PIB Backgrounder
azadi ka amrit mahotsav

பிரதமரின் கிசான் திட்டத்தின் 23-வது தவணைத் தொகை விடுவிப்பு - 9.44 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,880 கோடி நேரடிப் பணப் பரிமாற்றம்

प्रविष्टि तिथि: 20 JUN 2026 6:35PM by PIB Chennai

பிஎம் கிசான் எனப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் 23-வது தவணையாக ரூ.18,880 கோடிக்கும் அதிகமான தொகையை பிரதமர் திரு நரேந்திர மோடி விடுவித்துள்ளார். இந்த நிதி விடுவிப்பு குறித்த அறிவிப்பு, மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் இன்று (ஜூன் 20, 2026) வெளியிடப்பட்டது . இந்தத் தவணையின் கீழ் 9.44 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நிதியுதவி பெற்றுள்ளனர். இவர்களில் 2.18 கோடி பேர் பெண் விவசாயிகள் ஆவர். ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த நிகழ்வில் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டனர். 2019-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ரூ. 4.46 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றாகும்.

பிஎம்-கிசான் என்பது 2019 பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட ஒரு மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாகும். இத்திட்டத்தின் நோக்கம், நாடு முழுவதும் சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உறுதியான வருமான ஆதரவை வழங்குவதாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவியைப் பெறுகிறது. இது, ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடிப் பணப் பரிமாற்ற முறை மூலம் ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளாக வழங்கப்படுகிறது .

இதுவரை, நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு 23 தவணைகளாக ரூ.4.46 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் நிலப் பதிவேடுகளைப் பதிவு செய்தவுடன் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் பலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைத்து, இ-கேஒய்சி சரிபார்ப்பையும் முடிக்க வேண்டும். விவசாயிகளின் வருமானப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் , 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், விவசாய உள்ளீடுகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முயல்கிறது. இது பயிர்களின் ஆரோக்கியத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த உதவுகிறது. நேரடி நிதியுதவி வழங்குவது, விவசாயிகள் முறைசாரா கடன் ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் , விவசாய நடவடிக்கைகளின் தொடர்ச்சியை ஆதரிக்கவும் உதவுகிறது.

இந்தியாவின் கிராமங்களில் உள்ள விவசாயகளுக்கு, இது வெறும் நிதி ஆதரவை மட்டும் வழங்காமல், நம்பிக்கையையும் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு உணர்வையும் அளித்து, ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275744&reg=48&lang=2

***

SS/PLM/PD


(रिलीज़ आईडी: 2279744) आगंतुक पटल : 46
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati