கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்குவங்க மாநிலத்துடன் இணைந்து 'பாரத கேசரி' டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்ததின விழாவை மத்திய கலாச்சார அமைச்சகம் கொண்டாடுகிறது

प्रविष्टि तिथि: 08 JUL 2026 6:33PM by PIB Chennai

'பாரத கேசரி' டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்ததின  விழாவை முன்னிட்டு, இரண்டு ஆண்டுகள் நடைபெறும் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய கலாச்சார அமைச்சகம் மேற்குவங்க மாநில அரசுடன் இணைந்து, 2026 ஜூலை 6 அன்று, கொல்கத்தாவின் மிலன் மேளா பிரங்கனில், ஒரு சிறப்பு நினைவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மத்திய கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மேற்குவங்க மாநில முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, அம்மாநிலத்  தலைமைச் செயலாளர் திரு மனோஜ் அகர்வால், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் அகர்வால், உள்ளிட்ட பிற முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்தியாவின் அரசியல், கலாச்சார, கல்வி, தொழில்துறை சூழலை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய, தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல்வாதி, கல்வியாளர், நாடாளுமன்ற உறுப்பினர், தேசியவாதத் தலைவரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின், நீடித்த பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், அவரது 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் நாடு தழுவிய கொண்டாட்டங்களை மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்திருந்தது.

மத்திய கலாச்சார அமைச்சகம், மேற்குவங்க மாநில அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவு நிகழ்ச்சிகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில், ஜூலை 6 அன்று 3 முக்கிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மிலன் மேளா பிரங்கனில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை, பாரம்பரியத்தை விளக்கும் சிறப்பு கண்காட்சி ஒன்றுக்கு உயற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரிய புகைப்படங்கள், ஆவணக் காப்பக ஆவணங்கள், தனிப்பட்ட பொருட்கள், நவீன ஒலி - ஒளி காட்சிகள் மூலம், அவரது தனிப்பட்ட பயணம், கொள்கை ரீதியான தொலைநோக்கு பார்வை, கல்விச் சீர்திருத்தங்கள், இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள், தொழில்துறை வளர்ச்சியை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பு ஆகியவை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.

பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள், இந்த வரலாற்று நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் வகையில், கண்காட்சி கூடுதலாக ஒரு நாள் திறந்திருந்தது. சனத் ராய் சவுத்ரி இன்ஸ்டிடியூஷன் ஃபார் கேர்ள்ஸ், ஏ.ஐ.டபிள்யூ.சி புனியாதி வித்யாபீத் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சுரா கன்யா உயர்நிலைப் பள்ளி, பெலேகாட்டா தேஷ்பந்து உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த வரலாற்றுத் தகவல்களைக் கண்டுகளித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282548&reg=3&lang=1

(Release ID: 2282548)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2282633) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी