பிரதமர் அலுவலகம்
நார்வே பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் விடுத்த பத்திரிகை அறிக்கையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
18 MAY 2026 5:37PM by PIB Chennai
மதிப்பிற்குரிய நார்வே பிரதமர் அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடகத்துறையைச் சேர்ந்த நண்பர்களே,
வணக்கம்!
தங்களின் கனிவான வரவேற்புக்கு நன்றி
நார்வே நாட்டிற்கு வருகை தந்துள்ளதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அழகான நாடு, இயற்கையும் மனித முன்னேற்றமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று இணக்கமாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முதலாவதாக, எனக்கு அளிக்கப்பட்ட இந்த அன்பான மற்றும் கனிவான வரவேற்பிற்காக நார்வே பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நேற்றுதான் நார்வே நாட்டின் மிக முக்கியமான 'அரசியலமைப்பு தினம்' கொண்டாடப்பட்டது. இந்த நல்ல தருணத்தில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சார்பில், துடிப்பான மற்றும் வலிமையான ஜனநாயக நாடான நார்வேயின் மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கடந்த ஆண்டே நார்வேவிற்கு வரவிருந்தேன், ஆனால் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த இக்கட்டான காலக்கட்டத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக நார்வே நாடு இந்தியாவுடன் உறுதியாக நின்றது; இது நமது நட்புறவின் வலிமையைக் காட்டுகிறது. இன்று நான் நார்வே நாட்டிற்கு வந்துள்ள இந்நேரத்தில், அன்று நீங்கள் அளித்த ஆதரவிற்கும் ஒற்றுமைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று உலகம் ஒரு நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையைக் கடந்து கொண்டிருக்கிறது. உக்ரைனாக இருந்தாலும் சரி, அல்லது மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, உலகின் பல பகுதிகள் தொடர்ந்து மோதல்களைச் சந்தித்து வருகின்றன. இத்தகையதொரு சூழலில், இந்தியாவும் ஐரோப்பாவும் தங்களது உறவில் ஒரு புதிய பொற்காலத்திற்குள் அடி எடுத்து வைக்கின்றன.
கடந்த ஆண்டு, இந்தியாவும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தின. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் நார்வேவிற்கும் இடையே பொதுவான வளர்ச்சியையும் செழிப்பையும் உறுதி செய்வதற்கான ஒரு திட்டவடிவமாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்டு வருவதும், 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாக்குறுதிகளை உண்மையான பலன்களாக மாற்றுவதற்காக, இன்று இரு தரப்பிலும் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
நண்பர்களே,
இன்று, நாம் இந்தியா - நார்வே உறவை ஒரு 'பசுமை உத்திசார் பங்களிப்பாக' அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறோம். இதன் மூலம், இந்தியாவின் சந்தை அளவு, வேகம் மற்றும் திறமையோடு, நார்வேயின் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டை இணைத்து - தூய்மையான எரிசக்தி முதல் காலநிலை சகிப்புத்தன்மை வரையிலும், கடல்சார் பொருளாதாரம் முதல் பசுமை எரிசக்தி கப்பல் போக்குவரத்து வரையிலும் உள்ள பல்வேறு துறைகளில் நமது நிறுவனங்கள் உலகளாவிய தீர்வுகளை உருவாக்கும்.
நண்பர்களே,
ஆராய்ச்சி, கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளும் நமது உறவின் வலுவான தூண்களாக உருவெடுத்து வருகின்றன. இன்று, நிலைத்தன்மை, கடல் எரிசக்தி, புவியியல் மற்றும் ஆரோக்கியம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.
இரண்டு பெரிய கடல்சார் நாடுகள் என்ற முறையில், கடல்சார் பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாம் இணைந்து செயல்படுவோம். இன்று, நாம் ஒரு முக்கோண வளர்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்துள்ளோம். இனி, இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புத் திட்டங்களின் மூலம், 'வளரும் நாடுகள் நாடுகளின் மனித வள மேம்பாட்டிற்கு நாம் இருவரும் இணைந்து பங்களிப்போம்.
நண்பர்களே,
இந்தியாவும் நார்வேயும் விதிகளுக்கு உட்பட்ட உலகளாவிய ஒழுங்கு, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளன. எந்தவொரு பிரச்சினையையும் ராணுவ மோதல்கள் மூலம் தீர்க்க முடியாது என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். உக்ரைனாக இருந்தாலும் சரி, அல்லது மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அமைதியை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம், தொடர்ந்து ஆதரவளிப்போம்.
வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள, உலகளாவிய அமைப்புகளில் சீர்திருத்தம் செய்வது அவசியம் என்பதிலும் நாங்கள் உடன்படுகிறோம். மேலும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் முற்றிலுமாக ஒழிப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும்.
மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே,
ஆர்க்டிக் பகுதி முதல் விண்வெளி வரையிலும், பசுமை எரிசக்தி கப்பல் போக்குவரத்து முதல் கடல்சார் பொருளாதாரம் வரையிலும், மற்றும் எரிசக்தி பாதுகாப்பு முதல் உணவுப் பாதுகாப்பு வரையிலும் நமது ஒத்துழைப்பு புதிய எல்லைகளை எட்டி வருகிறது. நமது பசுமை தொழில்நுட்பத்தில் ஒத்துழைத்து செயல்படுவதன் மூலம் நம்பகமான, எதிர்கால நோக்குடைய மற்றும் நீண்டகாலப் பங்களிப்பின் புதிய அத்தியாயத்தை நாம் எழுதுவோம்.
மிக்க நன்றி.
----
(Release ID: 2262396)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2279812)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam