்கு முன்னால் நமது திறனை வெளிப்படுத்திய தருணம். ஐ.என்.எஸ் விக்ராந்திலிருந்து இன்றைய நாள் வரையிலான பயணம் என்பது வெறும் புதிய போர்க்கப்பல்களைப் பற்றியது மட்டுமல்ல; இது இந்தியாவின் வளர்ந்து வரும் தற்சார்பின் பயணமும் கூட. இன்று, ஐ.என்.எஸ் அக்ரே, ஐ.என்.எஸ் துணகிரி மற்றும் ஐ.என்.எஸ் சன்ஷோதக் ஆகியவை அந்தப் பயணத்திற்கு புதிய வேகத்தை அளித்து வருகின்றன. இந்த மூன்று கப்பல்களும் இந்தியாவின் மூன்று முக்கிய உறுதிமொழிகளின் சின்னங்களாகும். இவை இந்தியாவில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வடிவமைப்புகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. இவற்றின் கட்டுமானத்தில் இந்தியத் தொழில்துறைகளின் திறமை, இந்தியப் பொறியாளர்களின் சாமர்த்தியம் மற்றும் இந்தியத் தொழிலாளர்களின் கடின உழைப்பு ஆகியவை அடங்கியுள்ளன. இதுவே புதிய இந்தியாவின் மிகப்பெரிய பலமாகும்.
நண்பர்களே,
இன்று, பாதுகாப்புத் துறையில் இந்தியா வெறும் கொள்முதல் செய்பவராக மட்டும் இருக்க விரும்பவில்லை. நமது ராணுவ வலிமையை உலகின் ஒரு சந்தையாகச் சுருக்கிவிட முடியாது. நமது வலிமையின் அடையாளம் சந்தையாக இருப்பதில் இல்லை, நமது தன்னிறைவில்தான் உள்ளது. இந்தியா ஒரு உற்பத்தியாளராக மாற விரும்புகிறது. நாம் எந்த நாளில் உற்பத்தியாளர்களாக மாறுகிறோமோ, அன்றே நாம் உறுதியான சக்தியாகவும் மாறுவோம். நாம் இந்த திசையில் வேகமாக முன்னேறி வருகிறோம். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பொருள், ஏறக்குறைய சில வாரங்களுக்கு ஒருமுறை, இந்தியக் கடற்படை புதிய வலிமையைப் பெற்றுள்ளது. தற்போதும், 45 முக்கிய கடற்படை தளங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல; இது இந்தியாவின் தொழில்துறை திறமைக்குச் சான்றாகும். இது இந்தியாவின் எதிர்காலத்திற்கான சமிக்ஞையாகும்.
நண்பர்களே,
வரும் ஆண்டுகளில், இந்தியாவின் கடல்சார் துறை லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது. அதனால்தான், கடல்சார் துறையை நாம் தனிப்பட்ட துறையாகப் பார்க்கவில்லை. இதை வளர்ச்சியடைந்த இந்தியாவின் வேலைவாய்ப்பு இயந்திரமாகவே நாம் பார்க்கிறோம். ஒரு நவீன கப்பலுக்கு நூற்றுக்கணக்கான டன் எஃகு, மின்னணு சாதனங்கள், இயந்திரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உதிரிபாகங்கள் தேவைப்படுகின்றன. இவை அனைத்தின் பின்னணியில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பணியாற்றுகின்றன - அதாவது ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இன்று அர்பணிக்கப்பட்ட இந்த மூன்று கப்பல்களின் கட்டுமானத்தில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்களித்துள்ளன. இந்த 200 நிறுவனங்களிலும், இந்தச் சிறு தொழில்களிலும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் பிரமாண்டத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடியும்.
நண்பர்களே,
இந்தியா கடல்சார் வலிமையின் அடுத்த கட்டத்திற்கு நுழைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, கப்பல் கட்டும் துறைக்கான புதிய தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா முன்னோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், பல கொள்கை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கப்பல் கட்டுதல், கப்பல் பழுது பார்த்தல், கப்பல்களை மறுசுழற்சி செய்தல் மற்றும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் செயல்பாடுகள் ஆகியவை இப்போது ஒரு பெரிய தேசிய இயக்கத்தின் அங்கமாகப் பார்க்கப்படுகின்றன.
நண்பர்களே,
கப்பல் போக்குவரத்து துறைக்காக அறிவிக்கப்பட்ட 70,000 கோடி ரூபாய் ஊக்கத்தொகை தொகுப்பு என்பது வெறும் பொருளாதார முடிவு மட்டுமல்ல. இது இந்தியாவின் கடல்சார் எதிர்காலத்தின் மீதான முதலீடு. இது இந்தியாவின் தொழில்துறை விரிவாக்கத்திற்கான முதலீடு.
நண்பர்களே,
இன்று, இந்தியா தனது ஒட்டுமொத்த கடல்சார் சூழலமைப்பையும் வலுப்படுத்தி வருகிறது. இதனால்தான் இந்தியா தனது துறைமுகங்களை நவீனப்படுத்துகிறது, புதிய திறன்களை உருவாக்குகிறது, புதிய இணைப்பு வசதிகளைக் கட்டமைக்கிறது, நதி நீர்வழிகளை விரிவுபடுத்துகிறது மற்றும் பன்முக போக்குவரத்து தளவாட வலைப்பின்னலை மேம்படுத்துகிறது. சாகர்மாலா போன்ற திட்டங்கள் இந்த விரிவான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும். இது வர்த்தகச் செலவைக் குறைப்பதோடு, தொழில்களுக்குப் புதிய வேகத்தை அளித்து, கடலோரப் பகுதிகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
நண்பர்களே,
இந்தியா உலகின் மிகப்பெரிய பாதுகாப்புத் தளவாட இறக்குமதியாளர்களில் ஒன்றாக அறியப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இந்தச் சார்புநிலை, உத்திசார் மற்றும் பாதுகாப்பு ரீதியான சவால்களை உருவாக்கியது. 2014-ல் அரசு அமைக்கப்பட்ட பிறகு, இந்தச் சூழலை மாற்ற நாங்கள் உறுதிபூண்டோம். முக்கிய கொள்கை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன, மேலும் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, இன்று பாதுகாப்பு வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் புதிய சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. 2014-ம் ஆண்டு வரை, நாட்டின் மொத்த பாதுகாப்பு உற்பத்தி சுமார் 40,000 கோடி ரூபாயாக இருந்தது. இன்று, அது சுமார் 1,80,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
ஒருபுறம், நாட்டில் பாதுகாப்பு உற்பத்தி வேகமாக வளர்ந்துள்ளது, மறுபுறம், நமது பாதுகாப்பு ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு வரை, இந்தியா சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது. இன்று, இந்த எண்ணிக்கை சுமார் 40,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இப்போது உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சென்றடைகின்றன.
நண்பர்களே
தற்சார்பை நோக்கிய பயணத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. எனது பார்வையில், இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம், கொள்கைகள் தெளிவாக இருக்கும்போதும், திசை சரியாக இருக்கும்போதும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போதும், நாட்டில் இத்தகைய பிரமாண்டமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது.
நண்பர்களே,
கடல்சார் பாரம்பரியத்தைப் பற்றி நாம் பேசும்போது, வங்காளத்தின் பெயர் இயற்கையாகவே நினைவுக்கு வருகிறது. இந்தியாவின் கடல்சார் தொடர்புகளில் இந்த நிலம் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. ஹூக்ளி நதியின் நீரோட்டங்கள், வரலாறு மாற்றியமைக்கப்படுவதையும், வர்த்தகத்தின் புதிய அத்தியாயங்கள் எழுதப்படுவதையும், வளர்ச்சியின் புதிய பயணங்கள் விரிவடைவதையும் கண்டுள்ளன. தற்செயலாக, இந்தத் துறைமுகம் வங்காளத்தின் மைந்தனும், நாட்டின் முதல் தொழில் துறை அமைச்சருமான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரால் அமைந்துள்ளது.
நண்பர்களே,
இந்தியா நோக்கிச் சென்று கொண்டிருக்கும் புதிய கடல்சார் சகாப்தத்தில், மேற்கு வங்காளத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். இங்கே துறைமுகத் திறன், தொழில்துறை திறன், அறிவுசார் திறன், திறமை மற்றும் கடல்சார் பொருளாதாரத்தை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் உள்ளது. வரும் ஆண்டுகளில், இந்தியாவின் நீலப் பொருளாதாரம் கடல்சார் உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் கடலோர மேம்பாடு ஆகியவற்றிற்கான ஒரு முக்கிய மையமாக மேற்கு வங்காளம் திகழும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.
நண்பர்களே,
இந்தியா எப்போதும் கடலை ஒத்துழைப்புக்கான ஒரு ஊடகமாகவே கருதி வருகிறது. ஆனால், அமைதியைப் பாதுகாக்க வலிமையும் சம அளவில் தேவை என்பதை இந்தியா நன்கு அறியும். செழுமையைப் பாதுகாக்க பாதுகாப்பு அவசியம். எதிர்காலத்தைக் கட்டமைக்க தன்னிறைவு இன்றியமையாதது. இன்று, ஐ.என்.எஸ் அக்ரே, ஐ.என்.எஸ் துணகிரி மற்றும் ஐ.என்.எஸ் சன்ஷோதக் ஆகியவை இந்த உணர்வின் அடையாளங்களாக இந்தியக் கடற்படையில் இணைந்துள்ளன. இவை, 21-ம் நூற்றாண்டில் தனது வலிமையை உணர்ந்து, சொந்தத் திறன்களின் மீது நம்பிக்கை வைத்து, புதிய நம்பிக்கையுடனும், வேகத்துடனும், ஆற்றலுடனும், உறுதியுடனும் உலகிற்கு முன்னால் முன்னேறிச் செல்லும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
நண்பர்களே,
இந்த நன்னாளில், கடற்படையில் உள்ள எனது அனைத்துத் தோழர்களுக்கும், எனது சக குடிமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை, இந்தியக் கடற்படைக்கும், அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் வழங்கப்பட்டது..
(Release ID: 2275975)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282877)
आगंतुक पटल : 34
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam